
வேக்சின் கார்டு. எந்த வைரஸுக்கு என்னைக்கு ஊசி போட்டதுன்னு அத்தனை டீடெயில்ஸ் இருக்கும்.
விசிட்டிங் கார்டு மட்டுமே இருந்த நிலை மாறி டெபிட் கார்டு, ஆதார் கார்டு என்று ஏராளமான கார்டுகள் வந்துவிட்டன. எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன கார்டுகள் வரும்?
வீட்டுக்கொரு ‘ஆக்சிஜன் சிலிண்டர் கார்டு’ நிச்சயம்!
மூ. மோகன்
கார்டு எல்லாம் பழைய ஐடியா. எல்லா கார்டு விவரங்களும் ஒரு ‘சிப்’பில் வந்துவிடும். அதை டாட்டூ போலவோ அல்லது அயர்ன்மேன் போல இம்பிளான்ட் செய்து கொள்ளவோ வேண்டியது தான். தேவையான இடத்தில் கையை ஸ்வைப் செய்தால் போதும்.
அங்குராஜா
டோர் கார்டு. வீடு, அலுவலகங்களுக்குப் பூட்டு சாவியெல்லாம் கிடையாது. இந்தக் கார்டைச் செருகினால் கதவு திறக்கும், பூட்டிக் கொள்ளும்.
எஸ். மோகன்
அடிக்கடி விண்வெளிப் பயணம் மேற்கொள்ள ஸ்பேஸ் கார்டு.
வன்னி தங்கம் ராதா
இன்னும் எத்தனை கார்டு வேண்டுமானாலும் வரட்டும், அதை ஆதாருடன் இணைக்கச் சொல்லாமல் இருந்தால் சரி.
Vasanth920
Relation card - ரேஷன் கார்டு மாதிரி ரிலேஷன் கார்டு. யாரு யாரு நமக்கு என்ன ரிலேஷன், எங்க இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்குற கார்டு.
kalagowri91
CCBT Card-Chennai City Boat Travel Card (அடுத்த வருடமே அமலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை).
PRABU_4M_ADM
வேக்சின் கார்டு. எந்த வைரஸுக்கு என்னைக்கு ஊசி போட்டதுன்னு அத்தனை டீடெயில்ஸ் இருக்கும்.
balebalu

சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க, ஒரு பழைய படத்தை ரீமேக் செய்யலாம் என்றால் உங்கள் சாய்ஸ்..?
சூர்யா ஜோதிகா நடிப்பில் ‘தில்லானா மோகனாம்பாள்.’ கற்பனை செய்து பார்த்தாலே வெகு சுவாரசியமாக இருக்கிறது.
மீனலோசனி பட்டாபிராமன்
‘கல்யாணப் பரிசு.’ ஜெமினி கணேசன், சரோஜா தேவி ரோலுக்குக் கச்சிதமாகப் பொருந்தி ரசிகர்களுக்குக் கலைப்பரிசாகக் கிடைக்கும்.
எஸ்.எல்.ஜார்ஜ் அருண்
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தை ரீமேக் செய்யலாம். பத்மினி கேரக்டரில் ஜோதிகாவும், வைஜெயந்திமாலா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க, வீரப்பா கேரக்டரில் கட்டப்பா சத்யராஜும் நடித்தால் ‘சபாஷ் சரியான படம்’னு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறும்.
க.கீராசந்த்
எந்தப் படத்தை வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம்... ஆனால், ‘காலண்டர்’ இல்லாத படமாகப் பார்த்துப் பண்ண வேண்டும்...
கோ.ராஜசேகர்
சிந்து பைரவி. சிவகுமார், சுலக்ஷனா, சுஹாசினி கேரக்டர்களில் சூர்யா, ஜோதிகா, சாய் பல்லவி நடிக்கலாம்.
மலர்சூர்யா
இருவருமே முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் என்பதால் ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம். இன்றைய தலைமுறையினருக்கு நல்ல பாடமாகவும் அமையும்.
PG911_twitz
‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்து ரவிச்சந்திரன் - ராஜஸ்ரீயாக நடிக்கலாம். இன்னொரு ஜோடியாக கார்த்தியும் கீர்த்தி சுரேஷும்.
ParveenF7
‘பாலும் பழமும்.’ சிவாஜி கணேசன் - சரோஜாதேவி கேரக்டர்களில் நடிக்கலாம். கதையில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குப் பதிலா, கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி என்று மாற்றிவிட்டால் மாபெரும் வெற்றி உறுதி.
JaNeHANUSHKA
ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படத்தை ரீமேக் செய்யலாம். வித்தியாசமான சூர்யாவைப் பார்த்த அனுபவம் நமக்குக் கிடைக்கும்.
amuduarattai
மாதம்தோறும் போராட்டங்கள் நடத்தும் அண்ணாமலைக்கு புதிய போராட்டங்களுக்கான ஐடியா ப்ளீஸ்...
வாரந்தோறும் தன்னைக் கலாய்ப்பதையே பிரதான வேலையாய் வைத்திருக்கும் ‘வாசகர் மேடை’ யை எதிர்த்துப் போராடலாம்.
பெரியகுளம் தேவா
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை, ஒரு சில மாவட்டங்களில் மழையே இல்லை எனும் நிலையைப் போக்கும் வகையில், ‘ஒரே மாநிலம், ஒரே மழை’ திட்டம் கொண்டு வராத தமிழக அரசைக் கண்டித்து..!
எஸ். ராஜம்
தமிழகத்தில் பா.ஜ.க-வின் ‘மரியாதைக்குரிய எதிரியான’ நோட்டோவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்யவே அனுமதிக்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தலாம்.
மன்னார்குடி
ராஜகோபால்
அரவக்குறிச்சியில் தோற்ற தமக்கு அமைச்சர் பதவியோ கவர்னர் பதவியோ கிடைக் காததைக் கண்டித்து தி.மு.க-வுக்கு எதிராகப் போராடலாம்.
h_umarfarook
புற்றீசல் போல் பெருகி வரும் பிரியாணிக் கடைகளால் ஆட்டு இனம் அழிந்து வருகிறது. எனவே இனி தமிழ்நாட்டில் சிக்கன் பிரியாணி மட்டுமே விற்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தலாம்!
parveenyunus
‘நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று பாடல் வரிகளை எழுதிய கவிஞர் தாமரையை எதிர்த்து காலம் கடந்து போராட்டம் நடத்தலாம்.
RahimGazzali

பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் நீங்கள் கண்டுபிடித்த லாஜிக் மிஸ்டேக்ஸ்?
‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் எம்.ஆர்.ராதா வீட்டில் மணிக்கூண்டு கடிகாரம் ஒன்று இருக்கும். அதை நன்கு உற்றுப் பார்த்தால், ஒரே நேரத்தை மட்டும்தான் காட்டும். பல ஷாட்களில் இதே நேரம் மட்டும்தான் அந்தக் கடிகாரத்தில் காட்டும்.
வெ.சென்னப்பன்
எங்களோட வயசை கெஸ் பண்ணிடலாம்னு ஐடியா தானே... இந்த ஆட்டத்திற்கு நான் வரலை விகடனாரே!
ஜெரி.D.டார்வி
கண்ணீரோடு நீண்ட வசனம் பேசிவிட்டு தன் வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணும் கதாநாயகி உட்கொள்ளுவதற்காகத் தன் வீட்டிலுள்ள ஒரு சீசாவைத் திறப்பார். அந்த பாட்டிலின் மேல் ‘விஷம்’ என்று எழுதப்பட்டிருக்கும்!
ஆர். காந்தன்
ஆபத்தில் இருக்கும் கதாநாயகியைக் காப்பாற்ற, ஹீரோ நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காரில் பறப்பார். என்னவொன்று கார் அப்படியேதான் நிற்கும். பேக் கிரௌண்ட் ஸ்க்ரீனில் இருக்கும் மரம், செடிகள் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கும்... மறக்க முடியாத லாஜிக்! ஓடாத காருக்கு ஸ்டியரிங்கைத் திருப்பும் அழகோ சொல்லி மாளாது.
வே. விநாயகமூர்த்தி
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கப்பலில் இருந்து குதிக்கும்போது ஜெமினி கணேசனுக்கு தாடி இருக்கும். கடலுக்குள் நீந்தும் போது இருக்காது. கரையேறும் போது மீண்டும் தாடி இருக்கும்.
கி.சரஸ்வதி
புராணப் படங்களில் அம்புக் கூடையா அட்சயப் பாத்திரமான்னு தெரியாத மாதிரி அம்பு விட்டுட்டே இருப்பாங்க!
manipmp
இயக்குநர் கர்ணன் படங்கள்ல ஜெய்சங்கரும் வில்லனும் மலையடிவாரத்துல சண்டை போடுவாங்க. ஆனா அடுத்த நிமிஷமே மலை உச்சில நின்னு சண்டை போடுவாங்க.
bommaiya
‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மலையுச்சியில் இருந்து ஹீரோயின் கீழே தள்ளப்படுவார். அடிவாரத்தில் நிற்கும் எம்.ஜி.ஆர்., அலுங் காமல் குலுங்காமல் இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவார்.
KmFarook6
‘பாமா விஜயம்’ படத்தில், நடிகை பாமாவாக வரும் ராஜ, எதிர் வீட்டுக்கே கார்ல தான் போவார்.
Saisudhar1
உங்கள் ரயில் பயணங்களின் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ளலாமே...
வைகை எக்ஸ்பிரஸில் சென்னை சென்றபோது, ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் கண்ணிமைக் காமல் வெளியே பார்த்தபடி ‘இதோ வயல், வாழைத்தோப்பு, தென்னந் தோப்பு’ என்று ரசித்துச் சொல்லிக்கொண்டே வந்தார். ‘முதன்முதலாக ரயிலில் வருகிறாரோ’ என்று கேட்க, “இல்லைம்மா... நான் ரயில் எஞ்சின் டிரைவரா இருந்து ரிட்டயராயிட்டேன். இதையெல்லாம் ரசித்துப் பார்க்க முடியாம பாதையிலேயேதான் கவனமா இருப்பேன். இப்போதான் இந்த அழகெல்லாம் கண்ணுக்குத் தெரியுது’’ என்று வியக்க வைத்தார்.
விஜயலக்ஷ்மி
சென்னைக்குச் செல்ல பாண்டியன் எக்ஸ்பிரஸுக்கு நேரமாகிவிட்டது என்று டென்ஷனோடு ஏறினால், பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றதும் கூல் ஆனேன். அன்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் சேவை ஆரம்பித்த பொன் விழா தினம் என்பது சிறப்பு.
என்.உஷாதேவி
வட மாநிலத்தில் ஒரு முறை பயணம் செய்யும்போது, ஜெனரல் கம்பார்ட்மென்டில் தூங்கிக்கொண்டிருந்தவர், அதிகாலை ஐந்து மணிக்கு தூக்கத்திலேயே டக்கென படுத்தபடியே பத்து புஷ் அப் செய்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டார். அவ்வளவு பேரும் சிரித்தோம்...
அ.வேளாங்கண்ணி
இமாசலப்பிரதேசத்தில் கல்கா முதல் சிம்லா வரை இமயமலை மலை ரயிலில் ‘உயிரே’ திரைப்படத்தில் ‘தையா... தையா...’ பாடலில் வருவதுபோல முன்பின் அறியாத மனிதர் களுடன் நடனமாடிச் சென்றது மறக்க முடியாத அனுபவம்...
dineshsdkkumar
ஒருமுறை திருப்பதி சென்ற போது பெரியவர் ஒருவரிடம் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ புத்தகத்தைப் படிக்க வாங்கி னேன். அவர் ரயிலிலிருந்து இறங்கும்போது புத்தகத்தை வாங்காமல் செல்ல, அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு தான் வருகிறது.
SriRam_M_20
‘மூன்றாம் பிறை’ பட க்ளைமாக்ஸில் கமல் தேவி வரும் உதகை குன்னூர் ரயில் நிலையக் காட்சியைக் கண்டு உருகிய நான், பின்னாளில் சுகாதார ஆய்வாளராக கேத்தி வட்டாரத்திலே சேர்ந்து கேத்தி ரயில்வே ஸ்டேஷனில் ஏறி ரயில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.
Vaigaisuresh9
1. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரில் ஒருவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆக, விளையாட்டுப்போட்டி நடத்தலாம் என்றால் என்ன போட்டி நடத்தலாம்?
2. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் எந்தக் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கலாம்?
3. ‘`என்னை மக்களாகிய நீங்கள்தான் பார்த்துக்கணும்” என்று சிம்பு சொல்லியிருக்கிறாரே, அவரை எப்படியெல்லாம் பார்த்துக்கலாம்?
4. ஒமைக்ரான் - இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டதும் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்தது?
5. மொபைல் போனை வயதான உங்கள் அப்பா-அம்மா பயன்படுத்துவதற்கும் உங்கள் குழந்தை பயன்படுத்துவதற்கும் சுவாரஸ்யமான வித்தியாசம் என்ன?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com