Published:Updated:

விகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..?

ஆர்யா - நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா - நயன்தாரா

- எஸ்.கலீல்ராஜா

விகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..?

- எஸ்.கலீல்ராஜா

Published:Updated:
ஆர்யா - நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா - நயன்தாரா

26.12.2012 ஆனந்த விகடன் இதழில்

ஒருவேளை அந்தச் சம்பவம் நடந்தேவிட்டால்... 2012 டிசம்பர் 21-ல் உலகம் அழிந்தேவிட்டால்..?! அப்போது நாம் எதை எல்லாம் மிஸ் செய்வோம்?

புத்தாண்டு பிறக்க இருக்கும் நள்ளிரவு 11.59க்குக் காது கிழிய ஒலிக்கும் ‘இளமை... இதோ இதோ...’ பாடலைக் கேட்க முடியாது.

‘இந்த வருடப் புத்தாண்டு தின மது விற்பனை 70 கோடியாக அதிகரித்தது!’ என்ற டாஸ்மாக் ‘சாதனை’ அறிக்கையைப் படிக்க முடியாது.

‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் பார்க்க முடியாது. உடலே இல்லாதபோது மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தை எப்படிப் பார்ப்பது?

இயக்குநர் பேரரசுவின் அடுத்த அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த, நெகிழ்ச்சி ப்ளஸ் குடும்ப ப்ளஸ் வன்முறைக்காவியமான ‘சுவாமி மலை’யை அத்தனை தமிழர்களும் மிஸ் பண்ணுவார்கள்.

விகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..?

உலகமே கல்லறை ஆகிவிடும் என்பதால், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு, அது தொடர்பான கருணாநிதியின் பல்டிகள்பற்றிய செய்திகளைப் படிக்க முடியாது.

‘‘என்னது... உலகம் அழியப்போகுதா... எனக்கு யாரும் சொல்லவே இல்லையே?’’ என்கிற ஜெயலலிதாவின் அதிர்ச்சி அறிக்கை வராது. அதோடு, ‘‘ஜெயலலிதாவின் விடா முயற்சியால்தான் உலக அழிவு டிசம்பர் 21 வரை தள்ளிப்போனது!’’ என்ற தா.பாண்டியனின் ‘ஜில் ஜங் ஜக்’ அறிக்கையையும் படிக்க முடியாது.

உலகமே கிழிந்து தொங்கிவிடும் என்பதால், ‘ச்சும்மா கிழி கிழி கிழி’ என்று ‘மானாட மயிலாட’ ஷோவில் கலா மாஸ்டர் சொல்வதைக் கேட்க முடியாது.

‘‘தமிழகத்தின் ஒரே முதல்வர், நிரந்தர முதல்வர், டாக்டர் புர்ச்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களைத் தொட்டு...’’ என்று மேடையில் நாஞ்சில் சம்பத்தின் தமிழ் தாண்டவமாடுவதையோ, கொலைவெறி கொண்டு வைகோவை வெளுத் தெடுப்பதையோ கேட்கவே முடியாது.

‘ஆர்யா-நயன்தாரா காதல் ஜோடி பிரிந்தது. மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் நயன்தாராவுக்கு கேக் வெட்டி வரவேற்பு கொடுத்தார் பரத்’ என்கிற ‘நயன் லவ் எக்ஸ்பிரஸ்’ செய்திகளைப் படிக்க முடியாது.

‘‘எப்படியும் ரஜினி சார்கூட ஒரு படத்துலயாச்சும் நடிச்சிரணும்!’’ என்று அறிமுக ஹீரோயின்களின் கன்னிப் பேட்டி... மிஸ்ஸிங்கோ மிஸ்ஸிங்.

ஒரே வரிசையில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என ஒரே காஸ்ட்யூமில் கூப்பிய கைகளோடு, 45 டிகிரி குனிந்த முதுகோடு பவ்யமாக, ரொம்பவே பணிந்து நனைந்த கண்களோடு பாவமாக அ.தி.மு.க அமைச்சர்கள் சிலைகளைப் போல நிற்பதைக் காணவே முடியாதே.

எந்த கேர்ள்ஸ் போட்டோ பார்த்தாலும் வெறிகொண்டு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து, ஃபேஸ்புக்கின் எச்சரிக்கைக்கு ஆளாகி, அடிக்கடி தடைசெய்யப்பட்டு, பித்துப் பிடித்து அலையும் அப்பாவி ஆண்களையும், பெண் பெயரில் ஒளிந்துகொண்டு ஏடாகூட எக்ஸ்சாட் செய்து அலையவிடும் அடாவடி ஆண்களையும் வேறு எங்கு பார்க்க முடியும்?

விகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..?

‘‘ஃபைனலா சொல்றேன்... இன்னும் பத்து நாளில் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும்!’’ என்கிற மத்திய இணை அமைச்சர் நாராயண சாமியின் 11,132-வது பேட்டி வராது.

‘‘இந்தா பேனா, பேப்பர்... எழுதிவெச்சுக்கோ... இனிமே திராவிடக் கட்சிகளோட கூட்டு, பொரியல் எதுவும் கிடையாது. திராவிடக் கட்சியோட கூட்டுவைக்க வேண்டியிருந்தா, திராவகம் குடிச்சிருவேன். லாஸ்ட்டா சொல்றேன்... 2036-ல் பா.ம.க. தனித்து ஆட்சியைப் பிடிக்கும்!’’ ஆவேச மருத்துவரின் அனல் பேட்டியை எங்கே போய்ப் படிக்கிறது?

‘‘ரிட்டையர்டு ஆவதைப் பற்றி இன்னும் சில வருடங்களில் முடிவு செய்வேன்!’’ என்று 2020-ல் சச்சின் பேட்டி கொடுப்பதை ரசிக்கும் பாக்கியம் இல்லாமல்போகும்!

‘‘தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களால் கொடுக்க முடியாது. ஏனென்றால், எங்களிடம் தண்ணீர் இல்லை. சொல்லப் போனால், அணையே இல்லை. அட! கர்நாடகம்னு ஒரு மாநிலமே இல்லை’’ என்று 2116-ல் கர்நாடக முதல்வர் (யாராக இருந்தாலும்!) பேட்டி தட்டுவதை லைவ் ஸ்க்ரோ-லிங்கில் பார்க்க முடியாது.

‘‘அழகிரி - ஸ்டாலின் இருவருக்கும் ஒற்றுமை வரும் வரை நானே தொடர்ந்து கட்சித் தலைவராக நீடிப்பேன்!’’ என்று 2021-ல் கரகர குரலில் கருணாநிதி சொல்வதை ஸ்டாலின் கவலையோடு கேட்கும் துர்பாக்கிய நிலை நேராது.

யாரிடமும் கேட்காமல், தமிழ் ரசிகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தானாகவே முடிவுசெய்து ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை சிம்பு ‘நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார்’ என்று மாற்றி வம்பு பண்ணுவதை ரசிக்க முடியாதே?

கடைசியாக, ‘உலகம் அழியப்போகிறது!’ என்று இனிமேலும் சும்மா உதார்விட்டுத் திரிய முடியாது.