Published:Updated:

விகடன் பொக்கிஷம்: வந்தார் ராஜகுமாரன்!

விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பொக்கிஷம்

26.11.2000 ஆனந்த விகடன் இதழில்...

ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பெங்களூர் நகரம். `ஜெய் அண்ணவரு!’ என்ற குரல் ராஜ்குமாரின் வீட்டைச் சுற்றிலும் ஒலித்த வண்ணம் இருக்கிறது. முற்றுகையிடும் ரசிகர் பட்டாளத்தைப் பார்க்க ராஜ்குமார் அரைமணிக்கு ஒரு முறை வெளியே ஓடோடி வந்துவிடுகிறார். 70 வயதிலும் சோடை இல்லாத அந்தக் கணீர் குரலுடன், ‘என் அன்பான அபிமானிகளே! உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளும்தான் என்னைக் காப்பாற்றியது” என்று நெகிழ்ச்சியோடு அவர் பேசப்பேச, விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.

‘கர்நாடக கண்மணி’ ராஜ்குமாரின் கூடவே 108 நாட்களும் இருந்தவர் நாகேஷ்.

விகடன் பொக்கிஷம்: வந்தார் ராஜகுமாரன்!

“காட்டு வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது, பயங்கரமானது என்பது அனுபவித்துவிட்டு வந்திருக்கும் எங்களுக்குத்தான் தெரியும்” என்று கண்ணீர் பொங்க நம்மிடம் பேசினார் நாகேஷ்.

“ஆரம்ப நாட்களில் இரவுத் தூக்கம் என்பதே கிடையாது. அண்ணவருவின் காலைப் பிடித்துக்கொண்டு கிடப்பேன் நான். அவர் காட்டு வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்களை விட வீட்டை நினைத்து அவர் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது” என்ற நாகேஷ்,

“எங்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்தினார் வீரப்பன். நாங்கள் கேட்டதெல்லாம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் அருகில் வந்து, ‘என்ன ராஜ்குமார் சார்... எப்படி இருக்கீங்க? தம்பிங்க நல்லா கவனிச்சுக்கறாங்களா? எது தேவைன்னாலும் கூச்சப்படாம கேளுங்க. நான் உடனே தரச் சொல்கிறேன். இல்லைன்னாகூட வெளில இருந்து வாங்கி வரச் சொல்லலாம்’ என்பார் வீரப்பன். பலமுறை பல பொருட்கள் எங்களுக்காக வாங்கி வரப்பட்டன” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விகடன் பொக்கிஷம்: வந்தார் ராஜகுமாரன்!

ராஜ்குமார் விடுவிக்கப்படும்போது வீரப்பனின் கூட்டாளிகளும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு விட்டார்களாம். ராஜ்குமாருக்கும், அவருடன் இருந்த இன்னொரு பணயக் கைதி நாகேஷுக்கும் ஒரு வேட்டி, ரெடிமேடு வெள்ளை ஷர்ட், ஒரு அங்கவஸ்திரம் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்து தன் முன்னாலேயே அவற்றை அணியச் சொல்லி அழகு பார்த்தான் வீரப்பன். பதிலுக்கு ஒரு பரிசு கொடுத்தார் ராஜ்குமார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் உருவம் பொறித்த தங்க நாணயம் அது. சாமுண்டீஸ்வரி கோயிலில் பூஜிக்கப்பட்டு, அதன்பின் ராஜ்குமார் வீட்டில் விசேஷ பூஜை நடத்தி பூஜித்த குங்குமத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பரிசைக் கொடுத்து அனுப்பியிருந்தார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா.

- விகேஷ், உமாபதி

படங்கள்: என். விவேக்.

விகடன் பொக்கிஷம்: வந்தார் ராஜகுமாரன்!

மிழ் எழுத்தாளர்களில் ஒரு முக்கிய இடம் பிடித்தவர் சிவசங்கரி. ஆனந்த விகடனில் ‘ஒரு மனிதனின் கதை’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய தொடர்கதை குடிப்பழக்கத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தத் தொடர்கதை விளம்பரத்துக்காக மவுன்ட்ரோட்டில் சினிமா பேனர் அளவுக்கு பிரமாண்டமாக ஹோர்டிங் வைத்தார் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். இந்தக் கதை பின்னர் ரகுவரன் நடிப்பில் மெகா சீரியலாகவும் வெளியானது.

சிவசங்கரியின் இரண்டாவது சிறுகதை ‘உனக்குத் தெரியுமா?’ ஆனந்த விகடனில் 05.01.1969 இதழில் வெளியானது.

“ஓ! நீதான் எவ்வளவு அழகாக இருக்கிறாய்... உன் கூர்மையான பரந்த கண்களை நேருக்கு நேர் காணும்பொழுது - அம்மா! இதென்ன இவ்வளவு ஆனந்தமான உணர்ச்சி! சக்தீ! ஒரு வேடிக்கை கவனித்தாயா? முன்பெல்லாம் உன்னை - உன் கணவனை சந்திக்கவே பயப்பட்டவன், இன்று உன் கண்களையே உற்று நோக்கிக்கொண்டு, அதை ஆனந்தம் என்கிறானே - இதை கவனித்தாயா...?”

கதையை விரிவாகப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மு.வீரப்பன்

ராஜ்குமார் மீட்புக்குழுவினர் வீரப்பன் நடவடிக்கையில் கண்ட புதிய மாற்றங்களை விவரிக்கிறார்கள்.

M.வீரப்பன் என்று கையெழுத்துப் போட்டு வந்த வீரப்பன் தமிழ்த் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு தமிழ்ப் பற்று அதிகமாகி மு.வீரப்பன் என்றுதான் கையெழுத்து போடுகிறான். திருக்குறள் புத்தகம் வைத்துக்கொண்டு தினமும் கொஞ்ச நேரம் அதைப் படிக்கிறான். தூதுக் குழுவில் இருந்த பேராசிரியர் கல்யாணி, கவிஞர் அறிவுமதியின் ‘நட்புக் காலம்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றை வீரப்பனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இதிலிருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்த வீரப்பன் கவிதைகளையும் படித்து வியந்துகொண்டிருந்தானாம். தூதுக்குழுவில் சென்ற சுகுமாரன் எடுத்துப்போன கேமரா மக்கர் செய்ய, நடுக்காட்டில் தவித்துப்போனார் அவர். உடனடியாக வீரப்பன் தன் வசமிருந்த புத்தம் புதிய விவிடார் கேமரா ஒன்றை அவரிடம் கொடுத்து புகைப்படங்கள் எடுக்கச் சொன்னான். கிளம்பும்போது இந்த கேமராவை என் அன்புப் பரிசாக நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று அதை சுகுமாரனுக்குக் கொடுத்து அசத்திவிட்டான் வீரப்பன். சி.டி பிளேயரில் பாட்டுகள் கேட்பது வீரப்பனின் புது வழக்கமாகி இருக்கிறது. சினிமாப் பாட்டுகள் தவிர ‘இயக்கப் பாடல்கள்’ நிறைய இருக்கிறதாம்.

அதோடு போர்ட்டபிள் டி.வி மற்றும் வி.சி.டி பிளேயர் ஒன்றும் இவர்களிடம் இருக்கிறது. நிறைய வி.சி.டி-களைக் கைவசம் வைத்திருக்கிற வீரப்பன் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் - பாரதி.