Election bannerElection banner
Published:Updated:

மீண்டும் ஒரு ஸ்டெர்லைட்! - காப்பர் ஆலை அமைக்க இடம் கேட்கும் வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இந்தியாவின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிர (காப்பர்) உருக்காலை அமைக்க திட்டமிட்டிருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில், 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கொடுத்த அழுத்தத்தையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறி, தமிழ்நாடு அரசால் 2018 மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேதாந்தா நிறுவனம். ஆனால் `ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை தூத்துக்குடி மக்கள், போராட்ட குழுவினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் வரவேற்றனர்.

இந்தச்சூழலில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இன்னும் மூன்றாண்டுகள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்று சமூக செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.


நேற்று வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட விவர அறிக்கையில், ``இந்தியாவின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிர (காப்பர்) உருக்காலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காப்பர் ஆலை அமைப்பதற்கு துறைமுகம் அருகில், 5 மில்லியன் டன் (5 MTPA) அளவிலான பொருள் இயக்கத்திற்கு உகந்த வகையில் சாலை, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகளுடன் கூடிய 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

மேலும், ``இந்தத் திட்டத்தினால் சுமார் 10,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். அத்துடன் இந்த திட்டத்தை அனுமதிக்கும் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3,000 கோடி வரை வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்வமுள்ள மாநில அரசுகள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேதாந்தா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த தகவலில்,`` வருகின்ற ஆண்டுகளில் இந்தியாவின் காப்பருக்கான தேவைகள் அதிகரிக்கும். மின்சார வாகனங்கள் போன்ற புதிய தொழில்நுட்ப வளர்சிக்கு காப்பர் உற்பத்தி இன்றியமையாதது” எனக் கூறினார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுக்கு 4,00,000 மெட்ரிக் டன் காப்பரை உற்பத்தி செய்து வந்தது. புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் ஆலையால் 5,00,000 மெட்ரிக் டன் அளவிலான காப்பரை உற்பத்தி செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், காப்பரைப் பயன்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME & MSME) சார்பாக, `` இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பர் தேவையில் 40% பங்கினை பூர்த்தி செய்துவந்த, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்" என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு