அண்ணாமலை - திருமாவளவன் விவாதம் நடந்தால் என்ன பேசுவார்கள்? நாலு வரிகளில் நறுக்குனு சொல்லுங்க...
திருமா: நீங்க இருபதாயிரம் புத்தகம் படிச்சதை நெனச்சு ரெம்ப பெருமைப்படுறேன்.
அண்ணாமலை: இதுக்கே இப்படிச் சொன்னா எப்படி? நான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆன பின்னாடி இருபதாயிரம் புத்தகமே எழுதப்போறேன்.
எம்.கல்லூரி ராமன்
அம்பேத்கருக்கு காவி சூட் அணிய முற்படாதீர்கள் என்பார் திருமா. அவர் காவி உடையை சிலாகித்துப் பேசியிருப்பதாக சாவர்க்கரே சொல்லியுள்ளார் என்று புருடா விடுவார் அண்ணாமலை.
அஜித்
திருமாவளவன்: பா.ஜ.க-வின் சனாதானம் ஒழிக!
அண்ணாமலை: எங்க கட்சியிலேயே இல்லாத சந்தானத்தைப் பற்றி ஏன் என்கிட்ட பேசுறீங்க?
மு.ஸ்ரீராம்
திருமாவளவன்: சொல்லுங்க... 20,000 புத்தகங்களையும் அட்டை டு அட்டை படிச்சிருக்கீங்களா?
அண்ணாமலை: அட்டை டு அட்டைதான் படிச்சேன். நடுவிலே புக்கு மட்டும் இல்லை.
கே.முருகன்
திருமா: அம்பேத்கர் இந்துத்துவாவை ஆதரித்துப் பேசியதாகச் சொன்ன புத்தகம் எங்கே?!
அண்ணாமலை: அதுவந்து, அந்தப் புத்தகத்தை ஆடு தின்னுடுச்சி.
kcboopalan

மோடியைப் புகழ்ந்த இளையராஜா, அதைப் பாட்டாகவே பாடினால் அந்தப் பாட்டு எப்படியிருக்கும்?
மோடி ஆட்சி செஞ்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வரி பேஜார் பண்ணதில்லை.
வி.சி.கிருஷ்ணரத்னம்
மோடி கைய வெச்சா அது ராங்கா போவது இல்லை... ஊறுகாய் என்றாலும், அப்பளம் என்றாலும் வரில இருந்து தப்புவதில்லை...
அ.பச்சைப்பெருமாள்
மோடியோ ஜிம்கானா
மோடியோ ஜிம்கானா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்னு
நிக்குறாரே தெம்பா
எப்பவும் நான் எம்.பி ஆகலாம்
நம்புறியா நண்பா.
எம்.விக்னேஷ்
ஜியைவிட
இந்த உலகத்தில்
ஒசந்தது ஒண்ணும் இல்ல
ஒண்ணும் இல்ல
வாயால் வடை சுடுவதில்
வல்லவர் அவர்தான்டி
சாட்சி சொல்ல அதானி வருவார்டி
மன் கி பாத் எல்லாமே
அவர்தான்டி
கேட்ட உடன் ஜி.எஸ்.டி
போட்டுத் தாக்குவார்டி..!
LAKSHMANAN_KL
உங்கள எண்ணிப் பார்க்கையில் மனசில் அலை அடிக்குது
அதை எழுத நினைக்கையில் சமூகம் எதிர்க்குது...
ஓ... ஓ.. மோடி ஜி, அன்போடு இளையராஜா நான் எழுதும் கடிதமே.
Vasanth920
மோடி வந்து ஆளும் போது என்ன வண்ணமோ நாட்டுல,
எப்போதுமே காவி வண்ணம் சிறந்த வண்ணமே புரிஞ்சுக்க...
கறுப்புச் சட்டை வேணாம் அம்மா எண்ண மெல்லாம் வண்ணம் அம்மா...
வண்ணங்களுக்கு ஏற்றபடி எண்ணமெல்லாம் மாறுமம்மா...
vrsuba

‘இதுக்கெல்லாமா வீட்டில் சண்டை நடக்கும்?’ என்று நீங்கள் புலம்பும்படியான ஒரு சுவாரஸ்ய சம்பவம்..?
சமீபத்தில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தோம். நான்கு பெட்ரூம் ஹவுஸ். கீழே ஒரு ரூம். முதல் மாடியில் இரண்டு. இரண்டாம் மாடியில் ஒன்று. எல்லாமே ஏசி வசதி செய்யப்பட்டவைதான். நான் கிரவுண்ட் ஃப்ளோர் அறையைத்தான் பெட்ரூம் ஆக யூஸ் பண்ணணும்னு சொல்ல, மனைவியோ முதல் மாடி ரூம்தான் எனச் சொல்ல, சண்டைக்குப் பின் அரை மாதம் இங்கே, அரை மாதம் மேலே என முடிவானது.
பர்வீன் யூனுஸ்
மட்டன் சில நாள்களில் நன்றாக இருக்கும். சில நாள் நிறைய எலும்புடன் கொடுத்து விடுவார் கடைக்காரர். ஆனால் எல்லா நாளும் எனக்குத் திட்டுதான், `ஆஃப்டர்ஆல்... கறி வாங்கத் தெரியுதா'ன்னு. சண்டை இல்லாத சன் டே கிடையாது எங்கள் வீட்டில்.
ஈனோஸ் இப்ராஹீம்
உழவர் சந்தையில அஞ்சு ரூபாய்க்குக் கறிவேப்பிலை, கொத்தமல்லி வாங்கிட்டு வந்தேன். `காசு குடுத்து எந்தப் பைத்தியக்காரனாவது கறிவேப்பிலை வாங்கு வானா'ன்னு ஒரே `பாராட்டு!’ காய்கறி எதுவும் வாங்காமல் வெறும் கொசுறு மட்டும் கேட்டால் யார் தருவாங்க, நீங்களே சொல்லுங்க..?!
சிவம்
எங்கள் வீட்டில் எப்போதும் நாட்டுத் தக்காளி வாங்குவதுதான் வழக்கம். பூண்டு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னதும் தக்காளியைப் போலவே, நாட்டுப் பூண்டையே வாங்கிட்டுப் போனேன். ‘‘இது சின்னதா இருக்கும். யாரு கெடந்து உரிக்குறதுன்னு’’ ஒரே சண்டை.
IamUzhavan
படிக்கிற காலத்தில ஒழுங்கா படிக்காம, இப்போ கதை புக்கைப் படிச்சு என்ன கிழிக்கப் போறீங்களோ! (இந்தா ஆரம்பம் ஆயிருச்சு!)
Saisudhar1
இந்தக் குழம்புக்கு என்ன பேர் என்று கேட்டது ஒரு குத்தமாய்யா. இதற்கும் சண்டை.
amuduarattai
சசிகலாவிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம் என்றால் என்ன கேட்பீர்கள்?
2017-ல் நீங்க நினைச்சபடி முதல்வர் ஆகியிருந்தா, முதல் கையெழுத்து எதுக்குப் போட்டிருப்பீங்க?
லாவண்யா, சென்னை
உண்மையிலே அப்போ லோவுல ஒரு இட்லி என்ன ரேட்டு மேடம்..?
ஆர்.பிரசன்னா
ஜெயலலிதா கண்ணில் படாமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்!
ப.சோமசுந்தரம்
ரொம்ப ரிஸ்க் எடுத்து பெங்களூர்ல `ஷாப்பிங்' போனீங்களே, ஷாப்பிங்ல அப்படி என்ன வாங்கினீங்க?
ப.இராஜகோபால்
இன்னுமா கட்சி உங்க கட்டுப்பாட்டுக்கு வரும்னு நம்பறீங்க..?
இரா.வசந்தராசன்
ஆடியோவை ரிலீஸ் பண்ணிட்டீங்க, படத்தை எப்ப ரிலீஸ் பண்ணப் போறீங்க?
நா.இரவீந்திரன்
கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது? எவ்வளவு இருந்தது? கொள்ளைக்குப் பின்பும் மெளனம் காப்பது ஏன்?
San8416
சுப்பிரமணியன் சுவாமி, குமாரசாமி, பழனிசாமி, ஆறுமுகசாமி என்று ஜெயா & உங்கள் வாழ்க்கையில் அந்தக் கடவுள் முருக சாமியின் விளையாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
RaghurajanR

டப்பிங் படங்களின் ஆதிக்கத்தை முறியடிக்க நம் முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.
ஈகோ பார்க்காமல் RRR போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட்களில் தமிழில் நடிக்கலாம்.
ராம்ஆதிநாராயணன்
ராஜமௌலி, சுகுமார், பிரஷாந்த் நீல் போன்ற இயக்குநர்கள் இயக்கத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்கலாம்.
vaira Bala
நம் முன்னணி தமிழ் நடிகர்கள், டப்பிங் படங்களின் நாயகர்களுக்கு நம்மூர் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம்..! அவர் படத்தில் நடித்த பிறகு `ஹே... ஹேய்...’ என்ற சத்தமெல்லாம் குறைந்து அமைதியாகி, படங்களின் ஆதிக்கமும் ஒடுங்கிவிடும்..!
கே.எம். ரவிச்சந்திரன்
ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி-யிடம் வாரா வாரம் பேய்ப் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும்னு சொன்னால் போதும். டப்பிங் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத வகையில் படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டே இருப்பாங்க.
பெ.பாலசுப்ரமணி
நல்ல டப்பிங் படங்களுக்கு நம்முடைய முன்னணி நடிகர்களையே டப்பிங் பேச வைத்து விடலாம். வாய்ஸ்னாலதான் ஹிட்னு சொல்லிடலாம்.
நிஷால் ரவி
பெரிய நடிகர்கள் வருஷத்துக்கு ஒரு படம் மட்டும் நடிக்காம குறைஞ்சது மூணு படமாவது நடிக்கணும்.
bommaiya
தங்களது பெரிய பட்ஜெட் படங்கள் ஏன் ப்ளாப் ஆனது என்பதைக் காரண காரியங்களுடன் ஆராய்ந்து அவற்றை இனி வரும் படங்களில் தவிர்த்தாலே போதும்
parveen0212

1. உங்களால் மறக்க முடியாத ட்ரீட்..?
2. ராமராஜனின் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க இப்போது பொருத்தமானவர் யார்?
3. பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திலிருந்து யார் யாரைச் சேர்க்கலாம், ஏன்?
4. 2கே கிட்ஸைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ---------------------- என்று. நிரப்புங்க பார்ப்போம்!
5. சிறுவயதில் ‘நீங்கள் எந்த வேலைக்குப் போகப்போகிறாய்?’ என்ற கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லியிருப்பீர்கள். இப்போது அதை நினைத்துப்பார்த்தால்..?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com