Published:Updated:

விகடன் பொக்கிஷம்: அமெரிக்க எம்.ஜி.ஆர்

ரொனால்ட் ரீகன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரொனால்ட் ரீகன்

07.08.1977 ஆனந்த விகடன் இதழில்...

ரு பிரபல திரைப்பட நடிகர், ஒரு மாநிலத்தின் ஆட்சியாளராக வருவது தற்காலத்தில் நடைபெறக் கூடாத காரியம் அல்ல. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய மாநிலமான கலிபோர்னியா மாநிலத்திற்கு ரொனால்ட் ரீகன் (Ronald Regan) என்ற ‘மாட்டினி ஐடல்’ கவர்னராக இருந்திருக்கிறார். ஒரு முறை மட்டுமல்ல; தொடர்ந்து இருமுறை பதவி வகித்திருக்கிறார்.

‘மாட்டினி ஐடலான’அவர் டாம்பிகா என்ற ஊரில் 1911 ம் ஆண்டில் பிறந்தார். அவர் தந்தை காலணிகள் விற்கும் கடை வைத்திருந்தார். ரீகன் தமது மேல்படிப்புக்குத் தேவையான பணத்திற்காக விடுமுறை நாட்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு சம்பாதித்தார். அவரது தாய்க்கு ‘நாடக பைத்தியம்’ உண்டு. தாயின் நாடக மோகம் பையனையும் பலமாகப் பிடித்துக் கொண்டது.

விகடன் பொக்கிஷம்: அமெரிக்க 
எம்.ஜி.ஆர்

அவர் ஒரு சமயம் ஒரு பந்தயத்தைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருந்ததை ‘வார்னர் பிரதர்ஸ்’ என்ற அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு கம்பெனியின் பிரதிநிதி ஒருவர் தற்செயலாகக் கேட்டார். அதன் விளைவாக 1937-ல் திரைப்பட நடிகரானார். அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அநேகமாக ஒரு `நல்ல இளைஞன்’ பாகமே ஏற்றிருக்கிறார். திரைப்பட உலகில் சுமார் 3000 உறுப்பினர்களைக் கொண்ட நடிகர் சங்கத்திற்குத் தலைவராக இருந்திருக்கிறார். அதுவும் தொடர்ந்து ஐந்து முறை!

1966ம் ஆண்டில் தனது 56ம் வயதில் அவர் கலிபோர்னியா மாநில கவர்னர் பதவி தேர்தலுக்கு நின்றார். கவர்னர் பதவி முதல்வர் பதவிக்கு சமமானது. கவர்னர் பொதுமக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுவார். 17-11-1966-ம் தேதி உலக சரித்திரத்திலேயே ஒரு நடிகர் - அதுவும் ஒரு திரைப்பட நடிகர் முதன்முதலாக பெரிய மாநிலத்தின் கவர்னராக நிர்வாகப் பதவியை ஏற்ற தினமாகும்.

அவர் பதவி ஏற்றபோது மாநிலத்தில் என்னென்ன முக்கியமான குறைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு ஜாபிதா தயாரித்தார். மாணவர்கள் கிளர்ச்சி, தண்ணீர்ப் பஞ்சம் நீக்ரோக்கள் - வெள்ளையர்கள் பூசல் - மிக அதிகமான நிர்வாகச் செலவு, அரசாங்க அதிகாரிகளின் சர்வாதிகாரம், சில குற்றங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தன. ஆனால் ரீகன் பதவியேற்ற மாத்திரத்தில் இத்தனை அம்சங்களுக்கும் நிபுணர்கள் அடங்கிய கமிட்டிகள் (Task Force) அமைத்துஅவற்றைப் பற்றிப் பரிசீலனை செய்யச் செய்தார்.

மாஜி திரைப்பட நடிகரும், மாஜி கவர்னருமான அவர் இப்போது தமது இரண்டாவது மனைவியுடன் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். 67 வயதான அவர், இன்றும் இளைஞராகத் தோற்றமளிக்கிறார்‌. புகைபிடிப்பது கிடையாது. மதுபானப் பழக்கம் இல்லை.

- துமிலன்