சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

போஸ்டர் ஒட்டியே சி.எம் ஆக முடியாது விஜய் ஃபேன்ஸ்!

போஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
போஸ்டர்

அரசியல் சென்சிட்டிவ் நகரமான மதுரையில் ஒட்டப்படும் அரசியல் ரீதியான போஸ்டர்களை உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள்.

பாமாவுக்கே ஜெயலலிதா பாடம் எடுப்பது, ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, ‘காவிரியை நீயே வெச்சுக்கோ. அம்மாவைத் திருப்பித் தா’ என்று ஒரு குழந்தை அடம்பிடிப்பது என்று விதவிதமாக போஸ்டர் அடிப்பதில் பி.எச்.டி முடித்த கிரம்மர் சுரேஷின் வித்தியாசமான போஸ்டர்களைப் பார்த்து மதுரை மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களே அதிசயித்துப்போனார்கள்.

மூன்று முடிச்சு ரீலீஸானபோதே ‘முதல்வரே’ என்று போஸ்டர் அடித்து... இன்று ‘பேட்ட’ படத்துக்குப் பேரப்பிள்ளைகளுடன் சென்று போஸ்டர் ஒட்டும் ரஜினி ரசிகர்களையும் மதுரை மக்கள் கண்டிருக்கிறார்கள். ‘கயாமத் ஸே கயாமத் தக்’ வந்தபோது அமீர்கானுக்கும், ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ ஓடியபோது மாதுரிக்கும் போஸ்டர் போட்டு மாற்றான் தோட்டத்து மலர்களுக்கும் மரியாதை செய்தவர்கள் மதுரைக்காரர்கள்.

அழகிரி அரசியலில் இருந்தவரை ‘ஆரப்பாளையத்து அலெக்சாண்டரே’, ‘மாட்டுத்தாவணி மாவீரரே’ என்றெல்லாம் போஸ்டர் அடித்து அலறவிடுவார்கள் உடன்பிறப்புகள். இப்போது அழகிரி அரசியலுக்கு வி.ஆர்.எஸ் வாங்கியிருக்கும் கேப்பில் விஜய்-அஜித் ரசிகர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். போட்டி போட்டுகொண்டு குறியீடுகளால் ஆன போஸ்டர்களை அடித்து மிஷ்கினுக்கே கிலி பிடிக்கவைக்கிறார்கள். அதிலும் விஜய் ரசிகர்கள் செய்யும் அதகளத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கொரோனா ஊரடங்கில் அடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுக்கே நரம்புத்தளர்ச்சி வர வைக்கிறார்கள்.

அரசியல் சென்சிட்டிவ் நகரமான மதுரையில் ஒட்டப்படும் அரசியல் ரீதியான போஸ்டர்களை உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். இங்கு போஸ்டரில் தொடங்கும் ஒவ்வொரு கருத்தும் தமிழகம் முழுதும் பிரதிபலிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் அவதானிப்பு. அதனால் போஸ்டர் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அரசுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள்.

போஸ்டர் ஒட்டியே சி.எம் ஆக முடியாது விஜய் ஃபேன்ஸ்!

ஆனால், சமீபகாலமாக விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் வெளிப்படுத்தும் அர்த்தம் என்னவென்பது புரியாமல் உளவுத்துறையினரே குழம்புகிறார்கள், புலம்புகிறார்கள். தியாகி வ.உ.சி-யின் பிறந்த நாளுக்கு அவர் செக்கிழுத்த படத்தையும், விஜய் படத்தையும் இணைத்து ‘தளபதியே நீ நினைத்தால் நற்தலைவர்களின் ஆசியுடன் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பாய்’ என்று கருத்துகளைப் பதிவிட்டு வ.உ.சி-யை மீண்டும் செக்கிழுக்க வைக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர் தோனியுடன் விஜய் படத்தை இணைத்து India’s pugal mannan(PM) Tamilnadu’s collection mannan(CM) என்று வாசகங்களைப் பதிவிட்டு கூடவே நாடாளுமன்றம், சட்டமன்றப் படங்களுடன் ரியல் எஸ்டேட் விளம்பரம்போல போஸ்டர் போட்டார்கள். இதில் விஜய்யுடன் தோனியையும் சேர்த்துக்கொண்டு என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியாமல் மக்கள் குழம்பிப்போனார்கள். ‘`பல சதியால் நடந்தது இவங்களுக்கு ஏகப்பட்ட கேம்... சரி விடுங்க, அதனாலதான் இவங்க வேல்டு புல்லா நேம்’’ - என்று ஏ.ஆர்.ரகுமான், டெண்டுல்கருடன் விஜய்யை வைத்துப் புது ஆட்டம் ஆடியிருந்தார்கள். இந்த அலப்பறைகள் அட்ராசிட்டிகளின் வரிசையில்தான் ‘விஜய் - எம்.ஜி.ஆர்’ போஸ்டர்களையும் ஒட்டியிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய் திருமணநாளை முன்னிட்டு விஜய்யை எம்.ஜி.ஆராகவும், அவர் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்திரித்து ஒட்டிய போஸ்டர் சில நாள்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. விதை அவங்க போட்டது! இதைக் கொஞ்சம் கிளை விரிக்கலாமே என்றுதான் எம்.ஜி.ஆரின் கெட்டப்களில் விஜய் நடித்தால் எப்படியிருக்கும் என்று நம் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டின் கற்பனைச் சிறகுகளை விரித்துவைத்தோம். மூன்று பக்கம் விஜய் - எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து குஷியான விஜய் ரசிகர்கள் அந்தப் படங்களை வைத்தே விதவிதமாக போஸ்டர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதைப்பார்த்து அதிர்ந்துபோன அமைச்சர் ஜெயக்குமாரோ, ‘`புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று அனல் கக்கினார். ஆனால் கொஞ்சம்கூட கோபப்படாமல். அமைச்சர் செல்லூர் ராஜுவோ, ‘`எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதா மீதும் அன்பு வைத்துள்ள விஜய் ரசிகர்களை மதிக்கிறேன், விஜய் ஒரு தமிழ் நடிகர் என்பதால் பிடிக்கும்’’ என்று கூலாகச் சொல்லிவிட்டு, ‘சில் ப்ரோ’ ஆனார்.

‘இந்த போஸ்டர்கள் மூலம் என்னதான் சொல்லவருகிறீர்கள்?’ என்று விஜய் மக்கள் மன்றத்தின் மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கபாண்டியிடம் கேட்டேன், ‘`எங்கள் தளபதி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதுபோன்ற போஸ்டர்களை ரசிகர்கள் அடிக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை’’ என்றவரிடம், ‘`விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்?’’ என்றதற்கு, ‘`கண்டிப்பாக வருவார், அதற்கு முன் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு வருவார்’’ என்றார், திடமான நம்பிக்கையுடன்.

விஜய் ரசிகர்கள் கில்லி ஆடினால், விடுவார்களா ரஜினி ரசிகர்கள்? ‘நான் எம்.ஜி.ஆர் அல்ல! ஆனால் நான் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியைத் தருவேன்!’ என்று ரஜினி சொல்வதாக அண்ணா, எம்.ஜி.ஆர். ரஜினி படத்துடன் போஸ்டர் அடித்துள்ளார்கள் ரஜினி ரசிகர்கள்.

தலை சுத்துதுப்போ!