Published:Updated:

வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!

‘கற்றது தமிழ்’ படத்தில் ராம் நடித்திருந்தால், ஜீவாவுக்கு வைத்ததுபோல் ஒட்டு தாடி தேவைப் பட்டிருக்காது!

பிரீமியம் ஸ்டோரி

பொன்விழா காணும் அ.தி.மு.க-வை நிறுவிய எம்.ஜி.ஆர் இப்போது வந்தால் முதலில் எங்கு செல்வார், யாரைப் பார்ப்பார்?

அ.தி.மு.க போஸ்டர்களில் தன் புகைப்படம் இருக்கிறதா எனத் தேடித் தேடிப் பார்த்து, ஏமாந்துபோய், விரக்தியில் மீண்டும் வானுலகம் சென்றுவிடுவார்!

 ரிஷிவந்தியா

சரித்திரப் படங்களில் நடித்து, புகழ்பெற்றவர் ஆயிற்றே... இயக்குநர் மணிரத்னத்திடம் முதலில் சென்று, `பொன்னியின் செல்வன்' படத்தில், `எனக்கு ஏற்ற வேடம் கொடுங்கள்' என்று `உரிமைக் குரல்' கொடுப்பார்..!

 வி.சி. கிருஷ்ணரத்னம்

‘எங்கடா இங்க இருந்த கட்சிய காணோம்’னு தேடுவார்.

YAADHuMAAGE

அம்மா சமாதிக்குப் போய் ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தாதான், வந்தது எம்.ஜி.ஆர்னே நம்புவாங்க...

MN5_Sewaf

அ.தி.மு.க தலைமை அலுவலகம் போவார். `எம்.ஜி.ஆர் மாதிரி வேஷம் போட்டுட்டு வந்தா உள்ளே விட்டுடுவோமா... பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அனுமதி' என்று சொல்வதைக் கேட்டு நொந்துபோய்த் திரும்புவார்.

ParveenF7

‘இலையை மட்டும்தானே கொடுத்துவிட்டுப் போனேன். இதில் எப்படி பூ வந்தது?’ என நொந்துகொண்டு, எம்.ஜி.ஆர் மாளிகையின் தூணில் முட்டி முட்டி தனது பாணியில் அழுவார்.

IamUzhavan

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை விவரங்களைத் தெரிந்துகொள்ள நீதிபதி ஆறுமுகசாமியைச் சந்திப்பார்.

Adhirai Yusuf

வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!

இந்தப் படத்து இயக்குநரே ஹீரோவாக நடிச்சிருக்கலாமே என்று உங்களை யோசிக்கவைத்த படம் எது, இயக்குநர் யார்?

பழைய படமான `பாரதி கண்ணம்மா.' இயக்குநர் சேரனே, ஹீரோ பார்த்திபனுக்குப் பதில் நடித்திருக்கலாம். படம் இன்னும் உருக்கமாக இருந்திருக்கும்.

 இரா.வசந்தராசன்

படம்: கல்லுக்குள் ஈரம். இயக்குநர்: பாரதிராஜா. இப்படத்தில் சுதாகருக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் இயக்குநர் நடிப்பு சொல்லித் தரும் பாடல் காட்சியியைப் பார்க்கும்போது, சுதாகருக்கு பதில் இயக்குநரே நடித்திருக்கலாம் எனத் தோன்றியது!

 கே.எம். ரவிச்சந்திரன்

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - தம்பி ராமையா.

 நா.இரவீந்திரன்

‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் கலக்கிய மிஷ்கினே ‘சைக்கோ’ படத்திலும் நடித்திருக்கலாம்.

 பெ.பாலசுப்ரமணி

‘சொக்கத்தங்கம்.’ அந்தப் படத்தில் சில காட்சிகளில் விஜயகாந்தின் நடிப்பு பாக்யராஜ் நடிப்பு மாதிரி இருக்கும். பேசாம அந்தப் படத்தில் பாக்யராஜே நடித்திருக்கலாம்.

 மலர்சூர்யா

‘தம்பி’ படத்தில் சீமான் நடித்திருக்கலாம்.

veera_paagu

‘பருத்திவீரன்’ படத்தில் அமீரே நடித்திருக்கலாம். கார்த்தி அந்தப் படத்தில் அமீரை அப்படியே நகல் எடுத்திருப்பார். அதன்பின் அமீர் நடித்த படங்களைப் பார்த்த பின் தோன்றிய உணர்வு இது.

KarthikeyanTwts

‘கற்றது தமிழ்’ படத்தில் ராம் நடித்திருந்தால், ஜீவாவுக்கு வைத்ததுபோல் ஒட்டு தாடி தேவைப் பட்டிருக்காது!

RavindranRasu

வடசென்னை - வெற்றிமாறன்.

RanjithAbimannan

வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!

ஏதாவது ஒரு தமிழ் சினிமாவுக்கு, ‘புதிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு’ வழங்குவது என்றால் எந்த சினிமாவுக்குக் கொடுக்கலாம்?

முருங்கைக்காய் ஒரு அபூர்வ விசேஷ சக்தி கொண்டது என்பதைக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்கு ஒருமனதாக நோபல் பரிசு தந்து கெளரவிக்கலாம்.

 எஸ்.இராஜேந்திரன்

மணிரத்னத்தின் படங்களில் வசனங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம்.

 செல்லத்துரை

‘காதலர் தினம்’ திரைப்படம். சமூக ஊடகத்தில் பெண்கள் பெயரில் திரியும் ஆண்களுக்கு, ஆண்களே நூல் விடுவார்கள் என்று கட்டியம் கூறி அன்றே சொன்னது.

 அ.பச்சைப்பெருமாள்

‘பாகுபலி’ படத்தில் காளகேயர்கள் பேசுகின்ற `கிலிக்கி' மொழியைப் புதிதாக உருவாக்கியிருந்தார்கள். அந்தப் படம்தான் நோபல் பரிசு பெற சரியான தேர்வாகும்.

 ப. ராஜகோபால்

`அல்வா'வுக்குத் தனி ஒரு அடையாளத்தைக் கண்டுபிடித்த `அமைதிப்படை' படத்திற்கு.

 ஜெ. மாணிக்ஸ்

உயிர் போகும் நிலையிலோ, கோமாவிலோ இருந்தால், பழைய காதலி அந்த ஊருக்கு வந்து இறங்கினால் போதும், உயிர் பிழைத்துவிடலாம் என்ற மருத்துவக் கண்டுபிடிப்புக்கு மருத்துவர் பாரதி ராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’, ‘முதல்மரியாதை’ படங்களுக்கு நோபல் பரிசைப் பகிர்ந்து அளிக்கலாம்.

KRavikumar39

அப்படிப் பார்த்தா ஹாலிவுட், கொரியன் படங்களுக்குத்தான் கொடுக்கணும்! கதை அவங்களுது தானே?

PRABU_4M_ADM

டீ விற்பவர்கூட ஓட்டக்கூடிய எளிமையான ரயில் என்ற புதிய கண்டுபிடிப்பிற்காகத் ‘தொடரி’ படத்திற்கு நோபல் பரிசு வழங்கலாம்.

ARiyasahmed

‘கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு’ என்ற அரிய உண்மையைப் பாடலில் கண்டுபிடித்துச் சொன்ன `பரிசு’ படத்திற்கு பரிசு கொடுக்கணும்.

mathi.vaanan.

ஏதாவது ஒரு பொருளை வாங்கி, அதை வேறுவிதமாய் வினோதமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? என்ன பொருள்?

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், எல்லாரும் வாங்கறாங்களேன்னு நாமளும் வாங்கிய `ஸ்டீமர்', இப்ப பாத்ரூம் பக்கெட்ல குவளையா மிதந்துகிட்டிருக்கு.

 ஆர். பிரசன்னா

ஒர்க் ஆகாத ஹார்டு டிஸ்க்தான் இப்போ வரை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்துகிறேன்.

h_umarfarook

பயனில்லை என்றான குளிர் பதனப் பெட்டியை குளிக்கும் தொட்டியாகவும் அதன் கதவை சமையலறையில் அலமாரியாகவும் மாற்றி பயன்படுத்துகிறோம்!

SeSenthilkumar

தேவைப்படுமோன்னு நாலு பிளாஸ்டிக் சேர் வாங்கி எங்க வைக்கன்னு தெரியாம துணி காயப் போடுற கொடியா பயன்படுத்தறேன்.

vrsuba

கொசு பேட் - வாங்கிய அன்று முதல் கொசுவை அடிக்கவில்லை... ஆனால், அதில் உள்ள விளக்கு நன்றாக எரிகிறது... மின் வெட்டு சமயங்களில், 'எமர்ஜென்ஸி விளக்காக' அருமையாகப் பயன்படுகிறது..!

vc.krishnarathnam

உடற்பயிற்சி செய்ய வாங்கிய `டம்பில்ஸ்' இஞ்சி, பூண்டு, ஏலக்காய் நசுக்கப் பயன்படுகிறது.

kayathaisathya

‘வாகன ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகள்’ - இந்த மாதிரி என்ன வித்தியாசமான அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கலாம்?

வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!
வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!

பெட்ரோல் பங்குகளில் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் விலையேற்றத்தால் பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுக்க மனதை வருடும் இளையராஜாவின் மெல்லிசை மெட்டுகளை ஸ்பீக்கரில் தவழ விடலாம்.

 க.விஜயபாஸ்கர்

2000 ரூபாய் நோட்டில் சிப்பு என்ற எஸ்.வி.சேகரின் கண்டுபிடிப்பை அமல்படுத்தி அறிவிக் கலாம்.

absivam

எந்தத் தேர்தலாக இருந்தாலும் வேட் பாளருக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வாக்களிப்பது கட்டாயம்.

San8416

அரசு அலுவலகங்களில் லஞ்ச்சுக்கு அப்புறம் `மன் கி பாத்' போட்டு விட்டால் அப்படியே சுகமா தாலாட்டு போல இருக்கும்.

balebalu

சதா சும்மா சும்மா ஹாரன் அடிச்சா ஃபாஸ்டாக்ல ஆட்டோ மேட்டிக்கா பணம் டிடெக்ட் ஆகுற சிஸ்டம் கொண்டு வரலாம்...

Lakshmi

வாசகர் மேடை: அவருக்குப் பதில் இவர்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. பண்டிகைகளை சிறுவயதில் நீங்கள் கொண்டாடியதற்கும் இப்போது கொண்டாடுவதற்கும் என்ன வித்தியாசம்?

2. இதுவரை நீங்கள் கேட்ட மேடைப்பேச்சுகளில் மறக்க முடியாத பேச்சு எது?

3. மழைக்கவிதைகள் என்ற பெயரில் நீங்கள் படித்து டார்ச்சரான ஒரு அட்ராசிட்டி கவிதை சொல்லுங்கள்...

4. ‘வடிவேலு சிறந்த நடிகர்’ என்று சொல்லும் கமல், வடிவேலுவின் எந்த கேரக்டரில் நடித்திருந்தால் அசத்தியிருப்பார்?

5. உதயநிதி, துரை வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் மூவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டால் மூவருக்கும் என்னென்ன டாஸ்க் கொடுக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு