ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கரம் பற்றிய விகடன்... கனவை நனவாக்கி மருத்துவராகும் கிராமத்து மாணவி!

கயல்விழி
News
கயல்விழி

தாத்தா, பாட்டி தவிர எனக்கும் தம்பிக்கும் வேற யாருமே இல்லைனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா முகம் தெரியாத இத்தனை மனுஷங்க, அதுவும் இந்த கொரோனா நேரத்துல உதவி, என் வாழ்க்கையை கரையேத்திவிட்டிருக் காங்க.

‘`ரெண்டு வருஷத்துக்கு முன்னால, ஏன் இந்த வாழ்க்கை நம்மகிட்ட இந்தளவுக்கு கருணையில்லாம இருக்குனு மருகி நின்னேன். இப்போ, இந்த உலகம் மேல, மனுஷங்க மேல அன்பும் நன்றியும் ததும்ப நிக்கிறேன் அண்ணே” - கயல்விழி கூறுவது வயதுக்கு மீறிய வார்த்தைகள்தான். ஆனால், இந்த கிராமத்து மாணவியின் மருத்துவர் கனவை நனவாக்கி, அதை சொல்லுமளவுக்கான பக்குவத்தை அவருக்குத் தந்திருக்கிறது வாழ்க்கை.

புதுக்கோட்டை அருகே வலங் கொண்டான்விடுதியைச் சேர்ந்த சசிக் குமார் - விஜயகுமாரி தம்பதிக்கு கயல்விழி, மதிவாணன் என இரண்டு பிள்ளைகள். படிப்பில் படுகெட்டியான கயல்விழியை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்ற கனவு அந்த ஏழ்மை பெற்றோருக்கு. ஆனால், 2020-ம் ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் பல இடிகளை இறக்கியது. சசிக்குமார் இதயநோய் பாதிப்பால் திடீரென இறந்து போக, அந்த துக்கத்தில் விஜயகுமாரியும் அடுத்த சில மாதங்களிலேயே காலமானார். கயல்விழி யும், மதிவாணனும் பரிதவித்துப் போனார் கள். தாத்தா, பாட்டி அரவணைப்பு கிடைத்தாலும், வறுமை வாட்டியது.

கயல்விழி
கயல்விழி

பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த கயல்விழி, கூடவே கூலி வேலைகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். இந்தச் சூழலிலும் பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தது, அந்த அபூர்வம். பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தவர், தாத்தா, பாட்டி, தம்பி எனத் தன்னை நம்பியிருந்த மூன்று ஜீவன் களுக்காக, கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். அவர் தம்பியும், பெயின்டர் வேலைக்குச் சென்று கொண் டிருந்தார். காண தாளாத கயல் விழியின் நிலை குறித்து நாம் விகடன் இணைய தளத்தில், `நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும் - வறுமையிலும் போராடும் கயல்விழி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

`இவர்களுக்கு உதவி தேவை’ என்று விகடன் கைக்காட்டும் மனிதர்களுக்கு ‘நாங்கள் இருக்கிறோம்’ என்பதை ஒவ் வொரு முறையும் ஓடிவந்து சொல்பவர்கள், நம் வாசகர்கள். `தங்கப் புள்ள... நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு... நீ படி!’ என்று சொல்லி கயல்விழிக்கும் அனுப்பி வைத்தனர் அன்பு வார்த்தைகளையும், பண உதவியையும்.

வாசன் அறக்கட்டளையின் ஒருங் கிணைப்பில் கயல்விழியின் வங்கிக் கணக்கில் ரூ.3.92 லட்சம் சேர்ந்தது. அதைக்கொண்டு, கயல்விழியின் தேவைகளை உடனிருந்து பூர்த்தி செய்து கொடுத்தோம். மொபைல் போன் இல்லாததால் ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தவருக்கு ஆண்ட்ராய்டு போன், அரிசி, மளிகைப் பொருள்கள் தொடங்கி, திணறிப்போயிருந்த அவர் தினசரி தேவைகள் வரை சரி ஆக்கினோம். மீத மிருந்த தொகை ரூ. 3 லட்சத்தை, உயர் கல்விக்காக அவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தோம்.

பாட்டி, தம்பியுடன் கயல்விழி (பழைய படம்)
பாட்டி, தம்பியுடன் கயல்விழி (பழைய படம்)

“தாத்தா, பாட்டி தவிர எனக்கும் தம்பிக்கும் வேற யாருமே இல்லைனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா முகம் தெரியாத இத்தனை மனுஷங்க, அதுவும் இந்த கொரோனா நேரத்துல உதவி, என் வாழ்க்கையை கரையேத்திவிட்டிருக் காங்க. இவங்க எல்லாரும் பெருமைப் படுற மாதிரி, நான் நல்லா படிச்சு டாக்டர் ஆவேன். இப்போ என் மன செல்லாம் ஓடுறது இதுதான்’’ என்று கயல்விழி உருக்கமாகவும், உறுதியாகவும் சொன்னார் அன்று. அது வெறும் சொல்ல அல்ல, செயல் என்று நிரூபித்து விட்டார் இன்று.

``ப்ளஸ் டூ தேர்விலும் நான் பள்ளியில் முதலிடம் வந் தப்போ, விகடன் வாழ்த்தின தோடு, `நீட்’ தேர்வுக்குத் தயாராக தேவையான புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தீங்க. `நீட்’ பயிற்சி வகுப்புக்கும் வழி காட்டுனீங்க. முதல் முயற்சியில என்னால வெற்றிபெற முடியலை. ஆனாலும், இதோ இப்போ ரெண்டாவது முயற்சியில ஜெயிச் சுட்டேன். `நீட்’ தேர்வில் 262 மதிப் பெண் எடுத்தேன். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைச் சிருக்கு. எனக்கு வைராக்கியத்தையும், வாழ்க்கையையும் கொடுத்த விகடனை யும், முகம் தெரியாத உறவுகளையும் என்னிக்கும் மறக்கமாட்டேன். இப்போ என் தன்னம்பிக்கை ரெண்டு, மூணு மடங்கு கூடியிருக்கு’’ - கயல்விழி பேசப் பேச நமக்கும் வாழ்க்கை மீதான, சக மனிதர்களின் மீதான நம்பிக்கை அடர்த்தியானது.

கயல்விழியின் பாட்டி மாசிலாமணி, ‘`போக வேண்டிய நாங்க இருக்க, என் மகனும் மருமகளும் ரொம்ப சீக்கிரமாவே எங்களை விட்டுட்டுப் போயிட்டாங்க. பச்சப்புள்ளைங்கள எப்படி கரை சேர்க்கப்போறோம்னு தவிச்சிப் போயி ருந்தோம். கயலு கூலி வேலைக்குப் போயிட்டு வந்து, வீட்டு வேலைகளப் பார்த்து, பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி ஓடி, அப்பப்போ எங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போயி, இதுக்கு இடையில படிச்சுக்கிட்டும் இருக்குறதை பார்க்கப் மனச போட்டு பிசையும். புள்ளைய சீக்கிரமா யார் கையிலயாவது பிடிச்சிக் கொடுத்திடணும்னுதான் நாங்க நெனச் சோம். நீங்க அவ படுற கஷ்டத்தையெல் லாம் எழுதினதுல இருந்து, நிறைய பேரோட ஆதரவும் உதவியும் கிடைச்சது. எங்க புள்ள இப்போ மருத்துவச்சி ஆகப்போகுது’’ என்றார் கண்ணீர் ததும்ப.

ஆசிரியர் வசந்தாவுடன்...
ஆசிரியர் வசந்தாவுடன்...

கயல்விழியின் ஆசிரியர் வசந்தா, ``கயல் ரொம்ப பொறுப்பான பொண்ணு. நாம என்ன சொன் னாலும், அது தன்னோட நன்மைக்குதாங்கிறதை புரிஞ்சு நடந்துக்கும். அவங்க அம்மா, `புள்ளைய நல்லா படிக்கவெச்சு பெரிய ஆளாக்கணும் டீச்சர்’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. உதவி செஞ்ச, வழிகாட்டின எல்லாரும் இரண்டாம் தாயா இருந்து அவளை அரவணைச்சுக்கிட்டோம். இன்னிக்கு இந்த கிராமத்து பொண்ணு வெள்ளை கோட் மாட்டப் போறது அவ்வளவு சந்தோஷமா, பெருமையா இருக்கு. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எல்லாத்தையும் மீறி சாதிக்கலாம்ங்கிறதுக்கு, இனி எங்க மாணவர்களுக்கு கயலைதான் உதாரணமா, உத்வேகமா சொல்வோம்’’ - நெகிழ்ச்சியுடன் நிறை வுற்றன அவர் வார்த்தைகள்.

விகடனின் வேண்டுகோளை ஏற்று உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

கயல்விழிகள் கைதூக்கி விடப்படுவார்கள்; விகடன் பொறுப்பு தொடரும்!

`நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும் - வறுமையிலும் போராடும் கயல்விழி' - கட்டுரையை https://bit.ly/3UKxAdf லிங்க்கில் படிக்கலாம்.

உதவியவர்களின் பெயர்ப் பட்டியலை https://bit.ly/3UC4VHa லிங்க்கில் காணலாம்.