Published:Updated:

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’
பிரீமியம் ஸ்டோரி
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’

கொரோனா கிருமி பொம்மையைப்போல ஏடாகூடமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தைப் பார்க்கையில், கிழிந்த துணிக்கு ஓட்டுப்போட்டிருப்பதைப் போன்றே தெரிகிறது.

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

கொரோனா கிருமி பொம்மையைப்போல ஏடாகூடமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தைப் பார்க்கையில், கிழிந்த துணிக்கு ஓட்டுப்போட்டிருப்பதைப் போன்றே தெரிகிறது.

Published:Updated:
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’
பிரீமியம் ஸ்டோரி
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார் 1,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் வேலைகள் நடப்பதால், கோடி கோடியாகப் பணம் விரயமாவதுடன், ஏகப்பட்ட முறைகேடுகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

வரலாற்றுப் புகழ்மிக்க வேலூர் கோட்டையின் அழகை மெருகேற்ற ரூ.33 கோடியை ஒதுக்கினர். அதில், கோட்டை அகழியின் ஒரு பகுதியைத் தூர்வாரியதாகக் காட்டிய கணக்கு மட்டும் ரூ.11 கோடி! சொந்தமாக பொக்லைன் இயந்திரங்களையும், மிதவைகளையும் விலைக்கு வாங்கித் தூர்வாரியிருந்தால்கூட இத்தனை கோடி செலவாகியிருக்காது.

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் சரிவர மேற்கொள்ளவில்லை. அவசரகதியில் ஏடாகூடமாகப் பள்ளம் தோண்டி அரைகுறையாகவிட்டதால், நிறைய விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தவறி விழுந்து பலர் காயமடைந்திருக்கிறார்கள். அதில் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பி குத்திக் கிழித்ததில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சத்துவாச்சாரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரின் கால் அகற்றப்பட்டது. பழைய சாலைகள் மீதே ரோடு போடப்பட்டிருப்பதால், வீடுகள் பள்ளத்துக்குள் சென்றுவிட்டன. மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் மேம்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட 93 பூங்காக்களுக்கும் கண்ணும் வாயும் இருந்திருந்தால் கதறி அழுது கண்ணீர் வடித்திருக்கும். அந்த அளவுக்கு அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.

சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன், “கொரோனா கிருமி பொம்மையைப்போல ஏடாகூடமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தைப் பார்க்கையில், கிழிந்த துணிக்கு ஓட்டுப்போட்டிருப்பதைப் போன்றே தெரிகிறது. பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் வெளிப்படையாக ஊழல் நடந்திருப்பதால், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்படும்” என்றார். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரே முதலமைச்சரை அழைத்து ஜூன் 29-ம் தேதி அதே பேருந்து நிலையத்தைத் திறந்துவைக்கச் செய்திருக்கிறார். உள்விவகாரங்கள் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

பேருந்து நிலையத்துக்கு ‘கலைஞர்’ பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையில் முதலமைச்சருக்கு விருப்பமில்லை என்ற தகவலும் வந்திருக்கிறது. காரணம், புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்ட அவரின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். முதலமைச்சர் திறந்துவைத்த பின்னரும் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராதது அதைவிடக் கொடுமை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று நினைக்கத்தக்க ஓர் அயோக்கியத்தனத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்திருக்கிறார்கள். பேரி காளியம்மன் கோயில் தெருவில் சமீபத்தில் இரவோடு இரவாக சிமென்ட் ரோடு போடப்பட்டது. தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டூ வீலரைக்கூட அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூ வீலரின் டயர்களைப் புதைத்திருக்கிறார்கள் அந்தப் புத்திசாலிகள். விடிந்து வந்து பார்த்த டூ வீலரின் உரிமையாளர் கடப்பாரையால் குத்தி பள்ளம் தோண்டி, வண்டியை எடுத்துச் சென்றிருக்கிறார்.

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

டூ வீலர் சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போட்டனர். இந்தப் புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளங்கள் வழியாகப் பரவி, பிற மாநிலங்களிலும் கேலிப் பொருளாகியிருக்கின்றன. “யப்பா... லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள்.

“இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு நிலவுவதால், புழுக்கமாக இருக்கிறது என்று வீட்டு முன்பு யாரும் படுத்துவிட வேண்டாம். தாரையும் சிமென்ட்டையும் கொட்டி மூடிவிடுவார்கள் போலத் தெரிகிறது. புதிதாகப் போடப்பட்ட சாலைகளை தோண்டிப் பார்த்தால் யாராவது உள்ளே இருந்தாலும் இருப்பார்கள்” என்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் கூட்டுக் களவாணித்தனத்தை கலாய்த்துவருகிறார்கள் வேலூர் மக்கள். இன்னும் சில இடங்களில், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைக்கு நடுவிலிருக்கும் மின் கம்பங்களையும், போர்வெல்களையும் எடுக்கவில்லை. அவற்றையெல்லாம், சுற்றியே ரோடு போட்டு ‘மாஸ்’ காட்டியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையை இணைக்கக்கூடிய அணுகு சாலை இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. அந்தச் சாலையின் தரம் மிக மட்டமாக இருந்ததால், அந்த வழியாகச் செங்கல் ஏற்றிச் சென்ற மினி லாரியின் சக்கரங்கள் தார்ச்சாலைக்குள் அப்படியே புதைந்துவிட்டன.

“லகுட பாண்டிகளா, உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” - வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ அலங்கோலம்!

தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளின் முக்கியமான பெரிய தலைகளுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்களுக்குத்தான் 400, 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் போட்ட சாலைகளும், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளும்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன.

அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வேலூர் மாநகராட்சிக்கு 2020 சுதந்திர தினவிழாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘சிறந்த மாநகராட்சி’க்கான விருதை வழங்கினார். அப்போது, வாய்விட்டுச் சிரித்த வேலூர் மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்தான் இப்போதும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். இந்த முறையும் சிறந்த மாநகராட்சிக்கான விருதைக் கூச்சமே இல்லாமல் கேட்கத் தயாராகியிருக்கிறார்கள்.

சுஜாதா
சுஜாதா

இது சம்பந்தமாக, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவிடம் கேட்டோம். “இப்படியான சாலை அமைப்புப் பணிகள் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கின்றன. ஒப்பந்ததாரர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிரிமினல் வழக்குகள் தொடரப்படும். அவர்களால், வருங்காலத்தில் எந்தவிதமான ஒப்பந்தப் பணிகளையும் எடுக்க முடியாது. இதுவரை நடந்த பணிகளின் குறைகளை நிவர்த்திச் செய்வதற்கான வழிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

ஸ்மார்ட் சிட்டியெல்லாம் வேண்டாம்... இருப்பதே போதுமென்று வேலூர் மக்களைக் கதற வைத்துவிடுவார்கள்போல!