Published:Updated:

தென்காசி: `பணம் இருந்தால்தான் திமுக-வில் செயல்பட முடியுமா தலைவரே?!’ - வைரல் வீடியோவின் பின்னணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராஜினாமா கடிதம் கொடுத்த செல்லம்மாள்
ராஜினாமா கடிதம் கொடுத்த செல்லம்மாள்

'என் தந்தை 35 வருசமா திமுக-வுக்காக போஸ்டர் ஒட்டியவர். நான் கடந்த 10 வருசமா கட்சியில் இருக்கேன். பணம் இல்லாததால் யூனியன் சேர்மனாக ஜெயிச்ச எங்கம்மாவை ராஜினாமா செய்யவெச்சுட்டாங்க’ என்று கட்சிக்காரர் பேசும் வீடியோ வைரலாகிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில், 11 இடங்களில் தி.மு.க-வும், 5-ல் அ.தி.மு.க-வும், ஓர் இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பாக ஜெயகுமார் என்பவரை யூனியன் சேர்மன் தேர்தலில் போட்டியிட மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஏற்பாடு செய்திருந்தார்.

செல்லம்மாள்
செல்லம்மாள்

ஆனால், ஒன்றியச் செயலாளரான குமார் என்பவர் ஆதரவுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் செல்லம்மாள் என்பவர் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனால் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் அதிருப்தியடைந்தார். இந்த நிலையில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தி.மு.க ஒன்றியச் செயலாளர் குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

மாவட்டச் செயலாளர் அறிவித்த வேட்பாளர் ஜெயகுமார் தோல்வியடைந்த நிலையில், அவர் செலவு செய்த ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாயைத் தருமாறு மாவட்டச் செயலாளர் நிர்பந்தம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கணவர் முருகேசனுடன் செல்லம்மாள்
கணவர் முருகேசனுடன் செல்லம்மாள்

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது. ஒன்றிய சேர்மன் தேர்தலில் இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்ட விவகாரம் மட்டுமல்லாமல் பணத்துக்காக வெற்றிபெற்றவரை ராஜினாமா செய்ய வைத்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்த பெண் யூனியன் சேர்மன் செல்லம்மாளின் மகன் சதன் பிரபாகர் என்பவர் பேசும் வீடியோ வைரலாகப் பரவுகிறது. அதில், ``முதல்வருக்கு வணக்கம். என் தந்தை வி.எஸ்.முருகேசன், கடையம் யூனியின் தி.மு.க-வில் ஆதிதிராவிட நல உறுப்பினராக இருக்கிறார். அவர் இந்தக் கட்சிக்காக 35 வருசமா போஸ்டர் ஒட்டியவர். நான் என் வயதுக்கு 10 வருசமா போஸ்டர் ஒட்டியிருக்கேன்.

செல்லம்மாளின் மகன் பிரபாகரன் பேசும் வீடியோ
செல்லம்மாளின் மகன் பிரபாகரன் பேசும் வீடியோ

எங்கம்மா செல்லம்மாள் கடையம் யூனியனில் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர்தான் சேர்மனாக வர வேண்டும் என்று மக்களும் கவுன்சிலர்களும் விரும்பியதால் இந்த வெற்றி கிடைத்தது. ஆனால், மாவட்டச் செயலாளர் எங்களிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டதால் பதவியை ராஜினாமா செஞ்சுருக்கார்.

கட்சிக்காக 35 வருசம் உழைச்ச குடும்பத்துக்கு கிடைச்ச இந்த வாய்ப்பைக்கூட பணம் கேட்டு தட்டிப்பறிச்சுட்டாங்க. எங்களிடம் ஒரு கோடி பத்து லட்சம் கேட்கிறாங்க. எங்களால் ஒரு லட்சம் ரூபாய்கூட புரட்ட முடியாது. அந்த மாதிரியான சூழலில் நாங்க இருக்கோம்.

ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த செல்லம்மாள்
ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த செல்லம்மாள்

நாங்க இவ்வளவு வருசமா கலைஞருக்காகவும், முதல்வர் ஸ்டாலினுக்காகவும் கட்சியில் விசுவாசமா இருந்து உழைச்சிருக்கோம். ஆனால் எங்களிடம் வந்து பணம் இருந்தால்தான் அரசியலில் இருக்க முடியும்னு சொல்லுறாங்க. இப்போது நாங்க என்ன செய்யட்டும் முதல்வரே? நீங்கதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கணும்” என்று பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தென்காசி: ரூ.1 கோடி கேட்டாரா திமுக மாவட்டச் செயலாளர்?! - யூனியன் பெண் தலைவர் ராஜினாமா பின்னணி

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செல்லம்மாள் ராஜினாமா செய்யும் முன்பாக அவர் பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர் மாவட்டச் செயலாளர் பணம் கேட்பதாகப் பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், ‘கடையம் ஒன்றியச் செயலாளராக இருந்த குமார் என்பவர் செல்லம்மாளுக்குப் பின்னணியில் இருந்ததால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறாம்.

செல்லம்மாள் என்பவரைப் பார்த்ததும் இல்லை. அவரிடம் பணத்தைக் கேட்கவும் இல்லை.
சிவபதமநாதன், தி.மு.க மாவட்டச் செயலாளர்

அவர் மீண்டும் கட்சியில் சேர்வதற்காக செல்லம்மாளிடம், `பணத்தைக் கொடு அல்லது பதவியை ராஜினாமா செய்’ எனச் சொல்லியிருக்கலாம். இது தவிர நான் செல்லம்மாள் என்பவரைப் பார்த்ததுகூடக் கிடையாது. நான் யாரிடமும் பணத்தைக் கேட்கவும் இல்லை” என்று தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அவர்மீது செல்லம்மாள் மகன் வீடியோ மூலம் புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு