? நம்மூர் இயக்குநர்கள் பிறமொழி ஹீரோக்களை வரிசையாக இயக்கும் காலம் இது. தமிழ் இயக்குநர் ஒருவர் ஹாலிவுட் நடிகரை இயக்கலாம் என்றால் உங்களின் சாய்ஸ் எந்த இயக்குநர் - நடிகராக இருக்கும்?
Daniel Craig. ஜேம்ஸ் பாண்ட் வகையறாவான இவரை டாடா சுமோ சாவியையும் கையில் கொடுத்து டைரக்டர் ஹரியை தூத்துக்குடி லொகேஷனுக்குக் கூட்டிப் போய் மேலும் மேலும் சிங்கம் பார்ட்டுகளாக சுட்டுத் தள்ளலாம்.
jerry46327240
நம்ம ராக் டுவைன் ஜான்சனை வைத்து பா.இரஞ்சித் ‘சார்பட்டா 2’ எடுக்கலாம். மோர்கன் ப்ரிமேன் வாத்தியாராகவும் ஜானி டெப் ரோஸாகவும் நடித்தால் ஹாலிவுட்டிலும் மாஸ் காட்டலாம்!
San8416

அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ஜார்ஜ் குளூனி, வாக்கின் ஃபினிக்ஸ், டாம் குரூஸ், லியனார்டோ டிகாப்ரியோ, ஜானி டெப் போன்ற நடிகர்களை வைத்து மணிரத்னம் ‘The Ponniyin Selvan - The Godfather of Godfathers' என்ற படத்தை இயக்கலாம்.
SriRam_M_20
இயக்குநர் வாசு அவர்கள் வேனம் ஹீரோ ‘டாம் ஹார்டி'யை வைத்து சின்னதம்பி படத்தை ஹாலிவுட்டில் எடுக்கலாம். படத்தோட டைட்டில் ‘யங்கர் பிரதர்.'
IamJeevagan
The Matrix படத்தில் சிஸ்டத்தை சரி செய்யும் கெட்டப்பில் நடித்த கீனு ரீவ்ஸ் நடிக்க, அரசியலில் சிஸ்டத்தை சரி செய்ய நினைத்த ரஜினிகாந்த் அதன் தமிழ் ரீமேக்கைத் தன் முதல் படமாக டைரக்ட் பண்ணி சிகரத்தை எட்டலாம்.
kirachand5
இயக்குநர் ஹரி, ஜாக்கிசானை வைத்து, வரிசையா படம் எடுக்கலாம். வேகம் தாங்காமல் ஸ்கிரீன் கிழிந்து தொங்கும்.
KRavikumar39

ஹீரோவைத்தான் களமிறக்கணுமா? ஜூலியா ராபர்ட்ஸை வைத்து ‘அறம்’ படம் எடுத்த இயக்குநர் கோபி நயினார் ஒரு படம் எடுக்கலாம்!
h_umarfarook
டாம் ஹேங்க்ஸ். ஹலிதா ஷமீம் Oru fine feel good movie.
Itz_Dineshh
காஞ்சனா 4. ராகவா லாரன்ஸ் வந்து ஜானி டெப்பை வச்சு ஒரு காமெடி ஹாரர் படம் எடுத்தா சூப்பரா இருக்கும்.
arunraj08823434
‘ஹேங் ஓவர்' குழுவை முழுமையாகப் பயன்படுத்தி ‘பஞ்ச தந்திரம் 2' படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கலாம்!
மணிமேகலை பாலு
பா.இரஞ்சித் மோர்கன் ஃப்ரீமேனை வைத்து கறுப்பர் இன விடுதலைக்குப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் பயோகிராபி எடுக்கலாம்.
ச.பிரபு
? தமிழ்நாட்டுத்தலைவர்கள் சுயசரிதை எழுதினால் யார் சுயசரிதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?
குஷ்பு: ஆயிரம் விளக்கில் தோற்ற ஆயிரத்தில் ஒருத்தி!
Kirachand
எல்.முருகன்: தோற்றாலும் ஜெயிப்பேன்டா!
jerry46327240
கமல்ஹாசன்: மக்கள் ஒதுக்கிய மய்யம்
ParveenF7

தமிழருவி மணியன்: முற்றுப்புள்ளியா... கமாவா..?!
LAKSHMANAN_KL
இ.பி.எஸ்: பிறந்தேன் தவழ்ந்தேன் உயர்ந்தேன்
NedumaranJ
சசிகலா: அரசியல் பிழைத்தோர்க்கு ஆடியோ கூற்றாகும்
urs_venbaa
சீமான்: இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
SowThanishka
கமல்: தமிற்த சூரனிற்வீதூர் மண்
(புரியலைல்ல... தட் இஸ் கமல்!)
ஆர்.பிரசன்னா
அன்புமணி: அப்பா கிழித்த கோடுகள்!
நா.இரவீந்திரன்
? ஆண்கள் பெண்களை வர்ணிப்பதுபோல் பெண்கள் ஆண்களை வர்ணிப்பதில்லையே ஏன்?
‘மானே தேனே மயிலே குயிலே’ன்னு ஆண்கள் பெண்களை வர்ணித்தால்... அது அழகுக்கு அழகு சேர்க்கும். ‘காளையே சிங்கமே கொம்பனே’ என்று பெண்கள் ஆண்களை வர்ணித்தால்...கேட்க சகிக்காமல் இதுக்கு சும்மா இருந்தாலே போதும்னு தோணும்.
Kirachand4
அவங்க வர்ணிக்கலாம்னு நெனைக்கிறதுக்கு முன்னாடியே ஆண்கள் வழிஞ்சிடறாங்களே... அப்புறம் எங்கே..?
ParveenF7
இல்லையே... குழந்தைகளைத் திட்டுவதுபோல சாடை மாடையாக வர்ணிக்கதான் செய்கிறார்கள், ‘அறிவு கெட்ட முண்டமே, உருப்படாத தண்டமே'னு..!
LAKSHMANAN_KL
சிங்கங்கள் சிறப்பை சிங்கிள் லைனில் சொல்ல முடியாதே!
‘‘என்னங்க அங்க சத்தம்?’’
‘‘சும்மா பேசிக்கிட்டு இருக்கேன்மா!’’
pbukrish
கழுவி ஊத்துனாலே ‘கவித... கவித’ன்னு ஃபீல் பண்ணுவாங்க. இதுல வர்ணிச்சா தல கால் புரியாம ஆடத்தொடங்கிடு வாங்களோ என்ற அச்சம்கூட காரணமாக இருக்கலாம்.
PG911_twitz
? ‘நாம் ஒண்ணு நினைச்சா...’ சொலவடைக்கு உங்கள் வாழ்வில் பொருத்தமான ஜாலி சம்பவம் சொல்லுங்க...
2000 ஆண்டுல கம்ப்யூட்டர் ஃபீல்டு கொஞ்சம் டெளனா இருந்தது. கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுத்த பசங்களை, எலக்ட் ரானிக்ஸ் எடுத்த நாங்கெல்லாம் செம ஓட்டு ஓட்டுவோம். காலேஜ் முடிச்சப்புறம் அவங்கெல்லாம் நல்ல வேலையில் செட்டில் ஆகிட் டாங்க. நாங்கதான் மண்டை காய்ஞ்சிட்டோம்.
RamuvelK=
கறி விருந்துக்கு முதல் பந்தியில் உட்கார்ந்தா தப்பா நினைப்பாங்கன்னு அடுத்த பந்தியில் உட்கார்ந்தா மட்டன் இல்லை. அந்த வேதனை இருக்கே வேதனை!
urs_venbaa
பெரிய ஆட்கள், நவரசங்களையும் கலந்து பின்னிப் பெடலெடுத்து இருப்பார்கள் என்று பார்த்தால் உப்புச்சப்பில்லாத பத்திய ரசம் போல் இருப்பது!
balebalu
உங்களுக்கு நல்லா சட்டையே செலக்ட் பண்ணத் தெரியல. நான் கூட வந்து நல்ல சட்டையா செலக்ட் பண்ணித் தாறேன்னு சொல்லி, கூட வரும் மனைவி, நமக்கு சுமாரான ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு, கூட இலவச இணைப்பாக அதிக விலையில் அவங்களுக்கு சேலை எடுத்துக்கொள்வது.
amuduarattai
பூரி கேட்டால் உப்புமா தான் கிடைக்குது. இதுல நாம் எதை நினைக்கிறது பாஸ்!
அவ்வை கே.
சஞ்சீவிபாரதி
அது 2004-ம் ஆண்டு, சென்னை காசிமேட்டில் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படப்பிடிப்பு. கல்லூரிக் காலத்தில் குரூப் ஆர்ட்டிஸ்டாக, பாரதிராஜா மேடையில் பேச, நடிகர் மாதவன் கூட்டத்தை கைதட்டிக் குரல் எழுப்பக் கூறும் காட்சியில் நடித்தேன். இன்றுவரை படம் பார்க்கும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தில் என்னைத் தேடுகிறேன். ம்ஹும்... காணமுடியவில்லையே!
வீ.வைகை சுரேஷ்
கல்லூரியில் படிக்கும் காலத்தில், ‘வாழ்க்கையில் இனி படிக்கவே கூடாது’ என்று நினைப்பதுண்டு. ஆனால் மாணவராக இருந்து படித்ததை விட, இன்று கல்லூரி உதவிப் பேராசிரியராக நாள்தோறும் அதிகம் படிக்க வேண்டி யிருக்கிறது.
எம்.விக்னேஷ்
? பணம் என்கிற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகம் எப்படி இருந்திருக்கும்?
சுவிட்சர்லாந்து (ஸ்விஸ் பேங்க்) எனும் நாடு இருப்பதே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.
amUzhavan
வாசகர் மேடையில் பிரசுரமாகும் பதில்களுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும்.
chennappan10
கோயில்களில் சிறப்பு தரிசனம் எதுவும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரிசனமாக இருந்திருக்கும்.
SriRam_M_20
கிழிஞ்ச நோட்டை, மத்த நோட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
kalagowri91
தங்க நாணயங்களில் ‘சிப்' பொருத்தப்படும் - எஸ்.வி.சேகர்!
San8416
மோடி இன்னும் 10 வருஷம் ஆட்சி பண்ணுனா, நம்ம நாட்டோட மொத்தப் பணமும் காலி ஆகிடும். அப்புறம் அதை நாம நேர்லயே அனுபவிச்சுத் தெரிஞ்சுக்குவோம்.
RamuvelK
அடுத்து என்ன கலர்ல நோட்டு அச்சிட வேண்டி யிருக்குமோன்னு அரசு கவலைப்படத் தேவையில்லை.
balebalu
நெல்லைக்காரர்கள் கோவில்பட்டிக்காரர்களிடம் அல்வாவைக் கொடுத்துவிட்டு, அதற்கு மாற்றாகக் கடலைமிட்டாயை வாங்கிச் சென்றிருப்பார்கள்.
வேலிடுபட்டி நவநீ
உலகம் எப்படி இருந்திருக்குமோ தெரியாது. ஆனா அக்கவுன்ட்ல 15 லட்சம் ரூபாய் போட்டு விடறேன்னு சொல்லி யாரும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
‘லொள்ளு' மாணிக்ஸ்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
01 ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று வாழ்க்கையில் எப்போது உணர்ந்தீர்கள்?
02 ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி மூவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
03 மிதாஸ் போல் தொட்டதெல்லாம் பொன் ஆகும் சக்தி நமக்குக் கிடைத்தால் வாழ்க்கையில் என்னென்ன காமெடிகள் நடக்கும்?
04 ரஜினியும் மோடியும் கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’
நிகழ்ச்சியில் அடுத்து யார் கலந்துகொண்டால் செமையா இருக்கும், ஏன்?
05 யாராவது ஒரு இயக்குநரிடம், ‘ஐயா, இதை உங்க படத்தில் முதல்ல நிறுத்துங்க’ என்று கோரிக்கை வைப்பது என்றால் எந்த இயக்குநரிடம் என்ன சொல்வீர்கள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com