Published:Updated:

வேதா நிலையம்: ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி!

ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி!
ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி!

நீதிமன்றம் நேற்று, நினைவு இல்லத்தைத் திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று திறக்கப்பட்ட நிலையில், அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மற்றப்பட்டு இன்று திறக்கப்பட்டது. முன்னதாக நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், அந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது.

வேதா நிலையம்
வேதா நிலையம்

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்குப் புது வண்ணம் தீட்டப்பட்டு, பொருள்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்... சிறப்புப் புகைப்படத் தொகுப்பு #SpotVisit

இந்தநிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நினைவு இல்லத்தைத் திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் நேற்று நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நினைவு இல்லத் திறப்புவிழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. நேற்று திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.

இந்தநிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை பார்வையிட உயர் நீதிமன்றத் தனிநீதிபதி அனுமதி மறுத்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. `வேதா நிலையத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட இந்தமனு மீதான விசாரணை நாளை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பாக விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். முன்னதாக ஜெயலலிதா உருவப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டி, திறந்துவைத்த முதல்வர் இல்லத்துக்குள் சென்று குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து அமைச்சர் மற்றும் துணை முதல்வருடன் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி.

அடுத்த கட்டுரைக்கு