கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: ‘பிச்சுமணி’ கமல்... ‘பிச்சு’ உதறிடுவார்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

‘மருதமலை’ படத்தின் ‘என்கவுன்டர் ஏகாம்பரம்’ கதாபாத்திரத்தில் அசத்தி விடுவார் கமல்

வாசகர் மேடை: ‘பிச்சுமணி’ கமல்... ‘பிச்சு’ உதறிடுவார்!

‘வடிவேலு சிறந்த நடிகர்’ என்று சொல்லும் கமல், வடிவேலுவின் எந்த கேரக்டரில் நடித்திருந்தால் அசத்தியிருப்பார்?

இம்சை அரசன் 23ம் புலிகேசியாக நடித்திருந்தால் அம்சமாகவும், வடிவேலு என்ற சிறந்த நடிகரின் வம்சமாகவும் அசத்தியிருப்பார்.

 எஸ்.எல்.ஜார்ஜ் அருண்

சப்பாணி கேரக்டரில் நடித்த அனுபவம் இருப்பதால், அதே டைப்பில் நடக்கும் கைப்புள்ள கேரக்டரில் நடிக்கலாம்.

 பா.ஜோதிமணி

‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா’ என்று பாடிய கமல் வடிவேலுவின் ‘பிச்சுமணி' கேரக்டரை ‘பிச்சு' உதறிடுவார்...

 க.கீராசந்த்

‘சந்திரமுகி’யில் ரஜினியுடன் அரண்மனை செல்லும் கேரக்டரில் நடித்திருந்தால் கமல் அசத்தியுமிருப்பார்! கமல் - ரஜினி ஜோடியைப் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கும் கிடைத்திருக்கும்!

 ரெ.ஆத்மநாதன்

‘மனதை திருடி விட்டாய்’ வடிவேலு கேரக்டர், பிரபுதேவாவுடன் நடிக்கலாம். ‘Sing in the Rain' பாட்டை கமல் குரலில் பாடிக் கேட்க ஆசை!

balebalu

‘மருதமலை’ படத்தின் ‘என்கவுன்டர் ஏகாம்பரம்’ கதாபாத்திரத்தில் அசத்தி விடுவார் கமல். அதில் என்கவுன்டர் ஏகாம்பரத்தின் அறிமுகமே கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் தீம் மியூசிக்தான்!

sudarvizhie

மழைக்கவிதைகள் என்ற பெயரில் நீங்கள் படித்து டார்ச்சரான ஒரு அட்ராசிட்டி கவிதை சொல்லுங்கள்...

தொடர்ந்து பெய்தால்

பள்ளிகளை

அடைத்து விடுவதால்தான்

உனக்கு

அடைமழை

எனப் பெயர் வந்ததோ?

 செல்லத்துரை

வைரமுத்து போல

மழைக்கவிதை எழுத

முயற்சி செய்கிறோம்

எழுதிய கவிதைகளை

வாசித்தால் ஜி.பி.முத்து

கடிதம் வாசிப்பது போல

இருக்கிறது.

 பெ.பாலசுப்ரமணி

மழை வந்தால் நனைவேன்

என்று கவிதை எழுதிய

தோழிகளைக் காணவில்லை

மழை மட்டும் தனிமையிலே.

 அ.பச்சைப்பெருமாள்

வேண்டாங்க! அந்தக் கவிதையை நான் சொல்லி, அது விகடன்ல வந்து, அதைப் பார்த்து உற்சாகமாகி அதைவிட பயங்கர பயங்கர கவிதையெல்லாம் எழுதி ‘சொல்வன'த்துக்கே அனுப்ப ஆரம்பிச்சுட்டார்னா... பாவம், உங்களுக்கெல்லாம் ரொம்ப இளகிய மனசு, அப்புறம் தாங்க மாட்டீங்க!

 ‘லொள்ளு’ மாணிக்ஸ்

வானத்திலோ பெரிய இடி!

வீட்டிலோ பஜ்ஜி நெடி!

இளையராஜா ஆர் யூ ரெடி?

PRABU_4M_ADM

அளப்பரிய உன்

அழகின் மீது

மையல் கொண்டு

வருண தேவன்

வடித்த ஜொள்தான்

மழை..!

LAKSHMANAN_KL

மழைக்கவிதை ஒன்று எழுத வந்து...

பின் மழையே கவிதை என்றுணர்ந்தேன்..!

umar.farook.71

வாசகர் மேடை: ‘பிச்சுமணி’ கமல்... ‘பிச்சு’ உதறிடுவார்!

உதயநிதி, துரை வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் மூவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டால் மூவருக்கும் என்னென்ன டாஸ்க் கொடுக்கலாம்?

தமிழ்நாட்டு மேப்பில் சென்னை, கோவில்பட்டி, தேனியை இணைத்து முக்கோணம் வரைதல்...

vaira.bala.12

புதிய டாஸ்க் தேட வேண்டியதே இல்லை. ‘முதல்வன்’ பட டாஸ்க்கே போதுமானது. உதயநிதிக்கு அர்ஜுன் நடித்த ஒரு நாள் முதல்வர் டாஸ்க் கொடுக்கலாம். துரை வைகோவுக்கு மணிவண்ணன் நடித்த பி.ஏ டாஸ்க் கொடுக்கலாம். ரவீந்திரநாத்துக்கு ரகுவரன் நடித்த வில்லன் டாஸ்க் கொடுக்கலாம்.

 கே.கருணாநிதி

உதயநிதி: கலைஞரின் ‘பராசக்தி’ கோர்ட் வசனத்தை ஒரே டேக்கில் பேசவேண்டும்.

துரைவைகோ: வைகோ ஏன் முதல்வராக முடியவில்லை என்பது குறித்துப் பத்து நிமிடங்கள் பேசவேண்டும்.

ஓ.பி.ரவீந்திரநாத்: மத்திய பி.ஜே.பி அரசினைக் குற்றம் சாட்டிப் பத்து நிமிடங்கள் பேசவேண்டும்.

 ப.த.தங்கவேலு

‘வாரிசு அரசியல் நல்லதா, கெட்டதா’ என்று ‘நீயா நானா’ கோபிநாத்துடன் விவாதம் செய்யச் சொல்லலாம்!

absivam

உதயநிதி: நீண்ட தூரம் சைக்கிள் பயணம்.

துரை வைகோ: நீண்ட தூரம் நடைப்பயணம்.

ஓ.பி.ரவீந்திரநாத்: தந்தை வழியில் நீண்ட நேரம் தர்மயுத்தம்.

amuduarattai

உதயநிதி முதல்வராகவும், ஓ.பி.ரவீந்திரநாத் எதிர்க்கட்சித் தலைவராகவும், துரை வைகோ சபாநாயகராகவும் சட்டசபை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டச் சொல்லலாம்.

RavindranKanna2

இதுவரை நீங்கள் கேட்ட மேடைப்பேச்சுகளில் மறக்க முடியாத பேச்சு எது?

மோடியின் மேடைப்பேச்சு... (‘கறுப்புப்பணத்தை மீட்டால் இந்தியர் ஒவ்வொருவர் அக்கவுன்ட்டிலும் ரூ. 15லட்சம் போடலாம்’ என்று கூறிப் பட்டை நாமம் போட்டது).

 க.விஜயபாஸ்கர்

கமல் பேசும் எல்லா மேடைப் பேச்சுகளும் மறக்க முடியாதவைதான். ஆயுளுக்கும் அவர் என்ன பேசினார் என்று புரியாமல் நினைத்து நினைத்து மறக்க முடியாமல் யோசிக்க வைக்கும் பேச்சு!

 எஸ்.இராஜேந்திரன்

நான் பணிபுரியும் கல்லூரி ஆண்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்த ஓவியர் பத்ம மனோகர் தேவதாஸ் பேச்சு. ‘எனக்குப் பார்வைக் குறைபாடு வந்த பின், இருள் ஒரு பொருட்டே இல்லை. இருளில்கூட என்னால் ஓவியம் வரைய முடிகிறது’ என்று எங்கள் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய பேச்சு.

 எம். விக்னேஷ்

லியோனி பேச்சுதான்! ஏற்ற இறக்கமா எப்படிப் பேசி முடிச்சாலும் சிரிப்பை அடக்க வெகு நேரமாகிவிடுகிறது.

 பாரதிமுருகன்

சிறுவயதில் எங்கள் ஊரில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசுகிறார் என்ற சுவரொட்டிகளைப் பார்த்துவிட்டு, கூட்டத்திற்கு என் தந்தை என்னையும் கூட்டிச் சென்றார். ஜெயகாந்தன் பேச்சு அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தொனியில் இருந்ததாக சந்தேகப்பட்ட என் தந்தை, எரிச்சலுடன் பாதியிலேயே என்னையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். அதனாலேயே அந்த மேடைப் பேச்சு மறக்க முடியாததாகி விட்டது.

 எம்.கலையரசி

கமலுக்கு நடந்த பாராட்டு விழாவில், வடிவேலு ‘தேவர் மகன்' பட ஷூட்டிங்கில் சிவாஜிக்கும் அவருக்கும் இடையே நடந்த சம்பவத்தை அரங்கமே அதிரும் அளவுக்கு நகைச்சுவையாக விவரித்தாரே... அதுதான்!

ParveenF7

ஆஸ்கர் விருது பெற்ற பின் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் பேசியது.

SriRam_M_20

கருணாநிதியின் புதுச்சேரி உரை. ‘எனக்குத் தொண்டை சரியில்லை. அதனால் தமிழர்களுக்கான தொண்டை நிறுத்திவிட மாட்டேன்’ என்று தனது தொண்டை சரியில்லாத நிலையில் சிலேடையாக ஆற்றிய உரை.

Vaigaisuresh9

பண்டிகைகளை சிறுவயதில் நீங்கள் கொண்டாடியதற்கும் இப்போது கொண்டாடுவதற்கும் என்ன வித்தியாசம்?

தியேட்டரில் படம் பார்ப்பதற்கும், ஓ.டி.டி-யில் படம் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்! அது ஆரவாரமான மகிழ்ச்சி; இது சுமாரான மகிழ்ச்சி!

 கீதா கிருஷ்ணரத்னம்

சிறு வயதில் பண்டிகைக் கால மகிழ்ச்சி என்பது ‘சோளா பூரி' போல் பெருத்து இருந்தது. இன்று அது ‘பானிபூரி' போல் சுருங்கிவிட்டது!

 கீ.ரவிச்சந்திரன்

முன்பெல்லாம் இரண்டு சட்டை, இரண்டு டவுசர் எடுப்பாங்க. காலப்போக்கில் அது ஒரு சட்டை, ஒரு டவுசராக மாறியது. சிறிது காலம் சென்ற பின் ஒரு சட்டை மட்டும் எடுத்துத் தந்தாங்க. இப்ப ஒரு மாஸ்க் மட்டும்தான் எடுத்திருக்கேன்.

 Vasanth920

அப்போல்லாம் டி.வி-யில 3 நாள் புதுப்படம் போடுவாங்க. இப்ப இரண்டு நாள் சீரியல் போட்டுட்டு, ஒருநாள்தான் புதுப்படம் போடறாங்க!

San8416

அப்போ, ‘உலகத் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக' என்று 6 மாதத்திற்கு முன் வந்த திரைப்படங்களை டி.வி-யில் ஆவென்று வாய்பிளந்து கண்டு ரசித்தோம். இப்போ, உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக திரைக்கு வராத புதிய படங்களை நேரடியாக ஓ.டி.டி-யில் கண்டு காண்டாகிறோம்!

JaNeHANUSHKA

இன்னும் மனசுல குழந்தைத்தனம் இருக்கு சார்!

அன்று பண்டிகை முடியப் போகும் மாலை வேளையில் ‘நாளை பள்ளிக்கூடம் போக வேண்டுமே’ என்று மூடவுட் ஆகும். இன்று பண்டிகை முடியப் போகும் மாலை வேளையில் ‘நாளை அலுவலகத் திற்குச் செல்ல வேண்டுமே’ என்று மூடவுட் ஆகுது!

NedumaranJ

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. இந்திய அணிப் பயிற்சியாளராக டிராவிட்டுக்கு பதில் நம்மூர் பிரபலம் ஒருவர் ஆகலாமென்றால் உங்களின் சாய்ஸ் யார்?

2. ‘இவர் நடிக்க வராம இயக்குநரா மட்டுமே இருந்திருந்தா நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும்’ என உங்களை யோசிக்க வைத்த இயக்குநர்/நடிகர் யார்?

3. நீங்கள் பார்த்துச் சிரித்த அண்ணன் - தங்கை அட்ராசிட்டி ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

4. மற்றவர்கள் கேள்விபட்டிராத, உங்கள் ஊரின் பிரபலமான உள்ளூர் விளையாட்டு ஒன்றைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்!

5‘வானத்தைப் போல’ படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் அண்ணன் தம்பிகளாக யார் யார் நடிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com