Published:Updated:

விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!

விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பொக்கிஷம்

19.11.1978 ஆனந்த விகடன் இதழில்...

விகடன் பொக்கிஷம் தொகுப்பு: ரவி பிரகாஷ்

ந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் தியேட்டரில் சினிமா எதுவும் வெளியாகவில்லை. 1978-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக சிகப்பு ரோஜாக்கள், தப்புத் தாளங்கள், வண்டிக்காரன் மகன், பைலட் பிரேம்நாத், ஸ்ரீ காஞ்சி காமாட்சி, கண்ணாமூச்சி, தாய் மீது சத்தியம், மனிதரில் இத்தனை நிறங்களா, தங்க ரங்கன், அவள் அப்படித்தான், அதிர்ஷ்டக்காரன் என 11 படங்கள் ரிலீஸாயின. கமல், ரஜினி இருவருக்குமே தலா மூன்று படங்கள். இந்த 11 படங்களுக்குமான விமர்சனங்களையும் 19.11.78 தேதியிட்ட சினிமா ஸ்பெஷலில் வெளியிட்டது ஆனந்த விகடன். ஒரு இதழில் அதிகபட்ச சினிமா விமர்சனங்கள் இடம்பெற்ற இதழ் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

அந்த விமர்சனங்களின் ஹைலைட் மற்றும் மதிப்பெண்கள் கீழே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி 25+23=48

மனதில் பதியும்வசனங்கள், குளுமையான வண்ணப் படப்பிடிப்பு, பழசும் புதுசும் கலந்த நட்சத்திரக் குவியல்- சுவைமிக்க அவியல்!

வண்டிக்காரன் மகன் 23+28=51

செவ்வாய் மண்டலம் , சதிபதி, அம்பாள் வழிபாடு -கலைஞரின் ரசிக்கவேண்டிய சொல் லாட்சிக்குச் சில உதாரணங்கள். இந்தப் படம் முழுக்க முழுக்க பிரசாரப் படம் இல்லை என்றாலும் வசனங்களிலும் சில காட்சிகளிலும் அரசியல் தூவப்பட்டு இருக்கிறது. கதை பழையது என்றாலும் தொட்டுக்கொள்ள சம்பவங்கள் என்ற ஊறுகாயும் அரசியல் மிளகாய்ப் பொடியும் இருப்பதால் ருசிக்கவே செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!

மனிதரில் இத்தனை நிறங்களா! 25+16= 41

சமூகத்தில் நடமாடும் மனிதர்களின் வெவ்வேறு நிறங்களை உரித்துக்காட்டுவது போன்ற பிரமை ஏற்படுத்தும் தலைப்பு. Arresting title. அய்யனார் மீசை, கையில் பீடி அவ்வப்போது நாலு வார்த்தை இவ்வளவுதானா கமல்ஹாசன். தியேட்டரில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? எடிட்டர் தூங்கிவிட்டார் என்று . ஐயகோ...! பழி ஓரிடம்; பாவம் ஓரிடமா?

பைலட் பிரேம்நாத் 26+22 =48

கதையில் வருவது ஒரே ஒரு முடிச்சுதான். இதற்குக் கதைத் தலைவர் பைலட் பிரேம்நாத் ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, டிரைவர் ராம்நாத் ஆகக்கூட இருக்கலாமே. பாசமுள்ள தந்தை, குறும்பான காதலன், சந்தர்ப்பவசத்தால் மனைவியையே சந்திக்க வேண்டிய துரதிர்ஷ்ட கணவன்-சிவாஜிக்கு இன்னொரு டெய்லர் மேட் ரோல்!

விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!

தாய் மீது சத்தியம் 23+21= 44

சங்கர் கணேஷ் இசையமைத்திருக்கும் 2 பாட்டுகள் நிச்சயம் ஹிட்டாகும். காரணம், இவை ஏற்கெனவே ஹிட்டான பழைய பாடல்களின் மறுபதிப்பு‌. படத்தில் உள்ள ஒரே புதுமை முதல்தடவையாக ரஜினிகாந்த் பாகப்பிரிவினை பாணிக் குடுமியுடன் வருவது. படம் எடுத்தவர்களுக்கே குடுமியுடன் ரஜினியைப் பார்க்க சங்கடமாக இருந்ததோ என்னவோ, நல்ல காலமாக பாதியில் அவர் உடையை மாற்றி குடுமியை எடுத்து விட்டார்கள்.

தப்புத்தாளங்கள் 26+26=52

இதற்கு முன்னால் பாலசந்தர் இயக்கிய படங்களில் ஒவ்வொரு காட்சியும் டைரக்டர் இதோ இருக்கிறார் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் நாம் டைரக்டரை மறந்து காட்சியோடு ஒன்றிப் போகிறோம். இது டைரக்டருக்கு ஒரு வெற்றியே!

விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!

தங்கரங்கன். 22+17= 39

டைசிக் காட்சியில் செய்யாத குற்றத்துக்கு தேங்காய்க்கு தூக்குத்தண்டனையாம். தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றாகிவிட்டதாம். முகத்துக்கு நேரே தூக்குக்கயிறும் கறுப்பு முகமூடிகூட போட்டாகிவிட்டதாம். அய்யய்யோ தேங்காயைத் தூக்கில் போட்டு விடுவார்களே என்று நாம் பதறிப்போய்விட வேண்டுமாம். அறிவு வளர்ச்சி குறைந்த ரசிகன்கூட புன்னகையுடன் அலட்டிக் கொள்ளாமல் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து இருப்பான். மன்னிக்கவேண்டும் ப டு 'ஸில்லி!'

சிகப்பு ரோஜாக்கள் 22+31 =53

ரவிவர்மா ஓவியம் போல ‘16 வயதினிலே’யை உருவாக்கிய பாரதிராஜா, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்னும் ஒரு மாடர்ன் ஆர்ட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவருடைய டைரக்‌ஷனைப் பற்றி ஒரு வார்த்தை : `விறுவிறுப்பு!' நடிப்பில் கமலஹாசன் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார். `நத்திங் நத்திங்’ என்ற அவர் கதறும் காட்சியில் `எவ்ரிதிங் எவ்ரிதிங’ என்று சொல்ல வைக்கிறது அவரது நடிப்பு. தமிழில் இப்படி ஒரு த்ரில்லர் படம் இத்தனை த்ரில்லிங்காக சமீபத்தில் வந்ததாக நினைவில்லை.

கண்ணாமூச்சி 27+20= 47

குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது அதில் ஒரு நீதி இருந்தால் நன்றாக இருக்கும். பிஞ்சு மனத்தில் இப்படிப்பட்ட படங்கள் மூலமாக நல்ல நீதிகளை சுலபமாக நுழைத்து இருக்கலாமே! லீவு நாட்களில் குழந்தைகளை இந்தப்படத்திற்கு அழைத்துச் செல்லலாம். நந்தினியின் தோடு, மூக்குத்தி ரோஜாப்பூ எல்லாம் பரத்துக்கு மாறும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

அவள் அப்படித்தான் 18+18 =36

டிகர்களில் ஒருவர்கூட நடிக்கவில்லை; பாத்திரங் களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள். வசனங்களில் ஏற்ற இறக்கங்கள் கிடையாது. உள்ளத்தில் கிடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்து நடிப்பதில்லை. காமிராவின் முன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது படத்தின் சிறப்பு. `இயற்கை' என்ற போர்வையில் நிறைய ஆங்கில உரையாடல்கள். எத்தனை பேருக்கு அது புரியும்? எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை என்ற அலட்சியம்தான் தெரிகிறது. அப்படி என்றால் ஏன் தமிழ்ப் படம் எடுக்க வேண்டும்?

அதிர்ஷ்டக்காரன் 18+16 =34

கைச்சுவைப் படம் எடுப்பது என்பது தமாஷான விஷயமல்ல. மற்ற படங்களைவிட கதை அம்சத்திலும் வசனங்களிலும் காட்சி அமைப்பிலும் அதிகப்படியான கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முயற்சி. அப்படிச் செய்யாமல் ஏனோதானோவென்று எடுத்தால் அது நகைச்சுவைப் படமாக இல்லாமல் நகைப்புக்குரிய படம் ஆகிவிடும். அதிர்ஷ்டக்காரன் இரண்டாவது ரகம்.