Published:Updated:

வீகன் என்ற பெயரில் விஷமப் பிரசாரம்!

பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச்சலவை
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச்சலவை

அசைவம் சாப்பிடுவது பாவச்செயல்! - பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச்சலவை

‘நாங்க இவ்வளவு நாள் தப்பு பண்ணிட்டோம். அண்ணா, இனிமே அசைவமெல்லாம் சாப்பிட மாட்டோம்’ என்று எழுதியிருக்கிறான் ஒரு மாணவன்.

‘இப்போதுதான் நாய், கோழி படும் பாடு தெரிகிறது. இனிமே சிக்கன் பிரியாணி சாப்பிட மாட்டேன்’ என வருத்தப்பட்டிருக்கிறான் மற்றொரு மாணவன்.

‘விலங்குகள் நல ஆர்வலர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அரவிந்தன் என்பவர், வீகன் உணவு முறைக்கு மாறச்சொல்லி கோவையில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை மூளைச்சலவை செய்துவருகிறார். அப்படி அவர் எடுக்கும் செஷன்களில் மாணவர்கள் குற்ற உணர்வுடன் அவருக்கு எழுதிய பின்னூட்டப் பதிவுகளில் சிலதான் மேலே உள்ளவை.

பிரசாரத்தில் அரவிந்தன்...
பிரசாரத்தில் அரவிந்தன்...

இவற்றையெல்லாம் தனது ஃபேஸ்புக் பதிவில் அவரே பகிர்ந்திருக்கிறார். இப்படி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கொஞ்சநஞ்சம் பேர் அல்ல... 1.38 லட்சம் மாணவர்களிடம் வீகனிசத்தைத் திணித்திருக்கிறார் அரவிந்தன்’ இப்படி கோவைப் பகுதியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

அது என்ன வீகன்? தமிழில் அதை ‘நனிசைவம்’ என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, உணவில் கறி, முட்டை என நேரடி அசைவத்தை மட்டுமல்ல... பால், தயிர், பனீர், நெய், வெண்ணெய் என விலங்குகள்மூலம் பெறப்படும் எல்லா உணவுகளுக்கும் தடை. இதைத்தான் மாணவர்களையும் பின்பற்றச்சொல்லி பிரசாரம் செய்துவருகிறார் அரவிந்தன்.

“தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் என் பிள்ளைகள் திடீரென வீட்டில் `அசைவ உணவு வேண்டாம்’ என மறுத்தார்கள். விசாரித்தபோது, ‘அது தப்புனு ஸ்கூல்ல சொன்னாங்க’ என்றனர். குழந்தைகள் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய இவர்கள் யார்? விசாரித்ததில், ‘Humane Animal Society’ என்ற அமைப்பினர் இவர்கள் பள்ளிக்கு வந்து சென்றது தெரியவந்தது. இப்போதுவரை என் குழந்தைகள் அசைவ உணவு சாப்பிட மறுக்கிறார்கள்” என்கிறார் ஒரு தந்தை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்துவரும் சிறுவனின் தாய், “ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் எங்கள் வீட்டில் அசைவம் சமைப்போம். திடீரென என் மகன் ‘சிக்கன், முட்டை சாப்பிட மாட்டேன்’ என அடம்பிடிக்க ஆரம்பித்தான். ‘எங்க ஸ்கூலுக்கு ஒரு அங்கிள் வந்தாரு. நமக்கு கத்தியில குத்தினா வலிக்கும்ல... அப்படித்தானே சிக்கனுக்கும் வலிக்கும். அதைச் சாப்பிடுறது தப்புன்னு சொன்னாரு’ என்று அழத் தொடங்கிவிட்டான். சத்துக்காக எங்களால் குழந்தைக்குக் கொடுக்க முடிந்தது சிக்கனும் முட்டையும்தான். அதையும் கெடுத்தால் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகிறார்.

வீகன் என்ற பெயரில் விஷமப் பிரசாரம்!

பள்ளிகளில் ‘Why Vegan?’ என்ற வீடியோ, குழந்தைகளுக்குக் காட்டப்படுகிறது. அதில் வெளிநாட்டு இறைச்சிக்கூடங்களில் கோழி, ஆடு, மாடு, ஒட்டகம், பன்றி போன்ற உயிரினங்கள் கொத்தாகக் கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகள், அசைவ உணவைச் சாப்பிடுவதை ஒரு பாவச்செயலாக எண்ணி பதைபதைக்கிறார்கள். சில குழந்தைகள் இதற்குப் பிறகு பால்கூடக் குடிப்பதில்லை. ‘உன்னால் என் பிள்ளை பால்கூடக் குடிப்பதில்லை’ என்று அரவிந்தனிடம் பல பெற்றோர்கள் வருத்தப்பட்டதையும், சாதனைபோல் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீகன் உணவு முறை குறித்து விமர்சிக்கும் ‘சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய’ நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி, ‘‘நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் 90 சதவிகிதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். உலக சுகாதார நிறுவனமே ‘மனிதர்கள் தங்களது உடல் எடைக்குத் தகுந்தாற்போல் கறி சாப்பிட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சீராக இருக்கும்’ என்று கூறியிருக்கிறது. மனிதர்களுக்கு விலங்குகளின் புரதம் மிகவும் அவசியம். அசைவ உணவு சாப்பிடாதவர்கள் பால், தயிர், நெய், பனீர், பால் வகை இனிப்புகள்மூலம் அந்தச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது ஒரு கூட்டம், ‘பாதாம் பால் அரைத்துக் கொடுங்கள்’ எனக் கிளம்பியுள்ளது. எளிய மக்களிடம் பாதாம், பிஸ்தா, புரொக்கோலி சாப்பிடு என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? அசைவம் சாப்பிடாத குழந்தைகளிடம், அவர்களது வீட்டுக்குத் தெரியாமல் கறியைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியான அத்துமீறல்தான் இதுவும்” என்றார் கோபமாக.

கார்த்திகேய சிவசேனாபதி, மினி வாசுதேவன், பரிமளாதேவி
கார்த்திகேய சிவசேனாபதி, மினி வாசுதேவன், பரிமளாதேவி

உணவியல் நிபுணர் பரிமளா தேவி, “நம் நாட்டில் புரதச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம். அதனால்தான், சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான B12 சத்து அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அதை நிறுத்தினால் உடலில் சில குறைபாடுகள் ஏற்படும். முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்புள்ளது” என்றார்.

கோவையில் இயங்கிவரும் Humane Animal Society என்ற அமைப்பின் நிறுவனர் மினி வாசுதேவன். தெருவில் காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட நாட்டுநாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, மறுவாழ்வு கொடுப்பது போன்ற பணிகளைச் செய்துவருகிறது இந்த அமைப்பு. ஆனாலும், இவர்களின் முழுநேரப் பணி, வீகன் உணவு முறை பிரசாரமே. இதன் சார்பாகத்தான் இயங்கிவருகிறார் அரவிந்தன். அவருடன் ஹீனா ஆச்சர்யா என்பவரும் செயல்பட்டுவருகிறார். அசைவ உணவைச் சாப்பிடுவது கொலைக்குற்றத்துக்குச் சமம் என மாணவர்களிடம் பிரசாரம் செய்வதுதான் அரவிந்தனின் பிரதான பணி. வீகன் ஸ்வீட்ஸ், இவரின் தொழில்.

மினி வாசுதேவனிடம் பேசினோம். “அரவிந்தன் எங்கள் தன்னார்வலர்தான். அவர் வீகன் பிரசாரத்தை தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் செய்துவருகிறார். பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் ஆசிரியர்கள் முன்னிலையில்தான் மாணவர்களிடம் பேசுவோம். நாங்கள் வீகன் தொடர்பாக யாருக்கும் மூளைச்சலவை செய்வதில்லை” என்றார்.

அரவிந்தனிடம் பேசினோம். “மாணவர்களிடம் விலங்குகளின் உரிமை, நலன் குறித்துதான் பேசினோம். அதில் ஒரு பகுதியாகத்தான் வீகனிசம் பற்றிப் பேசினோம். பள்ளிகளில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள், நிறுவனங்களில் பேசியுள்ளேன். அந்த எண்ணிக்கைதான் 1.38 லட்சம். நான் மூளைச்சலவை செய்ததாகச் சொல்வதில் உண்மையில்லை” என்றவரிடம்,

‘‘உங்களின் முகநூலிலேயே, ‘அசைவு உணவு சாப்பிட மாட்டோம்’ என்று மாணவர்கள் குற்ற உணர்ச்சியுடன் எழுதிய பின்னூட்டங்களையெல்லாம் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘பெரும்பாலான தனியார் பள்ளி களிலிருந்து எனக்கு அழைப்புவிடுத்தனர். அதன் அடிப்படையில்தான் பேசினேன். தவிர, 18 அரசுப் பள்ளிகளில் பேசியிருக்கிறேன். அதற்கு, உரிய அனுமதி வாங்கியுள்ளேன். இங்கெல்லாம் வீகன் குறித்துப் பேசியது ஒரு சதவிகிதம்தான். சொல்லும் வார்த்தைக்கு மட்டும்தான் நான் பொறுப்பு. அதை அவர்கள் புரிந்துகொள்வதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல” என்றார் பதற்றத்துடன்.

பள்ளிகளில் இப்படியான பிரசாரத்துக்கு அனுமதித்தது தொடர்பாக கோவை முதன்மை கல்வி அலுவலரான அய்யண்ணனிடம் கேட்டோம்.

“முந்தைய காலகட்டங்களில் அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், இனி இப்படி யாரையும் பள்ளிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையாளரான ஸ்வரன்குமார் ஜடாவத்திடம், ``மாநகராட்சிப் பள்ளிகள் சிலவற்றில் இந்தப் பிரசாரத்தை அனுமதித்தது எப்படி?’’ என்று கேட்டோம்.

“எங்களிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை. இது தொடர்பாக மாநகராட்சிப் பள்ளிகளின் முதல்வர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். தவறு நடந்தது உறுதியானால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற எந்தத் தன்னார்வலர்களையும் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளோம்” என்றார் கண்டிப்புடன்.

சைவமோ, அசைவமோ அவரவரின் முடிவாக இருக்க வேண்டும்; திணிப்பாக இருக்கக் கூடாது.