சமூகம்
Published:Updated:

கல்விக்கு கை கொடுப்போம்! - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

கலெக்டருடன் சந்திரிகா
பிரீமியம் ஸ்டோரி
News
கலெக்டருடன் சந்திரிகா

கங்கா, சந்திரிகா, மெர்லின் ஜீவிதா... இவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் பிறந்த மாணவிகள். வறுமை இவர்களை விரட்டினாலும் படிப்பில் சுட்டிகள்.

12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் பரிதவித்து நின்ற இவர்களின் வாழ்வில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்ச, கைகொடுத்திருக்கிறது விகடன்.

வீடு இல்லாத கங்கா...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலையடுத்த வெள்ளிச்சந்தைப் பகுதியில் உள்ள புளியமரத்தடியில் பிறந்து வளர்ந்தவர் கங்கா. அவரின் தந்தை சுரேஷ், ஊர் ஊராகச் சென்று குடை ரிப்பேர் மற்றும் செருப்பு தைக்கும் தொழில் செய்துவருகிறார். சிறுவயதிலேயே தாயை இழந்து, பிழைப்புக்காகச் சுற்றும் அப்பாவுடன் கங்காவும் நாடோடி வாழ்க்கை வாழவேண்டியதானது. தொழிலுக்காக சுரேஷ் செல்லும் ஊர்களில் தற்காலிக டென்ட் அமைத்து வாழ்ந்துவந்தனர்.

பத்மதாஸுடன் கங்கா
பத்மதாஸுடன் கங்கா

இவர்களின் சூழலை உணர்ந்த வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ், கங்கா மற்றும் அவரின் அண்ணன் முத்துசூர்யா இருவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டார். கங்கா ஆர்வமாகப் படித்தார். தற்போது 12-ம் வகுப்பில் 463 மதிப்பெண் பெற்ற கங்காவுக்கு, நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.காம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் படிப்பைத் தொடர வசதியில்லாமல் தவித்தார்.

கங்கா நம்மிடம், ‘‘சின்னவயசுல இருந்தே வீடு இல்லாம ஊர் மந்தையில் கொட்டகை போட்டும், கடை வாசலில் இரவு படுத்துறங்கியும் வாழறோம். அப்போ ஒண்ணும் தெரியல. ஆனா, இப்போ வெளியில் சொல்ல முடியாத சிரமங்கள். விடுதியில தங்கிப் படிக்கலாம்னா, விடுதிக் கட்டணம் செலுத்த வசதியில்லை’’ எனக் கலங்கினார். கங்காவின் வலிகளை அப்படியே விகடனில் பதிவுசெய்தோம்.

குடும்பத்தினருடன் மெர்லின் ஜீவிதா
குடும்பத்தினருடன் மெர்லின் ஜீவிதா

இதையடுத்து, பெயரைக் குறிப்பிட விரும்பாத ஓர் அமைப்பு மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த ஹரீஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கங்காவுக்கான இரண்டு வருட விடுதிக் கட்டணமான 70,000 ரூபாயை கல்லூரியில் நேரடியாகச் செலுத்தினர். கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், நாகர்கோவில் கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த முத்துராமன் ஆகியோர், கங்கா படிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கியுள்ளனர். கங்காவின் கல்விக்கு உதவுவதாக, பலரும் உறுதியளித்துள்ளனர். கங்கா, இப்போது விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார்.

சந்திரிகாவுக்குக் கைகொடுத்த கலெக்டர்!

சந்திரிகாவின் வலிகள், இன்னும் ரணமானவை. இவர், ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா தீத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர். மூளை முடக்குவாதத்தால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்ட இவரால், இயல்பாக நடக்க முடியாது. 12-ம் வகுப்பில் 461 மதிப்பெண் எடுத்த இவரை, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவரின் தந்தை சேர்த்துள்ளார். போதாதகாலம்... அவரின் அம்மாவுக்கு சமீபத்தில் இதய அறுவைசிகிச்சை செய்ததால், குடும்பம் நலிவடைந்தது.

கலெக்டருடன் சந்திரிகா
கலெக்டருடன் சந்திரிகா

நம்மிடம் பேசிய சந்திரிகா, ‘‘அம்மா, படுத்தப் படுக்கையா இருக்காங்க. கூலி வேலைசெய்யும் அப்பாவின் சம்பாத்தியம், அம்மாவின் மருத்துவச் செலவுக்கே பத்தல. இந்த நிலையில தினமும் காலேஜுக்குப் போய் வர முடியாத சூழல். விடுதியில் தங்கிப் படிக்க வசதியில்லை. மாதம் 3,000 ரூபாய் ஆகுமாம். அப்பா ரொம்பவே சிரமப்படுறார். இவ்வளவு மார்க் எடுத்தும் என்னால மேல படிக்க முடியாமப்போயிடுமோனு கவலையாயிருக்கு’’ என்று கலங்கினார்.

சந்திரிகாவின் நிலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் விளக்கினோம். ‘‘நிச்சயம் படிக்க வழிசெய்கிறேன்’’ என்று உறுதியளித்தார். கலெக்டரின் முயற்சியால் அவரின் நண்பரும் கல்லூரி நிர்வாகமும் சேர்ந்து, சந்திரிகாவின் மூன்று வருட கல்லூரிக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை ஏற்றுள்ளனர்.

படிப்பை பாதியில் நிறுத்திய ஜீவிதா!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின் ஜீவிதா. ராணுவ வீரரான இவரின் தந்தை, சூழல் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். ஜீவிதாவுக்கு மனவளர்ச்சிக் குன்றிய அண்ணன், ஒரு தம்பி மற்றும் இரண்டு அக்கா. தாய் ஸ்டெல்லா, கூலி வேலைக்குச் சென்றுதான் வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்தார். குடும்பச் சூழலை உணர்ந்து படித்த ஜீவிதா, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 991 மதிப்பெண் எடுத்தார். விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பி.காம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்காகச் சென்னை சென்றார்.

நம்மிடம் பேசிய ஜீவிதா, ‘‘வேலை செஞ்சு சம்பாதிச்ச பணத்துல, வீட்டுக்குக் கொடுத்ததுபோக, கொஞ்சம் சேர்த்துவெச்சேன். அக்கா இருவருக்கும் திருமணம் முடிஞ்சது. திரும்பவும் படிக்கணும்னு முடிவெடுத்தேன். ஏற்கெனவே அரசுக் கல்லூரியில் படித்துப் பாதியில் நின்னதால, இடம் கிடைக்கிறதுல சிக்கல். அதனால, புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில பி.காம் சேர்ந்தேன். நான் வெச்சிருந்த பணம், ஒரு வருட கல்வி மற்றும் ஹாஸ்டல் கட்டணத்துக்கே பத்தல. இப்போ தம்பி 12-ம் வகுப்பு முடிச்சிட்டு, என் படிப்புக்காக வேலைக்குப் போறான்.

இதுக்கிடையில, அம்மாவுக்கு கிட்னி பிரச்னை வேற. தம்பியின் சம்பளம் குடும்பத்துக்கே பத்தல. இப்படியான சூழல்ல காலேஜ் ஃபீஸ் கட்ட முடியல. கல்லூரி நிர்வாகத்துல பலமுறை அவகாசம் வாங்கிட்டேன். இனியும் பணம் கட்டலைன்னா, திரும்பவும் படிக்க முடியாமப் போயிடுமோன்னு பயமா இருக்கு’’ என்று கலங்கினார்.

ஜீவிதாவின் சூழலை உணர்ந்த கரூர் `இணைந்த கைகள்’ அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி, இணையதள நண்பர்கள் மூலம் ஜீவிதாவின் ஓராண்டு கல்விக் கட்டணத்தை நேரடியாகக் கல்லூரியிலேயே செலுத்தினார். அத்துடன், ஜீவிதாவின் சூழலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கிச் சொல்ல, அரசு விடுதியில் ஜீவிதா தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஜீவிதா, கங்கா, சந்திரிகா போன்று சாதிக்கத் துடிக்கும் மாணவிகளுக்கு உதவ வேண்டியது இந்தச் சமுதாயத்தின் கடமை!

மீண்டும் பள்ளியில் சேர்ந்த நித்யா!

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள வீ.தவிட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரின் மகள் நித்யாவை, இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு சேர்த்துள்ளனர். ஒரு வாரம் கழித்து பள்ளிக்குச் சென்ற சுப்பையா, பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக, நித்யாவை வேலைக்குப் போகச் சொல்வதற்காக இப்படிச் செய்துள்ளார் சுப்பையா.

தாயுடன் நித்யா
தாயுடன் நித்யா

நித்யாவுக்கோ, வேலைக்குச் செல்வதில் உடன்பாடில்லை. தந்தையோ, குடும்ப வறுமையைக் காரணம் காட்டியுள்ளார். தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே உயிர் பிழைத்துள்ளார் நித்யா. அதன் பிறகு சுப்பையா மனமிறங்கி, மகள் படிப்பதற்குச் சம்மதித்தாலும், பள்ளியில் சீட் கிடைக்கவில்லை. நம்மிடம் பேசிய நித்யா, ‘‘என் போதாதகாலம்... 12-ம் வகுப்புல அட்மிஷன் இல்லைன்னு பல பள்ளிகள் கைவிரிச்சுடுச்சு. இதுக்காக திருச்சி மாவட்ட கலெக்டர்கிட்ட ரெண்டு முறை மனு கொடுத்தேன். இருந்தும் தீர்வு கிடைக்கலை. நான் திரும்பவும் ஸ்கூலுக்குப் போகவே முடியாதா?’’ என்று கலங்கினார்.

‘சைல்டு லைன் எண் 1098’ உதவியுடன், மாணவி நித்யா மற்றும் அவரின் தாய் வீரம்மாள் ஆகியோரை திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தினோம். மாவட்ட குழந்தைகள் நலக்குழு சிறப்பு உத்தரவால், மீண்டும் அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர்கிறார் நித்யா.

வெற்றி பெற்ற ஒவ்வொருவருமே, வாழ்வில் துயரங்களைச் சுமர்ந்தவர்களே! உயரத்துக்குச் சென்று திரும்பிப் பார்க்கையில், துயரங்கள் எல்லாம் துச்சமென மாறியிருக்கும். அப்படி வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் இளந்தளிர்களான இவர்களுக்கு, விகடன் தன் கடமையைச் செய்திருக்கிறது...