Published:Updated:

கஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்!

கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர அரசுத் தரப்பில் அனுமதி பெறவே இரண்டு மாதகாலம் ஆகிவிட்டது.

கஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்!

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர அரசுத் தரப்பில் அனுமதி பெறவே இரண்டு மாதகாலம் ஆகிவிட்டது.

Published:Updated:
கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு விகடன் செய்துவந்த உதவிகள் ஏராளம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது புயலால் வீடுகளை இழந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம். இதன்மூலம் முதல்கட்டமாக பத்து குடும்பத்தினருக்கு, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன.

கஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்!

இயற்கை இடர்பாடுகளால் மக்கள் துயருற்றபோதெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, உதவிகள் செய்வதில் முன்நிற்பவர்கள் விகடன் வாசகர்கள். கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் சீற்றத்தின் கொடுமைகளை மறந்திருக்க முடியாது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருக்குலைந்துபோயின. அங்கு தவிக்கும் மக்களுக்கு உதவிகள் தேவை என விகடன் வேண்டுகோள் விடுத்ததுமே, வாசகர்கள் வாரி வழங்கினர். விகடன் குழும ஊழியர்கள் மற்றும் விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை சார்பிலும் நிதி வழங்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்ற விகடன் குழுவினர், நிவாரணப் பொருள்களை வழங்கியதுடன் அங்கு வீழ்ந்து கிடந்த தென்னைமரங்களை மீட்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சிகள், நீர்ப்பாய்ச்சி பயிர்களைக் காக்க ஜெனரேட்டர் உதவிகள், வீழ்ந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த இயந்திர வசதிகள், அறந்தாங்கி இலங்கை அகதிகள் முகாமை மேம்படுத்தும் செயல்கள் என, பல பணிகளைச் செய்து முடித்தோம்.

கஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்!

புயலால் வீடுகளை இழந்த ஏழைக் கூலித்தொழிலாளர்களின் குடும்பத் தினருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம் அப்போதே தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம், முதலியார் தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளில் பத்து குடும்பத்தினர் தேர்வுசெய்யப்பட்டனர். ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர அரசுத் தரப்பில் அனுமதி பெறவே இரண்டு மாதகாலம் ஆகிவிட்டது. வீடுகள் கட்டும் பணிகளின்போது மழையின் குறுக்கீடும் பணிகளைத் தாமதப்படுத்தியது.

இவற்றையெல்லாம் கடந்து கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, 2019, டிசம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வீடுகளை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா புஷ்பவனத்தில் நடைபெற்றது. புஷ்பவனம் நண்பர்கள் மன்றம் மற்றும் கிராம வளர்ச்சிக் குழு அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவில் புஷ்பவனம், முதலியார் தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்
கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்

மஞ்சள், குங்குமம், காமாட்சி விளக்கு, தாம்பூலம், தேங்காய், பழம், பூவுடன் வீட்டுச் சாவியையும் ஜூனியர் விகடன் இதழ் வெளியீட்டாளரும் ஆசிரியருமான ச.அறிவழகன் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். பத்து குடும்பத்தினரும் குழந்தைகள் சகிதமாக நெகிழ்ச்சியுடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் சாவிகளைப் பெற்றுக்கொண்டனர். விகடன் குழும முதன்மைப் பொறுப்பாசிரியர்கள் கா.பாலமுருகன், வெ.நீலகண்டன், விகடன் குழும தலைமை நிருபர் மு.இராகவன் மற்றும் வாசன் அறக்கட்டளையின் திட்ட அலுவலர் ச.மணிகண்டன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சரியான நபர்களைத் தேர்வுசெய்து விகடன் வாசகர்கள் மற்றும் வாசன் அறக்கட்டளை சார்பில் வீடுகள் கட்டி வழங்கியதற்காக கிராமப் பெரியோர்கள் விகடன் குழுவினருக்கு சால்வை அணிவித்தனர்.

விழாவில் பேசிய புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர் (ஓய்வு) பசுபதி, ``வாழ்வாதாரம் இழந்து நின்ற குடும்பங்களுக்கு, காலத்தால் மறக்க முடியாத உதவியை விகடனும் அதன் வாசகர்களும் செய்துள்ளார்கள். இதனால் பயனடைந்த குடும்பத்தின் தலைமுறைகள் விகடனை வாழ்த்தும்” என்றார்.

முதலியார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள், ``புயல், மழை, வெயில் என எல்லாவற்றையும் தாங்கக்கூடிய கான்கிரீட் வீடுகளை, அமைத்துத் தந்த விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி” என்றார்.

வீடு பெற்றவர்களில் ஒருவரான விஜயா, “புயல்ல சிக்கி, வீடு வாசலை இழந்து இனி எப்படி வாழப்போறோம்னு கோயில்ல தஞ்சமடைஞ்சோம். இனி வீடு இல்லாம இப்படியேதான் வாழப் போறோமானு கண்ணீர் வடிச்ச நேரத்துலதான் விகடன் வாசகர்கள் இப்படியொரு வீட்டை கட்டிக் கொடுத்திருக்காங்க. இனி புயல் வந்தால் இந்த வீட்டுல நாலு பேருக்கு அடைக்கலம் கொடுப்போம்” என்று நெகிழ்ந்தார்.

``புயலால வீடு தரைமட்டமாகிப்போச்சு. நம்ம வருமானத்தை வைச்சு இனி ஒரு வீட்டைக் கட்டி வாழ முடியாதுன்னு தோணுச்சு. ஒவ்வொரு நாளும் மகமாயிக்கு விளக்குப் போட்டு வேண்டிப்பேன். அந்தத் தெய்வமே விகடன் வாசகர்கள் மூலமா இப்படி நல்ல வழியைக் காட்டியிருக்கிறதா நினைக்கிறேன்” என்றார் வீடு பெற்றவரான சுதா.

அடுத்தகட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்காக கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கவிருக்கிறது. நாம் துடைக்க வேண்டிய கண்ணீர் நிறையவே இருக்கிறது. அதே அளவு வாசகர்களின் பலமும் இருக்கிறது!

கஜா நிவாரணப் பணிகளுக்காக வாசகர்கள் வழங்கிய நன்கொடை விவரங்களைக் காண... http://bit.ly/2qBqLCn என்ற லிங்கில் செல்லவும்.