Published:Updated:

வேலூர் மணல் குவாரி! - நாளொன்றுக்கு ரூ.40 லட்சம்... விழுங்கி ஏப்பம்விடும் ‘மணல் மாஃபியா’!

மணல் குவாரி
பிரீமியம் ஸ்டோரி
மணல் குவாரி

மணல் குவாரியில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்

வேலூர் மணல் குவாரி! - நாளொன்றுக்கு ரூ.40 லட்சம்... விழுங்கி ஏப்பம்விடும் ‘மணல் மாஃபியா’!

மணல் குவாரியில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்

Published:Updated:
மணல் குவாரி
பிரீமியம் ஸ்டோரி
மணல் குவாரி

வேலூர் மணல் குவாரியில், நாளொன்றுக்கு சுமார் 1,500 யூனிட் மணல் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதோடு, மேலிடம் வரை கமிஷன் பாய்வதாகவும் பரபர குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

பெருமுகை கிராமத்தையொட்டிய பாலாற்றுப் படுகையோரம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மாதம் 4-ம் தேதி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கியது. ஆற்றுப் பகுதிக்குள் ஆட்களைப் பயன்படுத்தி மட்டுமே டிராக்டர்கள், லாரிகளில் மணலை நிரப்பி, யார்டில் சேமித்துவைக்க வேண்டும். ஒரு யூனிட் மணல் விலை 3,150 ரூபாய். மணல் பெறுவதற்கு இ-சேவை மையத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக மணல் விற்பனை செய்யக் கூடாது என்பதெல்லாம் விதிமுறை. ஆனால், யார்டில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன.

வேலூர் மணல் குவாரி! - நாளொன்றுக்கு ரூ.40 லட்சம்... விழுங்கி ஏப்பம்விடும் ‘மணல் மாஃபியா’!

இது குறித்து நம்மிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர்கள், ‘‘காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் வழங்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவு நேரங்களிலும் மணல் விற்பனை படுஜோராக நடக்கிறது. ஆன்லைன் மூலமாக இரண்டு யூனிட் மணலுக்கு 6,300 ரூபாய், மூன்று யூனிட் மணலுக்கு 9,450 ரூபாய் செலுத்திப் பதிவுசெய்ய வேண்டும். ஆறு வீல் லாரிக்கு இரண்டு யூனிட் பில்லும், 10 வீல் லாரி என்றால் மூன்று யூனிட்டுக்கான பில்லும் வழங்கப்படுகிறது. ஒருமுறை பதிவுசெய்த லாரிக்கு, மீண்டும் ஒரு மாதம் கழித்துப் பதிவுசெய்தால் மட்டும்தான் மணல் வாங்க முடியும். ஆனால், இ-சேவை மையத்தில் 2,000 ரூபாய் கொடுத்தால் சட்ட விரோதமாக பில்லிங் செய்துகொடுக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ஆன்லைன் பில்லுடன் வரும் லாரிகளில் முறைகேடாக ஓவர் லோடு ஏற்றி இரு மடங்கு பணம் வாங்குகிறார்கள். ஆறு வீல் லாரியில் பொக்லைன் மூலம் இரண்டு பக்கெட் மணலைக் கூடுதலாக லோடு செய்ய 4,500 ரூபாய் வாங்குகிறார்கள். 10 வீல் லாரிக்கு 9,000 ரூபாய் பெற்றுக்கொண்டு நான்கு பக்கெட் மணலைக் கூடுதலாகப் போடுகின்றனர். ஆஃப்லைனில் வாங்கும் இந்தப் பணத்துக்கு பில் கொடுப்பதில்லை. கணக்கும் காட்டுவதில்லை. இது தவிர, பில் இல்லாமலேயே நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு லோடு போட்டு வெளியில் அனுப்புகிறார்கள். இப்படி ஆஃப்லைன் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை சிண்டிகேட் அமைத்துச் சுருட்டுகிறார்கள். பெருமுகை மணல் குவாரி தொடங்கப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே ரூ.10 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’’ என்றனர் ஆதங்கத்துடன்.

வேலூர் மணல் குவாரி! - நாளொன்றுக்கு ரூ.40 லட்சம்... விழுங்கி ஏப்பம்விடும் ‘மணல் மாஃபியா’!

மணல் குவாரி முறைகேடுகளை வெளிக்கொணரும் சமூகச் செயற்பாட்டாளர் ‘மூன்றெழுத்து’ அருள்ராமனிடம் பேசினோம். ‘‘வேலூர் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களிடம் முதலில் புகார் கொடுத்தோம். ஆட்சியர்கள் கண்டுகொள்ளாததால், சென்னை சேப்பாக்கத்திலுள்ள நீர்வளத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினோம். அங்கிருந்து, விழுப்புரம் கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அந்த மனுவை அனுப்பி விசாரிக்கச் சொன்னார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கும் ஒரு புகார் மனுவை அனுப்பிவைத்தோம். அவரும் அதை, காட்பாடி உட்கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பிவைத்துவிட்டார். இப்படி சுற்றிச் சுற்றி அனுப்பிவைக்கப்பட்ட மனுக்கள், கடைசியில் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. முறைகேடுகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, புகாரளிப்பவர்களின் விவரங்களைத் தெரிந்துகொண்டு மணல் குவாரியிலிருந்து சூப்பர்வைசர் மூலம் பேரம் பேசுகிறார்கள். பேரத்துக்குப் படியாதவர்களை மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார் கோரிக்கையாக.

அருள்ராமன்
அருள்ராமன்

பெருமுகை மணல் குவாரியின் கண்காணிப்பாளரான நீர்வளத்துறையின் விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் ஃபிரான்சிஸிடம் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ‘‘மணல் குவாரியில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்’’ என்றார் அழுத்தமாக.

இதையடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் முறைகேடு புகார்களை விரிவாக எடுத்துச்சொல்லி, விளக்கம் கேட்டோம், ‘‘உடனே அதிகாரிகளை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் சுருக்கமாக.

நீரின்றி வறண்டு கிடக்கும் பாலாற்றின் மணலையும் சுரண்டிக் கொழுக்கும் மாஃபியா மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நிலத்தடி நீரையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism