கொரோனாவால் வேலையிழந்த பழங்குடி மக்கள்... களத்தில் இறங்கிய விகடன்!
பிள்ளைகள் எல்லாம் பட்டினியால் வாட உதவிகள் கிடைக்காதா என தவித்துக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து வேண்டிய உதவிகள் செய்ய முடிவெடுத்தது விகடன்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதன் தாக்கம் ஒருபக்கம் என்றால் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு சாமானிய மக்களின் வாழ்வையே உருக்குலையச் செய்திருக்கிறது. தினக்கூலிகளில் தொடங்கி மாற்றுத் திறனாளிகள், பழங்குடிகள், நாடோடிகள் என ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி இருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவை பலரையும் சென்றடைவதில் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாகப் பழங்குடிகள் மற்றும் நாடோடிகள் சமூக மக்கள் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டுகளோ ஆதாரோ கிடையாது. அன்றாட வருமானம் ஒன்றையே நம்பி வாழும் இந்த ஏழை மக்களைத் தன்னார்வலர் சமூகம்தான் கரம் கொடுத்துக் காக்கிறது.
நம்முடைய விகடன் குழுமமும் வாசகர்களோடு இணைந்து உதவிகள் தேவைப்படுகிற மக்களைக் கண்டறிந்து தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளைச் செய்துவருகிறோம்.
இதற்கென விகடனின் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக ரூபாய் 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஏப்ரல் மாதத்தில் விகடன் குழும இதழ்களின் சந்தா, ஆன்லைன் சந்தா மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயில் 10 சதவிகிதத் தொகையையும் இந்த சேவைக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். இதோடு வாசகர்களாகிய உங்களுடைய பங்களிப்பும் சேர்த்துத் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு உதவிகள் செய்துவருகிறோம்.
இந்த நிவாரண உதவிப் பணியின் முதல் முன்னெடுப்பாக அம்பத்தூர் திருமுல்லைவாயில் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த 65 நாடோடி குடும்பங்களுக்கு இரண்டு மாதத்துக்கான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினோம். அடுத்தகட்டமாக, புனிதத்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள வீதிகளில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்தவர்களைப் பாதுகாக்கும் மனோலயா காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 40 பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 540 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சென்னை திருவேற்காட்டை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வாழ்ந்துவரும் பூம்பூம் மாடு தொழில் செய்யும் மக்கள் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது. அயப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள காலி மைதானத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர் இந்த மக்கள்.
கழிவறை வசதிகள் கூட இல்லாத குடிசைகளில் வசிக்கும் இவர்களுக்கு முப்பது ஆண்டுக்காலமாக அடிப்படை வசதிகள் கூட இல்லை. ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை என எதுவுமே இவர்களுக்கு இல்லை. அதனாலேயே அரசு அறிவித்த எந்த நிவாரண உதவியும் இவர்களுடைய குடிசைகளை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் தங்களுடைய மாடுகளோடு அலைந்து சராசரியாக 200 ரூபாய்வரை சம்பாதித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஊரடங்குக்குப் பிறகு அதற்கும் வழியில்லாமல் போனது. பிள்ளைகள் எல்லாம் பட்டினியால் வாட உதவிகள் கிடைக்காதா என தவித்துக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து வேண்டிய உதவிகள் செய்ய முடிவெடுத்தோம்.
10 குடும்பங்களுக்கும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பருப்பு, சர்க்கரை உட்பட அத்தியாவசிய சமையல் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதியின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழங்கினோம்.
``இந்த மைதானத்துலையே தான் நாங்க கடந்த முப்பது வருஷமா எங்க புள்ள குட்டிங்கள வெச்சிட்டு வாழ்ந்துட்டு வரோம். மைதானத்துல ஓலைக் குடிசை போட்டுட்டு இருக்குறோம், இப்பவும் கூட ராத்திரியானா பாம்பு, பூச்சித் தொல்லை, ஒரு மழை காத்து அடிச்சா கூட எங்க நிலைமை மோசமாயிடும். எங்க எல்லாருக்கும் சோறு போடுறதே எங்க மாடுங்கதான். இங்க ஒரு பத்து மாடு இருக்கு அந்த மாடுகளுக்கு பயிற்சி கொடுத்து எங்க தொழிலுக்கு தயார் படுத்தி வெச்சுருக்கோம். தினமும் அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், போரூர் குன்றத்தூருனு தொழிலுக்குக் கிளம்புவோம்.
நாள்முழுக்க அலைஞ்சு திரிஞ்சாலும் நூறு இருநூறு பாக்குறதே ரொம்ப கஷ்டம்தான். அதை வச்சுதான் வீட்டையும் மாட்டையும் கவனிச்சிக்கணும். இந்த நேரத்துல ஊரடங்கு போட்டதால வருமானத்துக்கு வழியில்லாம வீட்டுக்குள்ள முடங்கிக் கெடக்குறோம். அரசாங்கம் எங்களுக்கு எந்தவிதத்துலையும் உதவ முன் வரல, நாங்க இருக்குற இடத்துக்கு பக்கத்துலையே தான் ரேஷன் கடை இருக்கு. ஊர்ல உள்ள எல்லாருக்கும் ஆயிரம் ரூபாய், அரிசி, பருப்புனு கொடுத்தாங்க. ஆனா, ஒருவேளை சோத்துக்குக்கூட வழியில்லாம தவிச்சுக்கிட்டு கிடக்கற எங்களுக்கு எதுவுமே கிடைக்கல...
இப்படிப்பட்ட நிலைமைல இப்போ இந்தப் பொருள்கள பார்த்தவுடன்தான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு சார் " என்று அன்பும் நன்றியுமாகப் பேசினார் பூம் பூம் மாட்டுக்காரர் காளிதாஸ்.
பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களைத் தொடர்ந்து கண்டறிவோம்... கரம் கொடுப்போம்.
பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.
நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.