Published:Updated:

வாசகர் மேடை: சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்!

நிர்மலா சீதாராமன்

மினி பஸ்ஸில் ஏறி ‘தூதுவளை இலை அரைச்சு’ பாட்டுக் கேட்காம இறங்கினதே கிடையாது

வாசகர் மேடை: சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்!

மினி பஸ்ஸில் ஏறி ‘தூதுவளை இலை அரைச்சு’ பாட்டுக் கேட்காம இறங்கினதே கிடையாது

Published:Updated:
நிர்மலா சீதாராமன்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க ஜாலியான யோசனை தரவும்!

மொட்டை வெயிலில் டிராஃபிக் போலீஸ் டியூட்டி பார்க்க வைக்கலாம். அவங்க கஷ்டம் கொஞ்சமாவது புரியும்.

ஆர்.பிரசன்னா

போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களை ஓரிடத்தில் கூட்டி 8 மணிநேரம் தமிழ் ஆசிரியர்களை வைத்துத் தமிழ் இலக்கணப் பாடங்களை நடத்த வேண்டியதுதான். ஜென்மத்திற்கும் விதிகளை மீறுவார்களா என்ன?

அ.சுகுமார்

ஒரு வருஷத்திற்கு ஒன்லி சைக்கிள் மட்டும்தான் ஓட்ட அனுமதிக்கணும். ஜாலியா ஓட்டிக்கிட்டுத் திரியட்டும்.

கி.சரஸ்வதி

சாலையிலுள்ள மேடுபள்ளங்களைச் சீரமைக்கச் சொல்லலாம். தண்டனையும் ஆச்சு, சாலையையும் சீரமைத்த மாதிரி ஆச்சு.

DevAnandR155

அண்ணாமலை படித்த இருபதாயிரம் புத்தகங்களின் பெயர்களையும் வரிசையாக வெள்ளைத்தாளில் எழுதச் சொல்லலாம்.

kayathaisathya

கார் இல்லாமல், பைக் இல்லாமல், வாயினால் ஹாரன் அடித்துக்கொண்டு, கை கால்கள் கொண்டு கார், பைக் ஓட்டுவது போல 5 கி.மீ தூரத்திற்கு ஓட்டிக் காட்டச் சொல்லலாம்.

amuduarattai

ஒரு மணி நேரம் உச்சி வெயிலில் நிறுத்தப்பட்ட பைக்கின் சீட்டில், ஆடாமல் அசையாமல் அஞ்சு நிமிஷம் அமர்ந்திருக்க வேண்டும்!

LAKSHMANAN_KL

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு மாதம் இன்டர்நெட் வசதிகளைத் தடை செய்யலாம்.

Pradeepn02

நிர்மலா சீதாராமன் பயோபிக் எடுத்தால் எந்த ஹீரோயின் நடிக்கலாம்?

வாசகர் மேடை: சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்!

சௌகார் ஜானகி நடித்தால் பொருத்தமாக இருக்கும்!

ப.சோமசுந்தரம்

ரேவதி நடித்தால் படு பாந்தமாக இருக்கும்.

இரா.வசந்தராசன்

ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருப்பார்.

பஞ்சாபகேசன்

ஆஷா சரத் (பாபநாசத்தில் ஐ.ஜி-யாக நடித்தவர்).

ஆர்.ஹரிகோபி

கங்கனா ரணாவத் (நிதியமைச்சராக உருமாறும் ஆற்றல் அவர் நடிப்புக்கு உண்டு)

எம்.கலையரசி

ரோஹிணி. வயது உட்பட சகலமும் பொருத்தம்.

அ.பச்சைப்பெருமாள்

ரஞ்சிதா நடித்தால் உயரம், முகவெட்டு எல்லாம் சரியாகப் பொருந்தி வரும்.

வன்னி தங்கம் ராதா

சரண்யா பொன்வண்ணன்.

சு.அருண்பிரகாஷ்

எழுத்தாளர் சிவசங்கரியை நடிக்க வைத்தால் சரியாக இருப்பார்!

absivam

வடிவுக்கரசி பெஸ்ட் சாய்ஸ் (முன்கோபத்துக்கு சரியான ஆள்).

Sivakum31085735

‘இப்போதைக்கு பா.ஜ.க-வில் பேசக்கூடக் கூப்பிடுறதில்லை'னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கிற விஜயசாந்தியையே கலக்க வைக்கலாம்!

BaanaalPrakash

மினிபஸ் பற்றிய உங்களின் நாஸ்டாலஜியா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

மினி பஸ்ஸில் ஏறி ‘தூதுவளை இலை அரைச்சு’ பாட்டுக் கேட்காம இறங்கினதே கிடையாது.

மஹஜூதா

‘‘அண்ணே, அடுத்த ஸ்டாப்ல அந்தப் பொண்ணு ஏறுனதும் ‘உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்’ பாட்டைப் போடுங்க’’ன்னு பஸ் டிரைவரிடம் சொல்லிக் காதல் வளர்த்தது.

பெ.பாலசுப்ரமணி

நகரத்தில் மினிபஸ் ஒரு காதல் வாகனம்! கிராமத்தில் மினிபஸ், பஸ் போர்வை போர்த்திய ஒரு மினி சரக்கு லாரி!

எஸ்.கெஜலட்சுமி

இந்தப் பாட்டைத் தான்தான் இசையமைச்சேன்னு இசையமைப்பாளரே மறந்துபோன பாடல்களை எல்லாம் தேடிப் பிடிச்சு ஒலிபரப்பற ஒரே இடம் மினிபஸ்தான்.

அஜித்

கியர் எங்கே, கிளட்ச் எங்கே, பிரேக் எங்கே என உள்ளிருந்து ஒவ்வொருமுறையும் பார்ப்பேன், இருக்குற மாதிரி தெரியாது. ஆனா, விசில் சத்தம் கேட்டா, சத்தம் நிக்கிறதுக்குள்ள வண்டி நின்னுரும்.

இரா. அனுசூயா

கை நீட்டிய இடத்தில் ஏறிக்கலாம், கை காட்டிய இடத்தில் இறங்கிக்கலாம்!

நா.இரவீந்திரன்

கேஷ் ஆன் டெலிவரி போல ஊரில் இறங்கிய பின் நண்பனிடம் டிக்கெட் காசை வாங்கிக் கொடுத்தது.

PG911_twitz

வழக்கமா போகிறவர்களுக்கு நடத்துநர், ஓட்டுநர்களோடு பரிச்சயம் ஏற்பட்டுவிடும். அதன்பின் நாம் கேட்கும் பாட்டெல்லாம் போடுவார்கள். சில நேரங்களில் ‘நீயே வந்து உனக்குப் பிடிச்ச பாட்டைப் போடு’ என்பார்கள். நம் சொந்தக் காரில் பயணிப்பது போலவே இருக்கும்.

IamUzhavan

ரோட்டுல போகுதா, வீட்டுக்குள் போகுதான்னு தெரியாது. சில தெருக்களில் செல்லும்போது அப்படி நினைக்கத் தோன்றும்.

urs_venbaa

மினிபஸ்ல முதல் ஸ்டாப்ல ஏறி கடைசி ஸ்டாப்ல இறங்குனா, இளையராஜா இசைல ஒரு பாரதிராஜா படம் பார்த்த பீல் இருக்கும்.

SaiAzhagesh

பெட்டிக்கடை, கோழிக்கடை, மருந்துக்கடை... இவையெல்லாம் பஸ் ஸ்டாப் ஆகிப்போயின.

Sathyaraj72

‘இவர் மட்டும் இந்தக் கட்சில இல்லாம அந்தக் கட்சில இருந்திருந்தா பெரிய ஆளா வந்திருப்பார்' என நீங்கள் நினைக்கும் தமிழக அரசியல்வாதி யார், ஏன்?

கமல் மட்டும் ‘மக்கள் நீதி மய்யம்' ஆரம்பிக்காமல் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருந்தால், இந்நேரம் எங்காவது ஒரு மாநில கவர்னராகியிருப்பார்!

மூ.மோகன்

திருநாவுக்கரசர். அடிக்கடி கட்சி மாறாமல் இருந்திருந்தால், அ.தி.மு.க-வின் இன்றைய நிலைக்கு அக்கட்சியில் அசைக்க முடியாத தலைவராக இருந்திருக்கலாம்.

எஸ்.இராஜேந்திரன்

தமிழருவி மணியன். நீரோடை போல பேச்சாற்றல், தமிழறிவு, அர்ப்பணிப்பு, தலைவர் மேல் மாறாத பாசம். இவர் மட்டும் கலைஞரை சரணடைந்திருந்தால் தி.மு.க-வில் ஒரு சக்தியாக வந்திருப்பார்.

மல்லிகா குரு

வைகோ. தி.மு.க-விலேயே தொடர்ந்திருந்தால் அதன் நவீனக் கொள்கைகளைக் கடைக் கோடிக்கும் கொண்டு சேர்த்து, தொடவேண்டிய உயரங்களைத் தொட்டிருப்பார்.

மன்னார்குடி இராஜகோபால்

27 வருடங்களாக ரஜினியின் க.க.க-வில் (கருவிலேயே கலைந்த கட்சியில்) இருந்த எல்லாரும், வேறு எந்தக் கட்சிக்கு மாறியிருந்தாலும் கவுன்சிலராகவாவது முன்னேறியிருக்கலாம்.

சா.செல்வராஜ்

எஸ்.வி.சேகர். பா.ஜ.க-வில் இருந்திருந்தா பெரிய ஆளாக வந்திருப்பார். ஓ மை காட், அவர் பா.ஜ.க-வுலதான் இருக்கிறாரா?!

மலர்சூர்யா

கார்த்திக் ஜெ.தீபா கட்சியிலோ அல்லது ஜெ.தீபா கார்த்திக் கட்சியிலோ சேர்ந்து கட்சியை பலப்படுத்தி தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு டப் கொடுக்கலாம்.

சத்தியமூர்த்தி.G

சரத்குமார். தி.மு.க-விலேயே இருந்திருந்தால் அமைச்சர் பதவி கிடைத்திருக்கலாம்.

Anvar_officia

சைதை துரைசாமி அ.தி.மு.க-வில் இல்லாமல், தி.மு.க-வில் இருந்திருந்தால் பெரிய ஆளாக வந்திருப்பார் என்பது நிச்சயம். நேர்மை, தயாள குணம் கொண்ட அவர் அ.தி.மு.க-வில் இருப்பது துரதிர்ஷ்டம். இப்போதும் குடிமுழுகிப் போகவில்லை. கட்சி மாறினால் நல்லது.

RajuBalasubram7

டி.ராஜேந்தர். தி.மு.க-வில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், தொடர்ந்து அந்தக் கட்சியிலயே இருந்திருந்தால் உயர்ந்த இடத்திற்குச் சென்றிருப்பார்.

premprathap18

வாசகர் மேடை: சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்!

ரத்தம், அரிவாள் என இயக்குநர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் மதுரை வட்டாரத்தைக் காப்பாற்றச் சில ஐடியாக்கள் ப்ளீஸ்!

அதே ரத்தம், அரிவாள் கொண்டு வடிவேலுவை வைத்துப் படம் எடுத்தால் கலக்கலாக இருக்குமே!

எம்.கல்லூரி ராமன்

மதுரை வட்டாரத்தை மையமாக வைத்து, இயக்குநர் விக்ரமன் லா...லலல்லா... என ஹிட் படமொன்று கொடுத்தால் மதுரை வட்டாரம் காப்பாற்றப்படக்கூடும்!

எம்.சேவியர் பால்

நம்ம ராமராஜனைத் தேடிப் பிடித்து, மதுரை மரிக்கொழுந்து வாசத்தை மறுபடியும் மணக்க வெச்சுட்டாப்போச்சு!

பா.து.பிரகாஷ்

வாயில அடிங்க... வாயில அடிங்க... சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்னு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க.

AlwaysMagizhchi

‘நம்ம படத்தோட கதை மதுரைல நடக்குது'ன்னு இயக்குநர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே ஹீரோக்கள் உஷாராகி, அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தனியறையில் அடைத்து, ‘காந்தி' படத்தை ரிப்பீட் மோடில் காட்டினால், அவர்களே 24 மணி நேரத்திற்குள் ‘வேணாம் இந்த அரிவாள், ரத்தம்'னு கதறித் துடிப்பாங்களே!

JaNeHANUSHKA

‘அரிவாள் வேணாம்னு சொல்லல...வேணும்னு சொல்லல...’ன்னு நடுநிலையா ஏதாவது சொல்லி ‘அருவாநாயகம்'ன்னு அருவா இல்லாம ஒரு படம் எடுத்து எல்லாரையும் திருத்தி, ‘மதுரை நாயகன்'னு பட்டம் வாங்கலாம். வேற யாரு, நம்ம நம்மவர்தான்!

ZY1KtAKuv5F0Ktl

வாசகர் மேடை: சிட்னி நகரத்துல கத்திக் கலாசாரம்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

* ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் கதை என்னவாக இருக்கலாம். அதன் ஒன்லைன் ப்ளீஸ்...

* அலுவலகங்களில் ஹெச்.ஆர் என்ற பதவி வருவதற்கு முன்பு, பின்பு..?

* அறிவிப்பு, வாபஸ் என்று தொடரும் தி.மு.க ஆட்சிக்காக ஸ்டாலினுக்கு ஒரு சிறப்புப்பட்டம் கொடுப்பது என்றால் என்ன கொடுக்கலாம்?

* தமிழ் சினிமாக்களில் நீதிமன்றக் காட்சிகளில் உங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாதது எது?

* செல்லப்பிராணிகளுக்குப் பேசத் தெரிந்தால் அவை நம்மிடம் என்ன சொல்லும்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com