Published:Updated:

புதுக்கோட்டை: ஆட்டோ, மூன்று சக்கர சைக்கிள்... நிறைய உறவுகள்! - உதவிகளால் நெகிழ்ந்த குடும்பம்

 நெகிழவைத்த விகடன் வாசகர்கள்
நெகிழவைத்த விகடன் வாசகர்கள்

என்ன வேணும்னு, அவங்க கேக்கும் போது, கூட பழைய ஆட்டோவை வாங்கித் தந்தால் போதும். அத வச்சு நாங்க உழைச்சு புது ஆட்டோ வாங்கி பொழச்சுக்குவோம்னு சொன்னேன். அதனால, என்னவோ, உடனே ஆட்டோ வாங்கிக்கொடுத்து எங்களை நெகிழ வச்சிட்டாங்க.

புதுக்கோட்டை அருகே குரும்பூர் பட்டறைச்சேரியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளி மெய்யர். ஒரு காலத்தில் லோடு லாரி ஓட்டி தன் பெரிய குடும்பத்தைத் தனி ஆளாகக் காப்பாற்றி வந்த நிலையில், கடந்த 4வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்று எல்லாத்தையும் மாற்றிவிட்டது. கோமா நிலைக்குப் போய் மீண்டு, வந்தாலும் பழையபடி, கையும், காலும் இயங்காமல் போனது. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை தன் தோளில் சுமந்து கொண்ட மெய்யரின் மனைவி ராஜேஸ்வரி கூலி வேலை செய்து, மெய்யர், மெய்யரின் அப்பா, அம்மா, 3 பிள்ளைகள் என 7 பேரையும் காப்பாற்றி வந்தார்.

ஏழைக்குடும்பத்தை நெகிழவைத்த விகடன் வாசகர்கள்
ஏழைக்குடும்பத்தை நெகிழவைத்த விகடன் வாசகர்கள்

இந்த கொரோனா ஊரடங்கால், ராஜேஸ்வரிக்கு வேலையில்லாமல் போக மெய்யரின் குடும்பம் சாப்பிட்டுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. கால், கை பழையபடி இயங்காவிட்டாலும், தன்னம்பிக்கையுடன் அவ்வப்போது ஆட்டோ ஓட்டி மனைவிக்கு ஒத்தாசையாக இருந்துள்ளார். ராஜேஸ்வரிக்கு வேலை இல்லை. மெய்யருக்கும் ஆட்டோ சவாரி கிடைக்கவில்லை. பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு ராஜேஸ்வரி அல்லாடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், `ஒரு விபத்துல எல்லாம் மாறிடிச்சு’ - பெண் பிள்ளைகளுடன் போராடும் ராஜேஸ்வரி என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டுரை எழுதியிருந்தோம்.

கட்டுரையைப் படித்த விகடன் வாசகர்கள் பலரும் உதவியிருக்கின்றனர். கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் நண்பர்கள் சேர்ந்து ஆட்டோ ஒன்றை வாங்கிக்கொடுத்து அவரது வாழ்வாதாரத்திற்கு உதவியிருக்கின்றனர். பலரும் சாப்பாட்டிற்கும் உதவியிருக்கின்றனர். தொடர் உதவிகளால் நெகிழ்ந்து போய் இருக்கிறது மெய்யரின் குடும்பம்.

மெய்யரின் மனைவி ராஜேஸ்வரியிடம் பேசினோம், ``அவர் நல்லா இருக்கும் போது, என்னைய பெருசா எந்த வேலையும் பார்க்க விடமாட்டாரு. அதுக்காகவே எல்லா சுமையையும் தாங்கிக்கிட்டேன். தினம், தினம் வேலைக்கு போனால் தான் சாப்பாடே சாப்பிட முடியும்ங்கிற நிலை தான் எப்போதும். ஒரு நாள் நான் வேலைக்கு போகலைன்னா, அன்னைக்கு திண்டாட்டம் தான். எனக்கு முடியாத நேரத்துல எனக்கு உதவியாக இருக்கணும்னு ஆட்டோ ஓட்டப் போனாரு.

புதுக்கோட்டை: ஆட்டோ, மூன்று சக்கர சைக்கிள்... நிறைய உறவுகள்! - உதவிகளால் நெகிழ்ந்த குடும்பம்

உடம்ப வருத்தி ஆட்டோ ஒட்டுற மாதிரி இருக்கும் அதனால, ஆட்டோவெல்லாம் ஓட்ட வேண்டாம். நானே எல்லாத்தையும் சமாளிச்சிக்கிறேன்னு சொன்னேன். ஆனா, என் புருஷனுக்கு தைரியம், தன்னம்பிக்கை ரொம்பவே அதிகம். ஆட்டோ ஓட்டப்போனதால தான் என்னவோ வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்தவரு, இன்னைக்கு நல்லா எழுந்திருச்சு நடமாடுறாரு. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், எல்லோரைப் போலவும் ரொம்ப நல்லா ஆட்டோ ஓட்டுறாரு. பலரும் அவரைத் தேடி வந்து சவாரி கூப்பிடுவாங்க. கொரோனாவால், சவாரி எல்லாம் கிடைக்கலை. நம்மளால சொந்தமா ஆட்டோ எல்லாம், வாங்க முடியாது.

ஒரு 3 சக்கர ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேறலை. இன்னைக்கு எங்கயோ முகம் தெரியாதவங்க, எங்களுக்கு ஆட்டோ வாங்கிக்கொடுத்து எங்க குடும்பத்தையே வாழ வச்சிருக்காங்க. என்ன வேணும்னு, அவங்க கேக்கும் போது, கூட பழைய ஆட்டோவை வாங்கித் தந்தால் போதும். அத வச்சு நாங்க உழைச்சு புது ஆட்டோ வாங்கி பொழச்சுக்குவோம்னு சொன்னேன். அதனால, என்னவோ, உடனே ஆட்டோ வாங்கிக்கொடுத்து எங்களை நெகிழ வச்சிட்டாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திடுவோம்.

புதுக்கோட்டை: ஆட்டோ, மூன்று சக்கர சைக்கிள்... நிறைய உறவுகள்! - உதவிகளால் நெகிழ்ந்த குடும்பம்

மதுரையைச் சேர்ந்த நாராயணன், அறந்தாங்கியைச் சேர்ந்த ராம சீனிவாசன், மறமடக்கி நண்பர்கள் என பெயர் கூற விரும்பாத பலரும் வீடு தேடி வந்து சாப்பாட்டிற்குத் தேவையான மளிகைப்பொருட்கள் கொடுத்தாங்க. அறந்தாங்கியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருத்தரு 3 சக்கர சைக்கிள் வாங்கிக்கொடுத்துள்ளார். எல்லாரும் எப்பவும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்னு சொன்னாங்க. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் நமக்குன்னு ஆறுதலாக யாருமே இல்லையேன்னு பல முறை நெனச்சிருக்கோம். இன்னைக்கு இத்தனை உறவுகள் கிடைச்சிருக்கு. இத்தனையும் கிடைக்க உதவியாக இருந்த விகடனின் உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். நன்றிக்கடன் பட்டிருப்போம்" என்றனர் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு