Published:Updated:

“மக்களைப் பெத்த மவராசி... மங்களேஸ்வரி வந்துருக்கா!” - ஆசீர்வதிக்கப்படாத பூம் பூம் மாட்டுக்காரர்கள்..

பூம் பூம் மாடு
பிரீமியம் ஸ்டோரி
பூம் பூம் மாடு

இத்தனை வருஷத்துல பொன்னை ஆத்துல இவ்வளவு வெள்ளம் போனதைப் பார்த்ததே இல்லை. எப்பவுமே வறண்டு கிடக்கும். மழைக் காலத்துல கொஞ்சம் தண்ணி போகும்.

“மக்களைப் பெத்த மவராசி... மங்களேஸ்வரி வந்துருக்கா!” - ஆசீர்வதிக்கப்படாத பூம் பூம் மாட்டுக்காரர்கள்..

இத்தனை வருஷத்துல பொன்னை ஆத்துல இவ்வளவு வெள்ளம் போனதைப் பார்த்ததே இல்லை. எப்பவுமே வறண்டு கிடக்கும். மழைக் காலத்துல கொஞ்சம் தண்ணி போகும்.

Published:Updated:
பூம் பூம் மாடு
பிரீமியம் ஸ்டோரி
பூம் பூம் மாடு

‘‘மக்களைப் பெத்த மவராசி... புள்ளையப் பெத்த புண்ணியவதி... மங்களேஸ்வரி வந்துருக்கா... மங்களமா உன்னை வாழ்த்துவா!’’ - இப்படி வீடு வீடாகச் சென்று ஆசீர்வதிக்கிறார்கள் நாடோடி மக்களான பூம் பூம் மாட்டுக்காரர்கள். அனைவரையும் இவர்கள் ஆசீர்வதித்தாலும், இவர்களை மட்டும் விதி ஒருபோதும் ஆசீர்வதித்ததில்லை. அரை வயிற்றுக் கஞ்சிக்கே அன்றாடம் அல்லாடவைக்கிறது. அப்படித்தான் ஒரு கூட்டத்தை ராணிப்பேட்டை, பொன்னையாறு பாலத்துக்கு அடியில் சந்தித்தோம்!

வேலூர் - ராணிப்பேட்டை மாவட்டங்களை இணைக்கும் பழைமையான அந்த பாலத்துக்கு அடியில் நைந்துபோன துணிகளால் கூடாரங்களை அமைத்து வசிக்கிறார்கள் பூம் பூம் மாட்டுக்காரர்கள். அருகிலேயே அனிச்சையாகத் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன அரிதாரம் களைந்த பூம் பூம் மாடுகள். பாத்திரம், பண்டங்களோடு குழந்தைகளையும் பாலத்தில் தொட்டில் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போதெல்லாம் அதிரும் பாலத்தோடு சேர்ந்து குழந்தைகளும் வீறிடுகின்றன. பாம்புகளும் விஷப்பூச்சிகளும் அழையா விருந்தாளிகளாக அடிக்கடி இவர்களைத் தேடி வருவதுண்டு. பாலத்துக்கு அடியில் கால்நடைகளின் தாகம் தீர்க்க குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் தாகம் தணிக்கும் தொட்டியும் அதுதான்!

“மக்களைப் பெத்த மவராசி... மங்களேஸ்வரி வந்துருக்கா!” - ஆசீர்வதிக்கப்படாத பூம் பூம் மாட்டுக்காரர்கள்..

இந்தக் கூட்டத்திலிருக்கும் ரமேஷ் என்பவரின் 2 வயது பெண் குழந்தை அரிதான தோல்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். பாதிப்பின் வீரியத்தை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார் தாய். அவரிடம் மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டுசென்று காட்டும்படி அறிவுறுத்திவிட்டு, அங்கிருக்கும் பெரியவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்...

‘‘சொந்த ஊரு ஆற்காடு பக்கத்துல இருக்குற சத்திரம் கிராமம். பொழப்புக்காக நாப்பது வருஷமா இங்கதான் வசிக்குறோம். எங்ககிட்ட பட்டா நிலம் இல்லைங்க. குடிசை போடுற அளவுக்கு கையில காசும் இல்லைங்க. பூம் பூம் மாட்டைவெச்சு ஆசி வழங்குறது எங்க குலத்தொழில். அதைக் கைவிட முடியாது... சாமிக் குத்தமாகிடும். பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கோயில் திருவிழா, மக்கள் கூடுற இடத்துல வித்தை காட்டுவோம். வீடு வீடாவும் மாட்டை அழைச்சுக்கிட்டு போய் குழந்தைங்களுக்கு ஆசி கொடுப்போம். ‘மங்களேஸ்வரி மங்களமா அருள்வா’னு சொன்னா போதும். அஞ்சு, பத்து போடுவாங்க. ‘தலை ஆட்டுறா... காலைத் தூக்குடா... நமஸ்காரம் பண்றா’னு சொன்னா... பெருமாள் மாடு அப்படியே செய்யும். அப்பல்லாம் மக்கள் எங்களை ஆவலோட எதிர்பார்த்தாங்க. நாங்க வந்து நாலு வார்த்தை சொன்னா நல்லது நடக்கும்னு மக்கள் நம்புன காலம் போயிடுச்சு.

“மக்களைப் பெத்த மவராசி... மங்களேஸ்வரி வந்துருக்கா!” - ஆசீர்வதிக்கப்படாத பூம் பூம் மாட்டுக்காரர்கள்..

பெரிய தாடி, மீசையோடு தலைப்பாகை கட்டிக்கிட்டு, நெத்தியில நாமம் போட்டுக்கிட்டு, அலங்கரிச்ச மாட்டை ஓட்டிக்கிட்டு கவுரதையா நாங்க போன காலமும் மலையேறிப் போயிடுச்சு. இன்னைக்கெல்லாம் ரெண்டு படி அரிசியும், நூறு இருநூறு பணமும் கிடைக்குறதே பெரிய விஷயமா போச்சு. கிடைக்கிற வருமானத்துல முதல் சாப்பாடு மாட்டுக்குத்தான் போடணும். நம்மளையே நம்பியிருக்குற வாயில்லா ஜீவன் அது. மிச்சக் காசு குழந்தைக்குப் பால் வாங்கவும், சாப்பாட்டுக்கும் சரியாப் போகுது. அதுலயும் நடுவுல இந்த கொரோனா வந்ததுலருந்து நடமாட்டம் குறைஞ்சு, எங்க வாழ்க்கையே சிதைஞ்சுபோச்சு... அதுக்குப் பின்னாடி மூணு வேளைச் சாப்பாட்டை ரெண்டு வேளையா குறைச்சுக்கிட்டோம்” என்றவர்கள், தங்கள் வாழ்விடப் பிரச்னை பற்றியும் சொன்னார்கள்...

“இத்தனை வருஷத்துல பொன்னை ஆத்துல இவ்வளவு வெள்ளம் போனதைப் பார்த்ததே இல்லை. எப்பவுமே வறண்டு கிடக்கும். மழைக் காலத்துல கொஞ்சம் தண்ணி போகும். ஆனா, திடீர்னு போன மாசம் ஒருநாள் ராத்திரி பேய் மாதிரி வெள்ளம் வந்துடுச்சு. நல்லவேளையா முன்னாடியே அதிகாரிங்க ஓடியாந்து, எங்களை எச்சரிச்சு வெளியேத்திட்டாங்க. நாங்களும் குழந்தை குட்டிகளையும், மாடுகளையும் பத்திரமா கரையேத்திட்டோம். காலையில பார்த்தா பாலத்தைத் தொட்டுக்கிட்டு வெள்ளம் போகுது... எங்க பண்டம், பாத்திரத்தையெல்லாம் வெள்ளம் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு. தங்குற இடம் போயிட்டதால, ஊர்ல தலை சாய்ஞ்சு படுக்க இடம் கிடைக்காம படாதபாடு பட்டுட்டோம். நாங்களாச்சும் பரவாயில்லை... ரோட்டோரம் படுத்துக்குவோம்... ஆனா, எங்களை நம்பி இருபது மாடுங்க இருக்குங்களே... அதுங்களை எங்க தங்கவெக்குறது? ஒருவழியா தண்ணி வத்தின பிறகு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் திரும்பவும் இங்கே வந்தோம்” என்றவர்கள் அருகிலிருந்த மாடு ஒன்றைப் பார்த்து, “யம்மா, மங்களேஸ்வரி... இந்த தம்பிங்களுக்கு கஷ்டம் தீருற மாதிரி ஆசீர்வதிச்சு அனுப்பும்மா...” என்று சத்தமாகச் சொல்ல... எங்கோ பார்த்துக்கொண்டிருந்த அந்த மாடு நம்மை நோக்கித் திரும்பி உற்சாகமாகத் தலையாட்டியது!

“மக்களைப் பெத்த மவராசி... மங்களேஸ்வரி வந்துருக்கா!” - ஆசீர்வதிக்கப்படாத பூம் பூம் மாட்டுக்காரர்கள்..

“மத்தவங்க கஷ்டத்தைக் கேட்டு, அதை மாடுகிட்ட சொல்லி, அவங்க கஷ்டம் தீர ஆசீர்வதிக்குறதுதான் எங்க குலத்தொழில்... ஆனா, இன்னைக்கு எங்க கஷ்டத்தை காது கொடுத்துக் கேட்கக்கூட ஆளில்லை... தமிழ்நாடு கவர்மென்ட்டுதான் எங்களுக்கு நிரந்தரமா தங்குறதுக்கு வீடுங்க கட்டிக் கொடுக்கணும்... எங்க அடுத்த தலைமுறையாச்சும் படிச்சுப் பொழச்சுக்கும்!” என்று ஒரு பெரியவர் சொல்ல... அவர் பாஷை புரிந்ததுபோல தலையாட்டுகின்றன பூம் பூம் மாடுகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism