
- விரட்டப்படும் நாடோடிகளின் பெருந்துயரம்...
‘‘எங்களை எங்கயுமே தங்கவிட மாட்டேங்கிறாங்க. ஊருக்குப் பக்கத்துல இருந்தா அருவருப்பா பார்க்கிறாங்க. கோயில், குளம் பக்கம் போக முடியலை... எங்களை இந்தச் சுடுகாட்டுல இருக்குற பொணம் மட்டும்தான் தொந்தரவு செய்யறது இல்லை...’’ என்று செல்லுமிடமெல்லாம் துரத்தப்படும் துயரத்தை விரக்தியாகக் கொட்டுகிறார்கள் சுடுகாட்டில் வசிக்கும் நாடோடி இன மக்கள்!
நாம் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதையில் மெலிந்துபோன உடல், ஒட்டிக்கிடக்கும் வயிறு என வறுமை வரித்துக்கொண்ட ஜீவன்கள் ஏராளம். குறைந்தபட்சம், பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டுவதே இந்தச் சமூகம் அவர்களுக்கு அளிக்கும் பரிசாக இருக்கிறது. அதிகபட்சம் அவர்கள் பெறுவது என்னவோ, புறக்கணிப்பும் அசூயை உணர்வுமே!
இப்படித்தான் குழந்தைகளுடன் வேலூரில் சாலையோரமும், ஒதுக்குப்புறமாகவும் தங்கியிருந்த நாடோடிக் கூட்டம் ஒன்றை இந்தச் சமூகம் விரட்டியடித்ததால், திக்கற்றுத் திரிந்தவர்கள் சுடுகாட்டில் அடைக்கலமாகி யிருக்கிறார்கள். ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்ல... ஏழு ஆண்டுகள் சுடுகாடே கதியெனக்கிடக்கிறது அந்தக் கூட்டம்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இருக்கிறது பாலாறு சுடுகாடு. முட்புதர்கள் அடர்ந்து மண்டிக்கிடக்க அதனுடன் போட்டி போட்டுக்கொண்டு மலையெனக் குவிந்து கிடக்கின்றன மாநகரத்தின் குப்பைக் கழிவுகள். அருகிலேயே பாலாற்றில் ஓடுகிறது கழிவுநீர். இவற்றுக்கு நடுவில்தான், கிழிந்த தார்ப்பாயில் கந்தலுடைகளைப் போர்த்திய சிறு சிறு கொட்டகைகளில் ஏழெட்டு குடும்பங்கள் வசிக்கின்றன.
புகைப்படக்காரருடன் நாம் அங்கு சென்றபோது கூடியிருந்தோரின் கண்கள் அச்சத்தில் அலைபாய்ந்ததை உணர முடிந்தது. சிலர் “பரவதம் அக்கா... யாரோ வந்திருக்காங்க” என்று பதறியபடி குரல் கொடுத்தார்கள். ஒரு கொட்டகையிலிருந்து குனிந்தபடியே வெளியே வந்தார் பரவதம். “சார், ஊர்ல இருக்குற அத்தனை இடத்துலயும் துரத்துன பின்னாடி கடைசியா இங்கதான் செத்த கண் அசருறோம். எங்களை விரட்டிடாதீங்க...” என்றார் கண்கள் கலங்க. நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகே அவர்கள் ஆசுவாசமானார்கள்...

பரவதம் அக்காதான் பேசத் தொடங்கினார், ‘‘நாங்கல்லாம் குப்பையிலிருந்து பழைய பொருள் எடுத்து, வித்துப் பொழைக்கிறோம். பெருசா வருமானம் கிடைக்காது. அதுவும் கொரோனா காலத்துல பழைய சாமானுங்க போடுற கடைங்களையெல்லாம் மூடிட்டாங்க. மூணு வேளை முழுசா சாப்பிட்டே பல மாசமாகுது. ஆரம்பத்துல ஊர்ப் பக்கத்துல தங்கியிருந்தோம். எங்களை ஒரு மாதிரி பார்த்து, தங்கவிடாம துரத்திட்டாங்க. அங்கருந்து ஒவ்வொரு இடமா போனோம். அன்னந்தண்ணி தரலைன்னாக்கூட பரவாயில்லை... நாங்க உழைச்சு சாப்பிட்டுக் குவோம். ஆனா, ஒரு இடத்துலயும் அண்ட விடலை. கடைசியா இங்க வந்து சேர்ந்தோம். வீடு, வாசல் இல்லாத எங்களை மாதிரி ஆளுங் களுக்குச் சுடுகாடுதான் நிம்மதியைத் தருது.
ஆனா, குடிக்கத் தண்ணிதான் கிடைக்க மாட்டேங்குது. கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல போய் புடிச்சுட்டு வர்றோம். அந்தத் தண்ணி உப்புக்கரிக்குது, வாயிலவெக்க முடியலை. குளிக்கவும் தண்ணி இல்லை. ஆத்துல எங்கயாச்சும் தேங்கியிருக்குற அழுக்குத் தண்ணியில குளிக்கிறோம். மழைக்காலத்துல பாலாத்துல தண்ணி வரும். அப்பல்லாம், பக்கத்துல இருக்குற குப்பைமேட்டு உச்சியில போய் உட்கார்ந்துப்போம். ரெண்டு மாசமானாலும் தண்ணி வத்துற வரைக்கும் குப்பைமேடுதான் கதி... ஆத்துல தண்ணி வத்திப் போன பின்னாடிதான் தரைக்கு வர முடியும்.
சுடுகாட்டுக்கு வந்த புதுசுல குழந்தைங்க மட்டுமில்லாம எங்களுக்கும் பயமாத்தான் இருந்துச்சு. பக்கத்துலயே பொணம் எரிப்பாங்க. குழிதோண்டிப் புதைப்பாங்க. ராத்திரியானா குழந்தைங்களுக்கு சூடம் காட்டி, திண்ணீரு வெச்சுவிட்டு, விடிய விடிய மொத்தக் குடும்பமும் பயத்துல கட்டியணைச்சுக்கிட்டு படுத்திருப்போம். போகப் போக பழகிடுச்சு. வாழவே எங்களுக்கு நாதியில்லை... போற இடமெல்லாம் மனுஷங்க துரத்துறாங்க. இந்தப் பொணங்க மட்டும்தான் எங்களை எந்தத் தொந்தரவும் பண்றதில்லைனு புரிஞ்ச பின்னாடி பயம் போயிடுச்சு.
மத்தவங்க மாதிரி நல்ல துணி உடுத்தணும்; வயிறாரச் சாப்பிடணும்; கல்லு வீட்டுல தூங்கணும்னு எவ்வளவோ ஆசையிருக்கு. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் சார். ஏதோ கிடைச்சதைச் சாப்பிட்டுக்கிட்டு பொழப்பு ஓடுது. எங்க தலைமுறையோட இந்தக் கஷ்டம் போயிடணும்னு நெனைக்கிறோம் சாமி” என்றவரிடம், “எந்த ஊரிலிருந்து இங்கு வந்தீர்கள்?” என்று கேட்டோம்.

“சொந்த ஊருன்னு எங்களுக்கு எதுவுமில்லை. பாட்டனுங்க ஊர் ஊரா கூட்டிக்கிட்டு சுத்துனாங்க. இதுக்கு முன்னாடி வேலூருக்குப் பக்கத்துல பென்னாத்தூர் கிராமத்துல தங்கியிருந்தோம். அங்கே விரட்டுன பின்னாடி இங்க தங்கியிருக்கோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டுனு எந்த அடையாளமும் இல்லை. ஊருக்குள்ள எங்களுக்கு இடம் கொடுத்து, வீடு கட்டிக் கொடுத்தா எங்க புள்ளை குட்டிங்களைக் கரை சேர்த்துடுவோம். மத்த புள்ளைங்க மாதிரி எங்க புள்ளைங்களும் பள்ளிக்கூடம் போகணும். அங்க போனாவாச்சும் மதியம் சோறு, முட்டைனு சாப்பிடுவாங்க. எங்க பசங்களும் படிச்சு பெரிய ஆபீஸராகணுங்கிற ஆசை இருக்கு. அவங்களுக்குக் குப்பை பொறுக்குற வேலையே வேணாம். பசங்க படிப்புக்கும், எங்க வாழ்வாதாரத்துக்கும் அரசாங்கம்தான் உதவி செய்யணும்” என்று பரவதம் சொல்லும்போதே, சுற்றியிருந்த அனைவரின் கண்களும் கலங்குகின்றன.
விளிம்புநிலை மக்களுக்கும் சேர்த்தே வேண்டும் விடியல்!