Published:Updated:

‘‘இது வீடு இல்லை, கோயில்!’’

‘‘இது வீடு இல்லை, கோயில்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இது வீடு இல்லை, கோயில்!’’

‘கஜா’ பேரழிவு... கைகொடுத்த விகடன்... நெகிழும் பயனாளிகள்!

‘‘இது வீடு இல்லை, கோயில்!’’

‘கஜா’ பேரழிவு... கைகொடுத்த விகடன்... நெகிழும் பயனாளிகள்!

Published:Updated:
‘‘இது வீடு இல்லை, கோயில்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இது வீடு இல்லை, கோயில்!’’
கோமதி
கோமதி

இயற்கைச் சீற்றத்தின் கொடுமைகளை கதைகளாகவும் பாடல்களாகவும் கேட்டுப் பழகிய காவிரிப் படுகை விவசாயிகளுக்கு மறக்கவே முடியாத கோர அனுபவத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது, 2018 நவம்பர் 16 அன்று கரையைக் கடந்த `கஜா’ புயல். காவிரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நெல் சாகுபடியை கைவிட்டு தென்னை சாகுபடிக்கு மாறிய விவசாயிகளை தீராத் துயரத்தில் ஆழ்த்தியது அந்தப் புயல்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்கள், கஜா புயலால் சின்னாபின்னமாகின. பிள்ளைகளின் கல்விக்கும் திருமணத்துக்கும் ஆதாரமாக இருந்த லட்சக்கணக்கான தென்னைமரங்கள் கொத்துக் கொத்தாக விழுந்தன. வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என, உடுத்திய உடைகளோடு அருகில் உள்ள முகாம்களில் அகதிகள்போல் தஞ்சம் புகுந்தனர். மின்சாரம், போக்குவரத்து, தகவல்தொடர்பு போன்றவை முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்க்கையை, ஐம்பது ஆண்டுக்காலம் பின்னோக்கித் தள்ளியது கஜா புயல். அந்தத் தாக்கத்திலிருந்து விவசாயிகளை மீட்கும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டார்கள். துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட காத்துக்கொண்டிருக்கும் வாசகர்களை இணைத்துக்கொண்டு, விகடனும் களத்தில் இறங்கியது. இழப்பாலும் அச்சத்தாலும் தவித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கான பயிற்சிகள், மின்சார வசதியில்லாததால் போதிய நீர் கிடைக் காமல் கருகிய பயிர்களை மீட்பதற்கான உதவிகள் என அடுத்தடுத்து களத்தில் சுழன்றது விகடன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்தகட்டமாக, புயலால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம் தொடங்கப்பட்டது. வீடுகள் இடிந்ததால் ஒதுங்க இடம் இல்லாமல் குழந்தைகளோடு பரிதவிப்பவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டனர். முதற்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம், முதலியார் தோப்பு ஆகிய கிராமங்களில் பத்து வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

தயாராகும் வீடு
தயாராகும் வீடு

‘‘புயலில் சிதைந்துபோன வீட்டுக்கு அரசு கொடுத்த 5,000 ரூபா வயிற்றுப்பாட்டுக்கே சரியாப்போச்சு. அதை வெச்சு இடிஞ்ச வீட்டுக்கு கீத்துகூட வாங்க முடியல. இதுல எங்கிருந்து வீடு கட்டுறதைப்பத்தியெல்லாம் நினைச்சுப்பாக்குறது?’’ என்று புயல் பாதித்த தருணத்தில் நம்மிடம் வருந்திய மக்களின் முகத்தில் இன்று மலர்ச்சி.

‘‘முதல்ல எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. அடுத்ததா ஒரே பிரசவத்துல மூணு புள்ளைங்க. மூத்தவ காலேஜ்ல படிக்கிறா. மற்ற மூணு புள்ளைகளும் ஏழாவது படிக்கிறாங்க. கஷ்டப்பட்டு கட்டிய கூரை வீடு, புயல்ல தரைமட்டமாகிடுச்சு. புள்ளைங்க படிக்கிற புத்தகமெல்லாம் மழைத்தண்ணியில அழிஞ்சுபோச்சு. புயல் ஓஞ்சதும் எஞ்சியிருக்கிறதை வெச்சு, சின்னதா குடிசை போட்டோம். அதுல மூணு பேரு படுத்துத் தூங்கினா மத்த மூணு பேரு உட்கார்ந்துதான் தூங்க முடியும். இனி என்ன பண்ணப்போறோம்னு தவிச்ச நேரத்துலதான், தெய்வம் மாதிரி வந்து காலத்துக்கும் கஷ்டமில்லாம வாழ கான்கிரீட் வீடு கட்டித் தர்றீங்க. இப்படியொரு வீட்டை நாங்க கற்பனைகூட செஞ்சுப்பாத்ததில்லை. விகடன் வாசகர்களுக்கு நன்றி’’ என்று கண்கலங்குகிறார் புஷ்பவனத்தைச் சேர்ந்த கோமதி.

‘‘நாலு புள்ளைகள்ல ரெண்டு பேர் நோய்வாய்ப்பட்டு இறந்துட்டாங்க. நானும் என் புருஷனும் மாடா உழைச்சி வீட்டைக் கட்டி கரென்ட் வாங்குற நேரத்துல, புயலடிச்சு அத்தனையும் நொறுங்கிடுச்சு. ஆளாகி நிக்குற பொண்ணை வெச்சுக்கிட்டு, சோறு பொங்கவும் வழியில்லாம... படுக்கவும் வசதியில்லாம நான் பட்டப்பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். இனி எங்களுக்கு கவலையே இல்லை. காத்து, மழைபத்தியெல்லாம் பயப்படத் தேவையில்லை. வீடு கட்டிக் கொடுத்து எங்க வாழ்க்கையில வெளக்கேத்தி வெச்சுட்டீங்க. விகடனையும் விகடன் வாசகர்களையும் எங்க தலைமுறை மறக்கவே மறக்காது’’ என்றார் புஷ்பவனம் சந்திரா.

முதலியார் தோப்பைச் சேர்ந்த சேகர் என்பவரின் வீடும் புயலால் பெரும் பாதிப்புக் குள்ளானது. “நான் சம்பாதிக்கிறது புள்ளைகளை வளர்த்துப் படிக்கவைக்கவே பத்தாத சூழல்ல, குடியிருந்த வீடும் இடிஞ்சுபோச்சுன்னா எப்படியிருக்கும்? மனசு ஒடிஞ்சிபோச்சு. பித்துப்பிடிச்ச மாதிரிதான் இருந்தேன். ஆயிரம் ரூபாய்க்கே அல்லல்படுற எங்களுக்கு, லட்சக்கணக்குல பணம் போட்டு வீடு கட்டித் தர்றது ரொம்ப பெரிய விஷயம். நீங்க கட்டித் தர்றதை வீடா நினைக்கலை... கும்பிடுற கோயிலா நினைக்கிறோம்” என்று நெகிழ்ந்தார் சேகர்.

அடுத்தகட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான கிராமங்களில் வீடு கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன. கஜா பேரிடர் நிவாரணப் பணிகள்குறித்த அறிவிப்பு, விகடனில் வெளியானவுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அள்ளித் தந்த வாசகர்களாலேயே இது சாத்தியமானது.

இந்த வீடுகளின் ஒவ்வொரு செங்கல்லும் விகடன் வாசகர்களின் பெயர்களைச் சொல்லும்!