Published:Updated:

விகடன் பொக்கிஷம்: பிக் பிரதர்!

07.02.07 ஆனந்த விகடன் இதழில்...

பிரீமியம் ஸ்டோரி

(பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல முன்பு நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்று வென்ற நடிகை ஷில்பா ஷெட்டி பற்றி, 07.02.2007 ஆனந்த விகடன் இதழ் ‘ஓ பக்கங்கள்’ பகுதியில் ஞாநி எழுதியது)

விண்வெளியில்கூட மாதக்கணக்கில் வசித்துவிடலாம். ஆனால், ஒரு சிலருடன் ஒரே கூரையின் கீழ் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது என்பதும் வாழ்க்கை யதார்த்தம்தான்!

அப்படிப்பட்ட ஒரு சவாலை எதிர்கொண்டு வென்றிருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்காக, கடந்த ஒரு மாதமாக ‘பிக் பிரதர்’ என்னும் தொடர் நிகழ்ச்சிக்காக ஒரே கூரையின் கீழ் முன்பின் தெரியாத சிலருடன் வசித்து, ‘தாக்கு’ப்பிடிக்கும் போட்டியில் பல கோடி ரூபாய் பரிசு ஷில்பாவுக்குக் கிட்டியிருக்கிறது.

வீட்டுக்குள் அடை(க்கப்)பட்டுக் கிடக்கும் பிரபலங்களின் அந்தரங்க நேரங்கள் போக, மீதி சுமார் 18 மணி நேரமும் அவர்களுடைய நடவடிக்கைகள் வீடியோ கேமராக்களில் பதிவாகி, தினசரி ஒளிபரப்பு செய்யப்படும் தொடர் இது.

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையே, இன்னொருத்தர் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்பும் சராசரி வம்பு மனப்பான்மையைப் பார்வையாளர்களிடம் உசுப்பிவிட்டு, நிகழ்ச்சியைச் சுவாரஸ்யப்படுத்துவதுதான்.

எப்படி? தங்கியிருக்கும் பிரபலங்களுக்கிடையில் காதலோ மோதலோ ஏற்பட்டால்தான் பார்வையாளருக்கு சுவையாக இருக்கும். டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறும். ஆகவே, ஷில்பாவுக்குக் காதல், மோதல் இரண்டும் நிகழ்ந்தன. ஷில்பாவும், ஒரு சக பிரபலமும் சிறிது காலம் ஒருவரோடொருவர் வழிந்தார்கள். இன்னொரு சக பிரபலம் ஷில்பாவை கேலி, கிண்டல், இனத் துவேஷ வசவுகளால் துன்புறுத்தினார்.

அசல் வாழ்க்கையில் காதலும் மோதலும் கல்யாணத்திலோ கொலையிலோ முடியலாம். டி.வி வாழ்க்கையில் அது நிராகரிப்பிலும், மன்னிப்பிலும் முடிக்கப்பட்டது.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

டி.வி வீட்டுக்குள் வசிப்பவர்களை ஒவ்வொரு சுற்றிலும் சிலரை வெளியேற்றுவதில் பார்ப்பவர்களின் ஓட்டும் முக்கியம். கடைசியில் எஞ்சியிருந்தவர்களில் ஷில்பா அதிக ஆதரவுடன் போட்டியில் வென்றார்.

ஷில்பாவுக்கு வயது 32. திருமணம் ஆகவில்லை. சினிமாவிலும் டி.வி-யிலும் அவர் ஒன்றும் நம்பர் ஒன் நடிகை அல்ல. கல்லூரிக்குச் சென்றதில்லை. ஆனால், அவருக்கு ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட பத்து மொழிகள் தெரியும். கராத்தேவில் பிளாக் பெல்ட். எல்லாவற்றுக்கும் மேலாக எய்ட்ஸ் நோய் விழிப்பு உணர்வுக்காகவும், மிருக வதைத் தடுப்புக்காகவும் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். நமக்குப் பிடித்ததை, சமூக அக்கறையுடன் செய்ய விரும்பினால் அதற்கு எதுவும் தடையல்ல என்பதுதான் ஷில்பா தரும் பாடம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு