Published:Updated:

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 - மனதை உலுக்கும் மழை மரணங்கள்
- மனதை உலுக்கும் மழை மரணங்கள்

- மனதை உலுக்கும் மழை மரணங்கள்

பிரீமியம் ஸ்டோரி

வேலூர் மாவட்டத்தைத் தன் கொடிய கரங்களால் கலைத்துப்போட்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. குடியிருப்புகளை வாரிச்சுருட்டிய வெள்ளக்காட்டுக்குள் கேட்கும் மரண ஓலம், நம் மனதை நடுநடுங்கவைக்கிறது. வேலூர் மாவட்டத்தில், அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து நவம்பர் 19-ம் தேதி வரை, மழை பாதிப்பால் மட்டுமே 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 436 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. சுமார் நான்காயிரம் பேர் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னாலும் ஆயிரம் கனவுகள், உறவுகள் சிதைந்துபோயிருக்கின்றன. மீளாத உயிர்களையும், பிரிவில் தவிக்கும் உறவுகளையும் கண்டு கண்ணீர் சிந்துகிறது வேலூர்!

இடி அல்ல பாறை... அலறிய இரண்டு உயிர்கள்!

நவம்பர் 14-ம் தேதி, மதியம் 2 மணி... அடித்து மழை பெய்துகொண்டிருந்த நேரம்... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலுள்ள மலையிலிருந்து திடீரென பயங்கரச் சத்தம். ‘இடி இறங்கியிருக்கும்’ என்று அனைவரும் நினைத்திருந்தார்கள். அவ்வளவு பயங்கரமாக இருந்தது சத்தம். என்ன ஏதென்று அறிந்துகொள்வதற்குள், ‘ஐயோ, அம்மா யாராவது காப்பாத்துங்களேன்’ என இரண்டு பெண்களின் ஓலம் அருகில் வசிப்பவர்களை அலறவைத்தது. பின் சத்தமே இல்லை. வெளியில் ஓடி வந்தவர்கள், நொறுங்கிக்கிடந்த ஒரு வீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். இறங்கியது இடி அல்ல... 40 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை ஒன்று உருண்டு வந்து வீட்டின்மீது விழுந்திருக்கிறது. இறுதியில், நொறுங்கிக்கிடந்த வீட்டுக்குள்ளிருந்து பிச்சாண்டி என்பவரின் மனைவி ரமணி, மகள் நிஷாந்தி இருவரும் சடலமாக மீட்கப்பட்டார்கள்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

இதில் துயரம் என்னவென்றால், சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவி, மகளுடன் வந்து வாழ ஆரம்பித்தார் பிச்சாண்டி. அருகிலுள்ள உழவர் சந்தையின் பின்புறப் பகுதியில், சொந்தமாக அவருக்கு ஓட்டு வீடு இருக்கிறது. மழைக்கு வீடு ஒழுகியதால், மலை அடிவாரத்திலிருக்கும் இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். டீக்கடையில் வேலைசெய்யும் பிச்சாண்டி, அன்று காலையிலேயே வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டதால், விபத்தில் அவர் சிக்கவில்லை. பிச்சாண்டியின் மகள் நிஷாந்தி, கணவரைப் பிரிந்து வாழ்ந்தவர். கணியம்பாடியைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் வைத்திருப்பதாகப் பொய் சொல்லி, திருமணம் செய்துகொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பின்னர், நிஷாந்தியை அடித்துத் துன்புறுத்திய கணவன், சீதன நகைகளையும் விற்றுக் குடித்து அழித்துவிட்டாராம். கொடூர அரக்கனாக மாறிய மருமகனிடமிருந்து மகளை மீட்டுவந்து எட்டு ஆண்டுகளாகத் தன்னுடனேயே வைத்திருந்திருக்கிறார் பிச்சாண்டி. மனைவியும் மகளுமே தன் உலகம் என வாழ்ந்துவந்தவர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்... காத்திருக்கும் மனைவி!

கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மனோகரனுக்கு திவ்யா என்ற மனைவியும், மூன்றரை வயது, ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்த மனோகரன், நவம்பர் 18-ம் தேதி மாலை பைக்கில் விரிஞ்சிபுரம் பாலாற்றுத் தரைப்பாலத்தைக் கடந்து சென்றிருக்கிறார். மீண்டும் அந்த வழியாக அவர் வந்தபோது, பைக்குடன் அவரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அந்தக் காட்சி, தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை மனோகரன் கிடைக்கவில்லை. ‘கணவன் மீண்டுவருவார்’ என்ற நம்பிக்கையுடன் கையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாக இரண்டு பெண் குழந்தைகளுடன் பாலாற்றின் கரையோரம் கண்ணீரோடு காத்துக்கிடக்கிறார் அவரின் மனைவி திவ்யா.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

நவம்பர் 19-ம் தேதி காலையில், மேலும் ஒரு கொடூரம் நிகழ்ந்தது. பேரணாம்பட்டு அஜீஜியா வீதியில், மாடி வீடு ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானதில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேரின் உயிர்கள் தூக்கத்திலேயே பிரிந்தன. 50 ஆண்டுகள் பழைமையான வீடு அது. மழைநீர் சூழ்ந்திருந்ததால், வீட்டின் சுவர் நெகிழ்ந்து இடிந்து விழுந்திருக்கிறது. வீட்டுக்குள் மொத்தம் 18 பேர் இருந்திருக்கிறார்கள். இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் பொதுமக்களை உலுக்கி எடுத்திருக்கிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளைக் கிளறி, வீட்டின் உரிமையாளர் அனீஷா பேகம், அவரின் மருமகள்கள் ரூஹினாஸ், மிஸ்பா பாத்திமா, மாடியில் தங்கியிருந்த கெளசர், இவரின் மகள் தன்ஷிலா என ஐந்து பெண்கள் மற்றும் ஹபீரா, மனுல்லா, தாமீத், அப்ரா ஆகிய நான்கு குழந்தைகள் என ஒன்பது உடல்களும் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. படுகாயமடைந்த மேலும் ஒன்பது பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

அதிர்ச்சியும் துயரமுமாகக் கதறியழுதுகொண்டிருந்த உறவினர்களிடம் பேசினோம். ‘‘தரைமட்டமா கிடக்குற வீட்டைப் பார்க்கப் பார்க்க, நாலு குழந்தைகளும் விளையாடிக்கிட்டு இருக்குறது மாதிரியே தெரியுது. பெரிய பெரிய சுவரெல்லாம் குழந்தைங்க மேல உடைஞ்சு விழுந்ததை நினைச்சுப் பார்க்கவே முடியலை. ஆஸ்பத்திரியில இருக்குறவங்க எல்லாரும் நல்லபடியா மீண்டு வரணும். இதை எப்படிக் கடக்கப் போறோம்னே தெரியலை. யாருக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது” என்று விம்மி விம்மிப் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மனிதர்கள், குடும்பங்கள் துயரத்திலிருந்து மீள நாம் உடன் நிற்க வேண்டும். தமிழக அரசு, தன் கரங்களால் அவர்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு