Published:Updated:

`படிப்புக்கு, வீட்டுக்குனு அத்தனை உதவிகள் கிடைச்சிருக்கு!' - விகடன் வாசகர்களால் நெகிழும் கயல்விழி

Representational Image ( Photo by Luis Alberto on Unsplash )

``தாத்தா, பாட்டிக்கு அப்புறம் நமக்குனு யாருமில்லைன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு விகடன் மூலமா அண்ணன், அக்கா, அம்மா, அப்பான்னு பல புதிய உறவுகள் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.''

`படிப்புக்கு, வீட்டுக்குனு அத்தனை உதவிகள் கிடைச்சிருக்கு!' - விகடன் வாசகர்களால் நெகிழும் கயல்விழி

``தாத்தா, பாட்டிக்கு அப்புறம் நமக்குனு யாருமில்லைன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு விகடன் மூலமா அண்ணன், அக்கா, அம்மா, அப்பான்னு பல புதிய உறவுகள் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.''

Published:Updated:
Representational Image ( Photo by Luis Alberto on Unsplash )

புதுக்கோட்டை மாவட்டம் வலக்கொண்டான் விடுதியைச் சேர்ந்தவர் கயல்விழி. 10-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. இந்தாண்டு ப்ளஸ் டூ படிக்கிறார். கயல்விழிக்கு ஒரே தம்பி கலைவாணன். இவர்களின் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்துபோகவே, தாத்தா, பாட்டியின் ஆதரவில் வளர்கின்றனர். குடும்ப வறுமையைப் போக்க தற்போது கயல்விழி மருத்துவக்கனவை சுமந்துகொண்டு கூலி வேலைக்குப் போகிறார். அக்காவுக்கு ஆதரவாக, கலைவாணனும் பெயின்டர் வேலைக்குச் செல்கிறான்.

 கயல்விழி
கயல்விழி

இப்படி, பள்ளி புத்தகங்களைச் சுமக்கும் வயதில், இந்தப் பிஞ்சுகள் குடும்ப பாரத்தை சுமந்து வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து விகடன் இணையதளத்தில், `நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும்!'' வறுமையில் போராடும் கயல்விழி' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்து நெக்குருகிப்போன விகடன் வாசகர்கள் பலரும் கயல்விழிக்கு உதவ முன்வந்தனர். வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தை கயல்விழிக்கு அனுப்பி வைக்க, வாசகர்கள் மூலம் ரூ.3.96 லட்சம் பண உதவி கிடைத்திருக்கிறது அவருக்கு.

அந்தப் பணத்தைக் கொண்டு கயல்விழியின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் செய்வதற்குத் தேவையான ஆண்ட்ராய்டு போன், அரிசி, மளிகைப் பொருள்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருள்கள் உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கயல்விழியோடு, கலைவாணனுக்குத் தேவையான யூனிபார்ம் முதல் படிப்புக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கயல்விழிக்கு உதவிய வாசகர்கள்
கயல்விழிக்கு உதவிய வாசகர்கள்

அதோடு, கயல்விழி வீடு சீரமைப்பு, கழிப்பறை கட்டிக்கொடுப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, ரூ.3 லட்ச ரூபாய் பணத்தை உயர்கல்விக்குப் பயன்படும் வகையில் கயல்விழியின் வங்கிக் கணக்கில், இப்போதைக்கு எடுக்க முடியாத வகையில் டெபாசிட் பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த உதவிகளால் நெகிழ்ந்து போய் இருக்கிறது கயல்விழியின் குடும்பம்.

கயல்விழியிடம் பேசினோம். ``அப்பா அம்மா ரெண்டு பேரும் அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க. எங்களுக்கு பெருசா சொந்தக்காரங்க சப்போர்ட் எல்லாம் இல்லை. வயசான தாத்தா பாட்டி அரவணைப்பில்தான் இப்போ இருக்கோம். அவங்க ரெண்டு பேருமே முடியாதவங்க. தாத்தா பாட்டிக்கு அப்புறம் எப்படி படிக்கிறது, வாழ்க்கையை எப்படி ஓட்டுறதுன்னு பயம் இருந்துகிட்டே இருந்துச்சு. ஆனா, எங்கேயோ முகம் தெரியாதவங்க பலரும் பணம் அனுப்பி உதவி செஞ்சு எங்களோட கஷ்டத்தைப் போக்கிட்டாங்க. இத்தனை நாளா தாத்தா பாட்டிக்கு அப்புறம் நமக்குன்னு யாருமில்லைன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு விகடன் மூலமா அண்ணன், அக்கா, அம்மா, அப்பான்னு பல புதிய உறவுகள் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.

பலரும் அன்போடு எங்களைத் தொடர்புகொண்டு, `உங்களுக்கு நாங்க இருக்கோம்'னு ஆறுதல் சொல்றாங்க. இப்போ, நமக்கு யாருமில்லைங்கிற பயம் எங்களை விட்டு ஓடிப்போயிருச்சு. படிப்புக்கு, சாப்பாட்டுக்கு, குடும்பத்துக்குன்னு அத்தனை உதவிகளும் கிடைச்சிருச்சு. எங்க காலமுள்ளவரைக்கும் எனக்கு உதவி செஞ்சவங்களை மறக்க மாட்டேன். எனக்கு உதவி பண்ண எல்லாரும் பெருமைப்படுற வகையில, நான் டாக்டராகணும். நல்லா படிச்சி டாக்டராகணும்கிற சிந்தனை மட்டும்தான் இப்போ என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. தம்பியையும் படிக்கவெச்சு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும். நிச்சயம் எல்லாத்தையும் நடத்திக்காட்டுவேன்" என்கிறார் வைராக்கியமாக.

வாழ்த்த காத்திருக்கிறோம் கயல்விழி!