சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: லொள்ளு விட்டுப் போச்சு!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

மாஸ்டர் பட ‘பவானி’ விஜய் சேதுபதிபோல், கோபம் வருகையில் முஷ்டியை மடக்கி சுவரில் குத்தலாம்

கோபத்தைக் கட்டுப்படுத்த உருப்படியான டிப்ஸ் ப்ளீஸ்...

அட்டை டு அட்டை ஆனந்த விகடன் படிச்சாலே எத்தகைய கோபமும் பறந்துவிடும்...

(அப்பாடா... இந்த வாரம் வாசகர் மேடைல நம்ம பேர் கன்ஃபார்ம்டு!)

 ஆர். பத்மப்ரியா

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைப் பற்றியெல்லாம் நினைக்காமல், நம்ம ‘ஜி’யோட ‘100 கோடித் தடுப்பூசி சாதனை’யை நினைச்சுக்கோங்க! (கடுப்பு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல!)

mohan.moorthy

அடிக்கடி கோபப்பட்டவரின் நிலையை எண்ணிப் பாருங்கள். உதாரணத்துக்கு ஹெச்.ராஜாவை நினைக்கலாம். உங்கள் கோபம் அட்மினுக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்!

 ஆர்.வள்ளி

துணி துவைக்கணும். கோபத்தில் வெளு வெளுன்னு வெளுத்தால் துணியும் வெள்ளையாகும். கோபமும் தணியும்.

urs_venbaa

மாஸ்டர் பட ‘பவானி’ விஜய் சேதுபதிபோல், கோபம் வருகையில் முஷ்டியை மடக்கி சுவரில் குத்தலாம். (பி.கு: வாடகை வீட்டுச் சுவரில் குத்தி சுவர் உடைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல!)

JaNeHANUSHKA

கோபம் வரும்போது, ஒரு வாளி பிரியாணி சாப்ட்ற மாதிரி மனசுல நெனச்சுப் பாருங்க... உங்க ஓட்டம் பிரியாணிக் கடைய நோக்கிதான் இருக்கும். மனசு லேசாகும்... வயிறு கனமாகும்... கோபம் காணாமல்போகும்!

Saisudhar1

வாசகர் மேடை: லொள்ளு விட்டுப் போச்சு!

ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி - மூவரும் ஒரு படத்தை ரீமேக் செய்து நடிப்பது என்றால் எந்தப் படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம்?

‘கலகலப்பு-2’ மாதிரி ‘கைகலப்பு-3’ படம் எடுத்து அவர்கள் நடிக்கலாம். ஆனால் ரிலீஸ் செய்யக்கூடாது. யாரு பார்க்கறது?

 சா.செல்வராஜ்

இந்த மூணு பேருடன் செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜியையும் சேர்த்துக்கிட்டு ‘பஞ்சதந்திரம்’ ரீமேக் செஞ்சா ‘பக்கா’வா இருக்கும்.

 க.விஜயபாஸ்கர்

‘சரஸ்வதி சபதம்.’ சிவாஜி கணேசனுக்குப் பொருத்தமானவர் ஜெயக்குமார், ஜெமினி கணேசனுக்குப் பொருத்தமானவர் நாஞ்சில் சம்பத். நாகேஷுக்குப் பொருத்தமானவர் திண்டுக்கல் லியோனி.

 ஆர்.சுப்பு

மூவரும் இணைந்து ‘நாடோடிகள்’ படத்தை ரீமேக் செய்து நடித்தால் பொருத்தமாக இருக்கும். அதுவும் க்ளைமாக்ஸில் இனோவா காரில் நாஞ்சில் சம்பத் சேஸிங் செய்யும் சீன் கிளாப்ஸ் அள்ளும்.

 வெ.சென்னப்பன்

‘விருமாண்டி’ கமல் கேரக்டரில் நாஞ்சில் சம்பத். நெப்போலியன் ரோலில் திண்டுக்கல் லியோனி. பசுபதி பாத்திரத்தில் ஜெயக்குமார்.

Vasanth920

‘அல்லுவிட்டுப்போச்சு’ என்கிறார்களே, உங்கள் வாழ்க்கையில் அல்லுவிடும்படி நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சுருக்கமாகக் கூறுங்களேன்...

வெளிநாடு சென்றபோது, ‘அசுரத் தாலாட்டு’ என்ற ராட்சச ரங்கராட்டினத்தில் ஏறி சில நிமிடங்கள் தலைகீழாகத் தொங்கியபோது அல்லு விட்டுப்போனது இன்றும் நினைவிருக்கிறது.

radhika.ravindrran

2018 மே மாதம் நானும் என் கணவரும் இலங்கைக்குச் சுற்றுலா சென்றோம். நுவரெலியாவிலிருந்து கொழும்பு செல்லும் காட்டுப் பகுதி வழியாக பஸ்ஸில் பயணித்த போது பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று தனது தும்பிக்கையை பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே விட்டது. யானையின் இந்தத் திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத பேருந்தின் ஓட்டுநர் யானையின் தும்பிக்கைக்கு இடையே மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்தார்! எங்களுக்கெல்லாம் கதிகலங்கிவிட்டது. பேருந்துக்குள் இருந்த மற்றொருவர் யானையைச் சமாளிக்க அதற்குத் தேவையான வாழைப்பழத்தை எடுத்துக் கொடுக்க, வாழைப்பழத்தை வாங்கிக்கொண்ட யானை தும்பிக்கையை எடுத்துக்கொண்டு எங்களுக்கு வழிவிட்டது. ‘ஆளை விடுடா சாமி’ என ஓட்டுநர் பேருந்தை உடனே எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினார். எங்களுக்கெல்லாம் அப்போதுதான் போன மூச்சு திரும்பி வந்தது!

 ஆர்.கெஜலட்சுமி

ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி. எங்களைச் சுற்றியே பார்ட் பார்ட்டா படம் எடுத்த பிறகு மக்களுக்கு எங்கள்மீது இருந்த அல்லுவிட்டுப் போச்சு விகடனாரே: பேய்களின் பேரவை.

 பெ.பாலசுப்ரமணி

மோடி இன்று இரவு 8 மணிக்கு பேசப் போகிறார், 9 மணிக்கு பேசப் போகிறார், 7.30 மணிக்கு பேசப் போகிறார், 10 மணிக்கு பேச போகிறார் என்று இன்றளவும் செய்திகள் வரும்போதெல்லாம் ‘அல்லு விடுகிறது’ என்பதுதான் உண்மை!

 ஜெ. நெடுமாறன்

காரில் கண்டெய்னர் லாரியை ஓவர் டேக் எடுக்கும்போது... ஆத்தாடி ஆத்தா!

manipmp

மழை இரவில் இருட்டில் டூவீலரில் போன போது - இருளோடு இருளாக இரண்டறக் கலந்து நின்ற எருமையைக் கண்டு - திடீரென வண்டியைத் திருப்ப - எதிரே முழு லோடு ஏற்றி வந்த லாரி - என்னை லாகவமாகக் கையாண்ட போது ‘அல்லுவிட்டுப்போச்சு.’

ashikameeb

வீட்டில் மூன்று பேருக்கும் அடுத்தடுத்து கொரோனா. யாதோன் கி பாராத் போல் மூவரும் பிரிந்து வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 48 மணி நேரத்திற்குப் பிறகுதான் எங்களுக்குள் தகவல் தொடர்பே கிடைத்தது. அந்த அல்லு விட்ட 48 மணி நேரத்தை மறக்கவே முடியாது.

bommaiya

வாசகர் மேடை: லொள்ளு விட்டுப் போச்சு!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் எஸ்.பி.பியாக நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?

மனோ பொருத்தமானவர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் அதிக நெருக்கத்தோடு பழகியவர். குரலும் அவரைப்போல பேச முடியும். மிமிக்ரி தெரிந்தவர்...

 காந்த்

மம்மூட்டி - நுணுக்கமான நடிப்பையும் அணுக்கமாக வெளிப்படுத்தும் இவரே சரியான சாய்ஸ்.

 எம்.கலையரசி

விக்ரம் பிரபு இளம் வயது எஸ்.பி.பியாகவும்...பிரபு வயதான எஸ்.பி.பியாகவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

 வானதி ஜவஹர்

திரையில் பாடகராக வலம் வந்தவர் நடிகர் ‘மைக்’ மோகன். அவரே பொருத்தமானவர்!

 ரவிச்சந்திரன்

கமலை நடிக்க வைக்கலாம்... ‘தசாவதாரம்’ எடுத்தவரால், ‘பாலவதாரம்’ எடுக்க முடியாதா என்ன..?!

LAKSHMANAN_KL

யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்... பாட்டு யார் பாடுவாங்க..?

asdbharathi

இளமைக்காலம் - காளிதாஸ் ஜெயராம். இறுதிக்காலம் - ஜெயராம்.

PG911_twitz

ஒரு பிரச்னையைக் கையாள்வதில் கணவனுக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?

கணவன் வாழைமட்டை மாதிரி, பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ளவே டைம் எடுக்கும். மனைவி கற்பூரம் மாதிரி, பட்டெனப் புரிந்து கொண்டு தீர்வை நோக்கி ஓடத் தொடங்கிவிடுவாள். இதுதான் வித்தியாசம்.

 மன்னார்குடி

ராஜகோபால்.

ஆமா... யார் வீட்டுப் பிரச்னை? கணவன் வீடா, மனைவி வீடா?

 கி.சரஸ்வதி

மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பு கேட்க வைப்பதும் தான்...

saravankavi

இருவருமே கையாண்டால் தான் அந்தப் பிரச்னை நிரந்தரமாகத் தீர்க்கப்படும். ஈகோ பார்த்தால் விட்ட குறை தொட்ட குறையாகத் தொடரும்.

ParveenF7

உங்ககிட்ட எத்தன பழம் வாங்கிட்டு வரச் சொன்னேன், ஒரு பழம் இங்க இருக்கு, இன்னொரு பழம் எங்கே - மனைவிமார்கள்.

நீங்க கேட்ட இன்னொரு பழம்தான் இது - கணவன்மார்கள்.

Vaigaisuresh9

மனைவி என்பவர் நூறு நாள்கள் ஓடவும் முடியாம, ஒளியவும் முடியாம கண்காணிக்கற பிக்பாஸ் கமல் மாதிரி...

கணவன் என்பவர் கட்சி உறுப்பினர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மாதிரி...

SowThanishka

1. ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’ என்று பெயர் மாற்றியதைப்போல் வாட்ஸ் அப்புக்குத் தமிழில் பெயர் சூட்டலாம் என்றால் என்ன பெயர் வைக்கலாம்?

2. இன்னும் தமிழில் ரீமேக் செய்யப்படாத ஒரு மலையாள/இந்திப் படத்தைச் சொல்லுங்கள். அதில் நடிக்கப் பொருத்தமானவர்கள் யார்?

3. ‘நாங்கெல்லாம் அந்தக் காலத்துல’ என்கிற தற்பெருமைக் கதைகளில் நீங்கள் கேட்ட குபீர் கதை எது?

4. ‘எது எதையோ கண்டுபிடிக்கிறீங்க. இதுக்கு ஒரு கருவி கண்டுபிடிங்க’ என்று நீங்கள் ஆசைப்பட்டு ஆதங்கப்படும் விஷயம் என்ன?

5.அம்மா உணவகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் ஸ்டாலின், உதயநிதி பெயர்களை எந்தத் திட்டத்துக்கு வைக்கலாம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com