Published:Updated:

ஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்!

விழிப்பு உணர்வு
பிரீமியம் ஸ்டோரி
விழிப்பு உணர்வு

மக்கள் விழிப்பு உணர்வுடன் இருப்பது எப்படி?

ஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்!

மக்கள் விழிப்பு உணர்வுடன் இருப்பது எப்படி?

Published:Updated:
விழிப்பு உணர்வு
பிரீமியம் ஸ்டோரி
விழிப்பு உணர்வு

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், கே.ஆர்.உபேந்திரன் என்ற வாசகர், “சொந்தமாக வீடுகட்டும் ஒருவரிடம் மின்வாரியம் மின்சார இணைப்பு வழங்கிய நாள் முதல், வீடு கட்டி முடியும் வரை வர்த்தக ரேட்டில் மின் கட்டணத்தை வசூலிக்கிறது. இது சரியா?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விடை தேடும் முயற்சியாக எழுதப்பட்ட சிறப்பு கட்டுரை இது. உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால் http://bit.ly/DoubtOfCommonMan என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் உரிய பதில்கள் பிரசுரமாகும்.

தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது மின்சாரம். ஆனால், புதிதாக மின் இணைப்பு பெறுவதில் தொடங்கி, மின் கட்டணம் வரைக்கும் நம்மை அறியாமல் மின்சார வாரியம் பல்வேறு வகையில் நம் பாக்கெட்டைப் பதம் பார்த்துக்கொண்டிருக் கிறது என்கிறார்கள் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்வாரிய பொறியாளரும், இந்திய ஊழல் ஒழிப்புக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான செல்வராஜ் விரிவாகப் பேசினார். ‘‘இந்திய மின்சாரச் சட்டத்தின் அடிப்படையில், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அந்த விதிமுறைகளின்படி புதிதாக வீடு கட்டுபவர்களிடம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான (Tariff- 5) மின்கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இது ஓரளவுக்கு நியாயமானதுதான். புதிய இணைப்பு வழங்கும்போது மின்சார வாரியம் சில பொருள்களை முதலீடு செய்து வாங்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் வர்த்தகக் கட்டணம். வீட்டைக் கட்டி முடித்ததும் அந்த இணைப்பைச் சாதாரணக் கட்டண முறைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்!

உண்மையில் இதைவிட பல குளறுபடிகள் மின்வாரியத்தில் நடக்கின்றன. மக்களுக்கு அதுகுறித்துப் போதிய விழிப்பு உணர்வு இல்லை. உதாரணமாக, புதிதாக வீடு கட்ட வர்த்தகத்துக்கான தற்காலிக மின் இணைப்பு பெற்றால் போதுமானது. ஆனால், சாதாரணமாகக் கட்டப்படும் வீடுகளுக்கேகூட, அடுக்குமாடி குடியிருப்பு, இண்டஸ்ட்ரீஸ் கட்டுமானத்துக்கான (Tariff 6) தற்காலிக மின் இணைப்பைப் பெறச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். வர்த்தகப் பயன்பாட்டுக்கான கட்டணம் 100 யூனிட் வரைக்கும் 5 ரூபாய்; அதற்கு மேல்சென்றால், 8 ரூபாய். அதேநேரம், கட்டுமானப் பணிகளுக்கான (Tariff -6) தற்காலிக இணைப்பில் ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் செலுத்தவேண்டும். இது மக்களுக்குத் தேவையில்லாத சுமை.

ஏற்கெனவே வசித்துக்கொண்டிருக்கிற வீட்டை விஸ்தரிப்பு செய்ய (2,000 சதுர அடி வரை) தனி மின் இணைப்பு பெறத் தேவையில்லை. ‘கட்டட அனுமதி நகலை ஒப்படைத்து, மின்வாரியத்தில் அனுமதிபெற்று, அந்த வீட்டின் மின் இணைப்பை அதே கட்டணத்தில் பயன்படுத்தலாம்’ என்பதுதான் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி. 2,000 சதுர அடிக்கு மேல் குடியிருப்பை விஸ்தரிப்பு செய்தால், தனியாகத் தற்காலிக மின் இணைப்பு பெறவேண்டும். ஆனால் பல பகுதிகளில், 2,000 சதுர அடிக்குள் வீட்டை விஸ்தரிப்பு செய்வதற்கும்கூட வர்த்தகக் கட்டணத்தில் தனி மின் இணைப்பு பெறவேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இதைப் பேரம் பேச பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீட்டில் பேச்சிலர்களைக் குடியமர்த்தினால், அந்த இணைப்புக்கும் வர்த்தகக் கட்டணங்களையே வசூலிக்கிறார்கள். இந்தக் குளறுபடி குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மாணவர்களுக்கும், திருமணமாகாத இளைஞர்களுக்கும் வீட்டை வாடகைக்கு விடுவதற்கெல்லாம் வர்த்தகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்று அழுத்தமாகத் தீர்ப்பு அளித்துள்ளார். அதற்குப் பிறகும் அதேமாதிரிதான் கட்டணம் வசூலிக்கிறார்கள். இல்லை என்றால் நெருக்கடி கொடுத்து லஞ்சம் வாங்குகிறார்கள்.

ஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்!

புதிதாக மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது, கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், பொறுப்பேற்பு படிவம், முத்திரைத்தாள் எனப் பல ஆவணங்கள் கேட்பார்கள். ஆனால், விதிப்படி இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தைக் கொடுத்தாலே போதுமானது. வேண்டுமென்றே இழுத்தடித்து பணம் பெறுவதற்காக இப்படி அலைக்கழிக்கிறார்கள். பெயர் மாற்றத்துக்கும் இப்படித்தான் நெருக்கடி கொடுப்பார்கள். கிராமம் மற்றும் ஒரு சில நகரப் பகுதிகளில் வீடு கட்டும்போது அவர்களுக்கு மின்சாரத் தேவையே இருக்காது. அதனால், மின் இணைப்பு பெறாமல் வீடு கட்டுவார்கள். அப்படி கட்டிக்கொள்ளவும் உரிமை இருக்கிறது. ஆனால், அவர்களிடம் வலியச்சென்று மின் இணைப்பு கண்டிப்பாகப் பெறவேண்டும் என நிர்பந்திப்பார்கள். அப்படி இணைப்பு பெறவில்லை என்றால் வீடு கட்டி முடித்ததும், புதிய மின் இணைப்பு கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க மின்வாரியத்தைத் தொடர்பு கொண்டோம். வாரியத்தின் அதிகாரி ஒருவர் ‘பெயர் வேண்டாமே’ என்ற வேண்டுகோளுடன் பதில் அளித்தார். “வீடு கட்டும்போது பில்டர்கள், எலக்ட்ரிக்கல் வேலை செய்பவர்கள் எனத் தொழில் சார்ந்த பயன்பாட்டுக்குத்தான் மின்சாரம் பயன்படுத்தப் படுகிறது. அதனால், வீட்டுப் பயன்பாட்டுக்கான கட்டணத்தில் மின்சாரம் வழங்கமுடியாது. அதனால்தான் வர்த்தகக் கட்டணம். ஆனால், Tariff - 5-க்குப் பதிலாக, Tariff - 6-யை வசூலித்தால் ஊழல் ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம்.

ஒரு சிலருக்கு நான்கைந்து வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து பேரைக் குடி வைப்பார்கள். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாடகை வசூலிப்பார்கள். அது விடுதி மாதிரிதான். சிறப்பு விசாரணைப் படை சென்று விசாரித்து, இதைக் கண்டுபிடித்தால்தான் அபராதம் விதிப்பார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை.

புதிய மின்சார இணைப்புக்கு, யார் பெயரில் இணைப்பு வாங்குகிறார்களோ அவர்களிடம், அந்த இடத்தின் உரிமையை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் கேட்போம். தேவையைப் பொறுத்து, வெவ்வேறு சான்றிதழ்கள் கேட்க வேண்டிய சூழல் வரலாம். பெயர் மாற்றத்துக்கு மட்டும்தான் முத்திரைத்தாளில் எழுதி வாங்குவோம்.

புதிய இணைப்பைப் பெறுவதற்கு, திட்ட அனுமதி படிவம், வீட்டுவரி ரசீது, உள்ளாட்சித் துறையின் ஒப்புதல், தாசில்தாரின் தடையின்மை சான்றிதழ் ஆகியவை தேவை. பெயர் மாற்றுவதற்கு, புதிய வீடு வாங்கியிருந்தால் அதற்கான ரசீது வேண்டும். சொத்துப் பிரித்த வீடு அல்லது கட்டடம் என்றால், பிரித்துக் கொடுத்ததற்கான ஆவணம் வேண்டும். மற்ற பங்குதாரர்களிடம் தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும்” என்றார்.

ஷாக் அடிக்க வைக்காதீங்க ஆபிஸர்!