ஊரடங்கால் உணவின்றித் தவித்த நாடோடிகள்... வாசகர்களின் பங்களிப்போடு களத்தில் இறங்கிய விகடன்!

நிறைய தன்னார்வலர்கள் களத்துக்கு வந்து உதவிகள் செய்கிறார்கள். ஆனாலும் தேவை அதிகமிருக்கிறது. மக்களுக்குக் கரம் கொடுத்து உதவும் நோக்கில் ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் இந்த மக்களைப் பெரிய அளவில் சென்றுசேரவில்லை. பெரும்பாலான நாடோடிகள், பழங்குடிகளுக்கு ரேஷன் கார்டுகள்கூட இல்லை.

நிறைய தன்னார்வலர்கள் களத்துக்கு வந்து உதவிகள் செய்கிறார்கள். ஆனாலும் தேவை அதிகமிருக்கிறது. கொரோனா பேரிடரில் தவிக்கும் மக்களுக்குக் கரம் கொடுத்து உதவும் நோக்கில் ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில், வாசகர்கள் வாங்கும் விகடன் குழும இதழ்களின் சந்தா, ஆன்லைன் சந்தா, விளம்பரங்கள், பிரசுரப் புத்தகங்கள் உள்ளிட்டவை மூலம் கிடைக்கும் வருவாயில் 10 சதவிகிதத் தொகையையும் இந்தச் சேவைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தோம். இவைதவிர, தவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
வாசகர்களின் கரம் பற்றிக்கொண்டு மக்களுக்கு உதவ களமிறங்கியிருக்கிறது விகடன். முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் 65 நாடோடிக் குடும்பங்களுக்கு ரூ1.20 லட்சம் செலவில் 2 மாதத்துக்குத் தேவையான மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன. அம்பத்தூர் வட்டாரத்தில் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்த இந்த நாடோடி சமூக மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன் திருமுல்லைவாயிலில் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மணி மாலைகள் செய்து ரயில்களில் விற்பது, கோயில் திருவிழாக்களில் பொம்மைகள் விற்பது, சவுரி முடி வியாபாரம், சாலைகளில் இரும்புத் துகள்களைச் சேகரித்து விற்பதுதான் இவர்களின் தொழில். இந்த 65 குடும்பங்களில் 40 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டை என எந்த அடையாளமும் இல்லை. அரசுப்பதிவேடுகளில் இடம்பெற்றிராத இந்த மக்கள், தினமும் உழைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் சாப்பிடுபவர்கள். ஊரடங்கு முற்றிலுமாக இவர்களை வீடுகளுக்குள் முடங்கவைத்துவிட்டது. அதனால் உணவு கிடைக்காமல் தவித்தார்கள்.
ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி முன்னிலையில், இந்த 65 குடும்பத்தினருக்கும், முறையான சமூக விலகலைக் கடைப்பிடித்து அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட, 1800 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருள்களை விகடன் குழுவினர் வழங்கினர். இடைவெளியற்று ஒன்றியிருக்கும் வீடுகள். அதற்குள் குழந்தை, குட்டிகளோடு முடங்கியிருக்கிறார்கள் மக்கள். "தினமும் இரும்புப் பொறுக்கியும், பாசிமணி வித்தும் வயிறு கழுவுற ஆளுங்க, சாமி. காலையில இருந்து ராத்திரி வரைக்கும் கஷ்டப்பட்டாலும் அதிகபட்சம் 200 ரூபாதான் கிடைக்கும்.

அத வெச்சு புள்ள குட்டிகளுக்குப் பால் வாங்கி கொடுத்துட்டு மிச்சம் இருக்கறதுல பசியாத்திக்குவோம். எங்கள வேற வேலைக்கும் சேத்துக்க மாட்டாங்க. கிடைக்குற 200 ரூபாயும் இந்த ஊரடங்கால இல்லாமப் போயிடுச்சு. எங்களோட சேந்து பிள்ளைகளும் பட்டினி கிடக்குதுக. ரேஷன் கார்டு இல்லாததால் அரசாங்கம் கொடுக்கிற உதவிகள்கூட கிடைக்கலே. ரேஷன் கார்டு வச்சிருக்க எங்க மக்கள் வாங்கினதை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தாங்க. அம்மா உணவகத்துல இருந்தும் அப்பப்போ சாப்பாடு கொடுப்பாங்க. இப்போ இந்தப் பொருள்களைப் பார்த்தவுடனேதான் நம்பிக்கை வருது" என்று நெகிழ்ந்தார் பென்சிலய்யா.வாசகர்கள் பங்களிப்போடு விகடனின் அறப்பணி தொடரும்!
பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.
நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.