Published:Updated:

விண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்?

விமானம்
பிரீமியம் ஸ்டோரி
விமானம்

வேலைகள் முடக்கம்... மக்கள் கலக்கம்

விண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்?

வேலைகள் முடக்கம்... மக்கள் கலக்கம்

Published:Updated:
விமானம்
பிரீமியம் ஸ்டோரி
விமானம்

இந்தியா முழுவதும் வான்வழி இணைப்பை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது மத்திய அரசு. அதற்காக, பயன்பாடு இல்லாத விமான நிலையங்களை ‘உதான்’ திட்டத்தின்கீழ் செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், ஓசூர் உட்பட சில நகரங்களிலும் விமான சேவை கொண்டுவரப்பட உள்ளது. அந்த வகையில், சேலம் விமானநிலையம் பயன்பாட்டுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. 2018 மார்ச் முதல் ‘ட்ரூஜெட்’ நிறுவனம் 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை சென்னை - சேலம் இடையே இயக்கிவருகிறது. ``சேலத்துடன், வேலூர் விமானநிலையமும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது’’ என்று ஆதங்கப்படுகின்றனர் வேலூர் மக்கள்.

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை

ஆங்கிலேயர் காலத்தில், வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமானநிலையம் அமைக்கப் பட்டது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு பராமரிப்பில்லாமல் கைவிடப்பட்ட வேலூர் விமான நிலையத்தை, 120 ஏக்கரில் விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம் உட்பட பல்வேறு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. முதற்கட்டமாக, சென்னை - வேலூர் - பெங்களூரு இடையே 18 பயணிகள் அமர்ந்து செல்லும் சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவுசெய்யப் பட்டுள்ளது. சோதனை ஓட்டமும் நடந்தது.

தொடர்ந்து, ‘2020, ஜனவரி முதல் வேலூரில் விமானங்கள் இயக்கப்படும்’ என்று அதிகாரிகள் அறிவித்தனர். பணிகள் துரிதமாக நடைபெற்றுவந்த நிலையில், திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ‘‘டெர்மினல் கட்டடம் - ஓடுதளப்பாதைக்கு இடையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய சாலை உள்ளது. இதில் அரை கிலோமீட்டர் சாலையைக் கையகப்படுத்தி மாற்றுப்பாதை வழங்குவதில் பிரச்னை உள்ளது. அதனாலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்கிறார்கள் விமானநிலைய அதிகாரிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விமானநிலையம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கலையரசன் கூறுகையில், ‘‘விமானநிலையம் அமையவுள்ள பகுதியைச் சுற்றிலும் விவசாயிகள் வசிக்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆரம்பத்திலேயே பா.ம.க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. ‘விவசாயிகளுக்கு பாதிப்பு வராது’ என உறுதியளிக்கப்பட்டதால், பா.ம.க அமைதியாகிவிட்டது. பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்தான் விமானநிலையப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். அவர், வேலைகளைப் பிரித்து சிறு ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுத்திருந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட நிதி பிரச்னைகளால் பணிகள் தடைப்பட்டுள்ளன’’ என்றார்.

கலையரசன் - நந்தகுமார் - கதிர் ஆனந்த்
கலையரசன் - நந்தகுமார் - கதிர் ஆனந்த்

விமானநிலையத்தைச் சுற்றிவசிக்கும் மக்களைச் சந்தித்தபோது, ‘‘தார்சாலையைக் கையகப்படுத்துவதில் எங்களுக்குக் கவலையில்லை. பொய்கைபுதூர், நரசிங்கபுரம், நாட்டார்மங்கலம், ஊசூர், ஒடுகத்தூர் உட்பட பல கிராம மக்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகிறோம். விமானநிலையத்தால் எங்களின் வீடு, நிலம் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அதனால்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோமே தவிர, எங்களுக்குத் தொல்லை கொடுக்காமல் விமான சேவை ஏற்படுத்தப்பட்டால் வரவேற்போம். விமான வழித்தடத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலத் தலைநகரங்களும் வேலூருக்கு அருகே அமைந்துள்ளன. விமான நிலையம் வந்தால் எங்கள் பகுதியும் வளர்ச்சிபெறும் என்ற நம்பிக்கைவுள்ளது’’ என்றனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான நந்தகுமார், ‘‘கையகப்படுத்தும் சாலைக்குப் பதிலாக மாற்று இடத்தில் ரோடு போடுவதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விட முடிவுசெய்தனர். அந்தப் பணிகளையும் திடீரென நிறுத்திவிட்டனர். என்ன நடக்கிறது என்று கேட்டால், விமானநிலைய ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் பதில் சொல்வதில்லை’’ என்றார்.

விமானம்
விமானம்

வேலூர் எம்.பி-யான கதிர் ஆனந்த், ‘‘விமானநிலையப் பணிகள் ஏன் தாமதமாகின்றன என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளேன். முதலில், இந்தத் திட்டத்துக்கான அறிக்கையை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறேன். அதை கையில் வாங்கிய பிறகுதான் விமானநிலைய அதிகாரிகள் உண்மையைப் பேசுகிறார்களா, பொய் சொல்கிறார்களா, என்ன பிரச்னை இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். நான் விசாரித்த வகையில், மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி கைகாட்டுகின்றன. விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பேன்” என்றார் உறுதியாக.

விமானநிலைய கண்காணிப்பாளர் மாயப்பன் சுவாமியிடம் பேசினோம். ‘‘சாலைக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்துவருகிறது. விரைவில் தீர்வுகாணப்படும்’’ என்றார்.