வேலூர்: `கைவிடப்பட்ட பெற்றோர்!’ - மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டுகொடுத்த கலெக்டர்

வயதான பெற்றோரை அரவணைக்கத் தவறியதால், மகன் பெயரில் எழுதிவைத்த சொத்துகளைப் பறித்து பெற்றோர் வசமே அதிகாரிகள் ஒப்படைத்தச் சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (80), இவரது மனைவி வசந்தா (75). இவர்களுக்கு முரளி, சங்கர், பிரபு என்று மூன்று மகன்களும், தமிழ்ச்செல்வி, பத்மா என்று இரண்டு மகள்களும் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னரே மூத்த மகன் முரளி மரணித்துவிட்டார். இதனால், இரண்டாவது மகனின் அரவணைப்பில் ராஜாகண்ணுவும் அவரது மனைவி வசந்தாவும் வசித்துவந்தனர்.
இந்தநிலையில், 2017-ம் ஆண்டு இரண்டாவது மகனும் இறந்துவிட்டார். இதனால், பெங்களூருவில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த இளைய மகன் பிரபு சொந்த ஊருக்கே வந்து வயதான பெற்றோரைப் பார்த்துகொள்வதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார்.

இளைய மகன்மீது உள்ள பாசத்தில், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு வீடுகளை அவர் பெயருக்கு எழுதி வைத்துள்ளனர். சொத்து கைக்கு கிடைக்கும்வரை பெற்றோரை விழுந்து விழுந்து கவனித்த இளைய மகன், அதன்பின்னர் தன்னுடைய சுயரூபத்தை காண்பித்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோரைப் பராமரிக்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். தங்களுக்கு நேரும் கொடுமைக் குறித்து வெளியூர்களில் உள்ள தங்களின் மகள்களிடம் கூறி கதறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி ராஜாகண்ணுவும், வசந்தாவும் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்தைச் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘மகன் எங்களை கைவிட்டுவிட்டான். சொத்துகளையும் ஏமாற்றி அவன் பெயருக்கு எழுதிகொண்டான். அந்தச் சொத்துகளின் பதிவை ரத்துசெய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்திய கலெக்டர் சண்முகசுந்தரம், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007-ன்படி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூருக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.

சப்-கலெக்டர் விசாரணையில், வயதான பெற்றோர் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகத் தெரியவந்தது. இந்தநிலையில், கலெக்டர் உத்தரவின்பேரில், மகன் பெயரில் எழுதிவைத்த சொத்துகளின் பத்திரப்பதிவை அதிரடியாக ரத்துசெய்த சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், அதற்கான ஆவணத்தை வயதான தம்பதியை நேரில் வரவழைத்துகொடுத்தார். அந்த சொத்துகள் வயதான தம்பதி வசமே திருப்பி ஒப்படைக்கப்பட்டன. ஆவணங்களை பெற்றுகொண்ட வயதான தம்பதி கலெக்டர் மற்றும் சப்-கலெக்டருக்கு கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.