Published:Updated:

வேலூர்: 30 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை... சாவிலும் இணை பிரியாத தம்பதி!

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் அதிர்ச்சியில் மரணித்த சம்பவம், உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 62). தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாலசுப்பிரமணியனின் மனைவி இசைவாணி என்கிற வான்மதி (வயது 58). இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களின் ஒரே மகள் லாவண்யா, கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த பாலசுப்பிரமணியனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மனைவியே செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளனர்.

வான்மதி
வான்மதி

நேற்று அதிகாலை வான்மதிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தெரியாமல், அருகிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியன். பொழுது விடிந்து எழுந்தவர் மனைவியை எழுப்பியுள்ளார். உடல் அசைவின்றி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் கத்தி கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த உறவினர்கள் ஓடிவந்து பார்த்தபோது, வான்மதி இறந்துவிட்டது தெரியவந்தது.

கோவையிலிருந்த மகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவருடன் அவர் வந்து சேர்வதற்குள் மதியம் ஆகிவிட்டது. அதற்குள்ளாக உறவினர்களே இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனைவியின் உடலுக்கு அருகிலேயே உறைந்துப்போய் உட்கார்ந்திருந்தார் பாலசுப்பிரமணியன். ஊரிலிருந்து வந்த மகள் தாயின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பொழுது சாயும் நேரத்தில் வான்மதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியனால் மனைவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனை நினைத்து துக்கம் தாளாமல் கதறி துடித்துக்கொண்டிருந்தார். மனைவியின் உடல் சுடுகாட்டிற்குச் செல்வதற்குள்ளாக பாலசுப்பிரமணியனின் உயிரும் அதிர்ச்சியிலேயே பிரிந்துவிட்டது. இவரின் உடல் அவர்கள் வழக்கப்படி இன்று எரியூட்டப்படுகிறது.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

மரணத்திலும் இணைப்பிரியாத தாய், தந்தை குறித்து மகள் லாவண்யாவிடம் பேசினோம். ``இப்படியொரு துயரம் யாருக்குமே வரக்கூடாது. வீட்டுக்கு ஒரே பொண்ணு நான். என்னை அநாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டாங்க. அப்பா படுத்த படுக்கையா கிடந்தாலும் அம்மாவோட பாசம்தான் அவர் உயிரைப் பிடிச்சி வெச்சிருந்தது. அம்மாவுக்குத் திடீர்னு இப்படி ஆகும்னு அவரும் நினைச்சுப் பார்க்கல. அம்மாவுடைய பிரிவை அப்பாவால தாங்கிக்க முடியலை. அதனால அவரும் போயிட்டாரு’’ என்று கலங்கினார்.

`வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்;

ஆனாலும் அன்பு மாறாதது;

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்;

பிரிவென்னும் சொல்லே அறியாதது’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பாலசுப்பிரமணியன் - வான்மதியின் 30 ஆண்டுக்கால வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று நெகிழ்ச்சியடைகிறார்கள் உறவினர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு