Published:Updated:

கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!

கஜா நிவாரண வீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கஜா நிவாரண வீடுகள்

கால் நீட்டிப் படுத்துத் தூங்கவெல்லாம் முடியாது, ஏழு பேரும் ஒக்காந்த வாக்குலேயே ஒறங்கிடுவோம்.

“வெயிலுக்குக் காந்தும், மழைக்கு ஒழுகும், குளிருக்கும் உறையும். இப்படித்தான் இருக்கும் நாங்க வாழ்ந்த குடிசைங்க. சிமென்ட்டு சுவரு, தார்சு வீடு எல்லாம் எங்க புள்ளைங்க, பேரன் பேத்திகளாச்சும் பாக்கணும்னு நினைச்சோம். இன்னைக்கு எங்களுக்கே அது கிடைச்சிருச்சு. விகடனுக்கும், விகடன் வாசகர்களுக்கும் எம்புட்டு நன்றி சொன்னாலும் போதாது’’ - வானத்துக்குக் கீழ் ஒரு நல்ல கூரை கிடைத்தது, வானவில்லே கிடைத்ததுபோல இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம், முத்தன்பள்ளம் பெண்களுக்கு.

கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!

2018, டிசம்பர். நிலத்துக்கு ஏறி வந்த சுனாமி யாக கஜா புயல் பல ஊர்களை வேரோடு புரட்டிப் போட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் (கொடைக்கானல்) ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர் கொண்டன; தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த மக்களின் துயர்துடைக்க விகடன் களத்துக்கு வந்தது. எப்போதும் விகடனின் பலமாக இருக்கும் வாசகர்களே அப்போதும் நம்முடன் கைகோத் தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தங்கள் கடமையென ஏற்று கடலென நிதி உதவியை அனுப்ப ஆரம்பித்தனர். விகடன் குழுமம் 10 லட்சம் ரூபாய் வழங்க, தொடர்ந்து விகடன் ஊழியர்களும் தங்கள் பங்களிப்பை நிதியில் சேர்த்தனர். ‘எளிய மக்களின் கண்ணீர் உலர்த்தும் விகடனின் இந்த முன்னெடுப்புக்கு எங்கள் பங்கு' என்று விகடன் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து நிதியை வழங்கினார் நடிகர் கார்த்தி. தன் சார்பாகவும், தன் சகோதரர் சூர்யா சார்பாகவும் கார்த்தி வழங்கியது ரூபாய் 20 லட்சம். ஆக மொத்தம் 1,43,79,224 ரூபாய் நிதி திரண்டது... சகோதரத்துவத்தின் சாட்சியாக.

முதல்கட்டமாக, மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள், இலங்கைத் தமிழர் முகாம்களில் பாதிக்கப்பட்ட வீடுகள் மறு சீரமைப்பு, மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைபட்டதால் நீரின்றி சாகவிருந்த பயிர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சியது என அழுகுரல்களை முதலில் ஆசுவாசப்படுத்தியது. அடுத்த கட்டமாக, குடிசை இழந்த மற்றும் குடிசையில் வாழ்ந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பொறுப்பை கைகளில் எடுத்தது விகடன்.

கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!
கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக் காரணிருப்பு ஆகிய பகுதிகளில் 10 வீடுகள் கட்டப்பட்டு, 6.12.2019 அன்று, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அடுத்தகட்டமாக புதுக்கோட்டை மாவட்டத் தில் கரம்பக்குடி அருகே முத்தன்பள்ளம் கிராமத்தில், குடிசை வீட்டில் வசித்த 16 குடும் பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியை, கொரோனா பொது முடக்கத் தடைகள் தாண்டியும் இதோ முடித்து விட்டது விகடன். கடந்த நவம்பர் 18-ம் தேதி 13 குடும்பங்களிடம் முறைப்படி வீடுகள் ஒப் படைக்கப்பட்டன. மழை உள்ளிட்ட சில காரணங்களால் இன்னும் மூன்று வீடுகளின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, விரைவில் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.

கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!
கஜா நிவாரண வீடுகள்... விகடன் வாசகர்கள் தந்த கூடுகள்!

தங்கள் கைகளாலேயே ரிப்பன் வெட்டி குடும்பத்துடன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெண்களின் முகங்களில் நிம்மதி. புது பெயின்ட் உலர்ந்திருந்த சுவர், கதவு எனக் கைகளால் வருடிப் பார்த்துக்கொண்டிருந்த மலையாத் தாளிடம் பேசினோம். ```எங்க வீட்டுல ஏழு பேரு. கஜா புயலால, இருந்த குடிசையும் போச்சு. மாட்டுக்கொட்டகையில தங்கினோம். கால் நீட்டிப் படுத்துத் தூங்கவெல்லாம் முடியாது, ஏழு பேரும் ஒக்காந்த வாக்குலேயே ஒறங்கிடுவோம். இன்னிக்கு ஆனந்த விகடனும், விகடன் வாசகர்களும் எங்களுக்குக் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்திருக்கீங்க. அந்த நல்ல மனசுக்காரங்களுக்கு எல்லாம் இது ஓர் உதவி. ஆனா, எங்களுக்கு இது ஆயுசு ஏக்கம், ஆசை, கனவு. கஜா மாதிரி எத்தனை புயல் வந்தாலும் இனி எங்களுக்குப் பயமில்ல”

- எளிய மக்களுக்கான நம் அக்கறை உதவி யாகச் செயல் வடிவம் பெறும்போது எத்துணை அழகாகிறது, அர்த்தமுள்ளதாகிறது என்று நெகிழ்ந்து நின்றோம். இந்தத் தருணத்தை சாத்தியப்படுத்திய விகடன் வாசகர்களின் சமூக அக்கறைக்கு வணக்கங்கள்.

திருவாரூர் மாவட்டம், பூசலாங் குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி யான ராஜேந்திரன் வீடும் கஜா புயலால் சேதமடைந்தது. அவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. எழுத்தில் மட்டுமல்ல... களத்திலும் செய்வோம் அறம்!