Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - 2 - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத்திரை காஷ்மீர்

மினி தொடர்

நாள்: அக்டோபர் 17

நேரம்: நண்பகல் 12 மணி.

காஷ்மீரில் இப்போது குளிர்காலம். அங்கே கோடைக்காலம் என்பதே மிதமான குளிர்காலம்தான். குளிர்காலம் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். காற்றே உறைந்துவிடும் அளவுக்கு குளிர் புரட்டியெடுக்கும். நல்லவேளையாக, நாங்கள் போனது குளிர்காலத்தின் ஆரம்பகட்டம்தான். வெயிலும் 20 டிகிரி செல்சியஸ் வரை அடித்துக் கொண்டிருந்தது. காஷ்மீர் மாநில அரசு நிர்வாகத்துக்கு, இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. கோடையில் தலைநகர் ஸ்ரீநகர். குளிர்காலத்தில் ஜம்மு. இப்போது தலைநகர் ஸ்ரீநகரில் இருக்கிறது. அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு, அது ஜம்முவுக்கு மாற்றப்பட்டுவிடும்.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

ஸ்ரீநகர் விமானநிலையத்தின் முகப்புப் பகுதி தெரிந்தது. அதைத் தாண்டி கால் வைத்தால் காஷ்மீர்! கண்களை ஒரு நொடி மூடித் திறந்தேன். காஷ்மீர் மண்ணில் கால் வைக்கப்போகிறோம் என்ற எண்ணமே மகிழ்ச்சி, பரவசம், பயம், திகில் என கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே அந்த ராணுவ வீரர் ‘உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புகள்’ எனச் சொல்லியிருந்தாலும், ‘இனி என்ன நடந்தாலும் சரி, வந்த வேலையை முடிக்காமல் கிளம்பக் கூடாது’ என்று முடிவு எடுத்துக் கொண்டோம்.

நானும் கார்த்தியும் விமானநிலையத்தின் பயணிகள் காத்திருப்பு வளாகத்தைக் கடந்தோம். அதுவும் வெறிச்சோடிதான் இருந்தது. விமானநிலையத்துக்குள் இருக்கும் விருந்தினர் வளாகம் கண்ணில்பட்டது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களுக்கான ஏரியா அது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த விருந்தினர் மாளிகைக்கு வந்து போயிருந்தார். அவருடன் தமிழகத்தின் தி.மு.க எம்.பி-யான திருச்சி சிவாவும் வந்திருந்தார். இந்த விருந்தினர் வளாகத் திலிருந்துதான் அவர்கள் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதோ நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இதே இடத்திலிருந்துதான், `என் நாட்டின் ஒரு பகுதிக்குள் செல்வதற்குக்கூட எனக்கு அனுமதியில்லையா?’ என்று ராகுல் கொதித்தார். அரசின் இரும்புக்கரங்களை, அவராலும் எவராலும் கடக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் டெல்லிக்கு விமானம் பிடித்தார்கள். அப்போது விமானத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ராகுல் காந்தியிடம் ஒரு காஷ்மீரிப் பெண் கதறியழுத காட்சிகள் அவை.

ஆகஸ்ட் 5-க்குப் பிறகு காஷ்மீர் மக்களைப் பற்றி நமக்குக் கிடைத்த முதல் தகவலும் அந்தப் பெண்ணின் அழுகுரல்தான். பின்னர் ஒருமுறை அதுபற்றி, திருச்சி சிவாவிடம் பேசினேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரும்புத்திரை காஷ்மீர்! - 2 - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”

“அந்தப் பெண் மிகவும் பயந்துபோய் இருந்தார். அவரின் உறவினருக்கு மருந்துகள்கூட வாங்க இயலாத சூழ்நிலை. அவரின் தலையில் யாரோ துப்பாக்கி வைத்து மிரட்டுவதைப்போல் செய்கை காட்டி, ‘நான் உங்களிடம் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தால்கூட, அவர்கள் எங்களை சும்மா விட மாட்டார்கள்’ என்று அவர் சொன்னபோது, விமானத்தில் இருந்த அத்தனை பேருமே கலங்கிவிட்டோம். ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். அந்தப் பெண் பேசி முடித்ததும் விமானத்தில் இருந்த அனைவரும் கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்’’ என்றார் சிவா.

அந்தப் பெண் இப்போது எங்கு இருக்கிறாரோ... என்ன செய்துகொண்டிருக்கிறாரோ... அவர் நலமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே விமானநிலையத்துக்கு வெளியே கால் வைத்தோம்.

இரும்புத்திரை காஷ்மீர்! - 2 - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”

வெளியே, அவ்வளாக மக்கள் நடமாட்டம் இல்லை. சுருள்சுருளாக முள்கம்பிகள் பயமுறுத்தின. அதைத் தொட்டுப்பார்த்தேன். பயங்கர கூர்மை. லேசாக அழுத்தித் தேய்த்தால் விரலே அறுந்துவிடும். அதன் பெயர் `கான்செர்டினா காயில்’ (Concertina Coil). பிரத்யேகமான உலோகத்தில் செய்கிறார்கள். நவீன கருவிகளைப் பயன்படுத்தினாலும் அவ்வளவு எளிதில் அதை கட் செய்ய முடியாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெயில் கொஞ்சம் தணிந்திருந்தது. எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரிக்கு போன் செய்தேன். `‘வெல்கம் வெல்கம் வெல்கம்... நம் தேசத்தின் புத்தம்புதிய காஷ்மீருக்கு உங்களை வரவேற்கிறேன்’’ என்றவர், மிகவும் பலமாக `‘ஹாஹாஹா...’’ என்று சிரித்தார். அவரின் சிரிப்புக்குப் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். பிறகு, `‘என் காரை அனுப்பி வைக்கவா?’’ என்று கேட்டவர், அவராகவே மறுத்து, “வேண்டாம். அதில் அரசாங்க முத்திரை இருக்கிறது. பாதுகாப்பு இல்லை. பயங்கரவாதிகள் தாக்கக்கூடும். ஏன்... மக்களில் சிலரே கல் எறியலாம். பிரைவேட் டாக்ஸியைப் பிடித்து வந்துவிடுங்கள். டாக்ஸி கிடைக்க லேட் ஆகலாம். வேறு வழியே இல்லை என்றால் சொல்லுங்கள்... சமாளித்து நானே வந்துவிடுகிறேன்” என்றார். அவர் வருவது, நம்முடன் ஒன்றாகப் பயணிப்பது நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், அவருக்குத்தான் அது பிரச்னை. டாக்ஸியைத் தேடத் தொடங்கினோம்.

காஷ்மீர் பயணித்த ராகுல் குழுவினர்
காஷ்மீர் பயணித்த ராகுல் குழுவினர்

அது அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. ஆள் இல்லாத டீக்கடையில் டீ ஆற்ற யார்தான் முன்வருவார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் தெருத்தெருவாகச் சுற்றியதில் ஒரு டாக்ஸி கிடைத்தது. கை காட்டி நிறுத்தினோம். டிரைவரும் மிரண்டுபோய்தான் பார்த்தார். தலையில் பச்சை நிறத் தொப்பி அணிந்திருந்தார். அவர் ஓர் இஸ்லாமியர். முகத்தில் களை இல்லை. கலைந்த தலைமுடி... கறுப்பும் வெளுப்புமாக ஒரு மாத தாடி அப்பியிருந்தது.

‘காஷ்மீர், கடும் பொருளாதாரச் சுழலில் சிக்கித் தவிக்கிறது. மொத்த சந்தைகளும் வெறிச்சோடிக் கிடக்கும்போது வருமானத்துக்கு ஏது வழி? உண்மையைச் சொல்லப்போனால், அன்றாட உணவுக்கே அங்கு மக்கள் தவிக்கிறார்கள்’ என்று கிளம்பும் முன்பே என்னுடைய சோர்ஸ்கள் சொல்லியிருந்தார்கள். டிரைவரிடம் பேசியபோது அவர் தயங்கித் தயங்கிச் சொன்ன வார்த்தைகள் அதை முகத்தில் அறைந்து உணரவைத்தன.

“சாப், காசுகூட குறைச்சுக் கொடுங்க. இல்லை, காசே கொடுக்க வேண்டாம். பிஸ்கட், பிரட் பாக்கெட், சப்பாத்தி ஏதாச்சும் இருந்தா கொடுங்க. என் மூணு குழந்தைகளும் சரியா சாப்பிட்டு, ரெண்டு நாளாச்சு. காலையிலிருந்து ஒரு சாயா குடிக்கலை” என்றார்.

“அவ்வளவு மோசமாகவா இருக்கிறது நிலைமை?” என்று கேட்டோம்.

“உங்களுக்கு என்ன சாப் தெரியும்..? இன்னும் நீங்களே எவ்வளவு நாள் இங்க தாக்குப்பிடிப்பீங் கன்னு தெரியாது. எங்களை வந்து பார்க்கவோ... எங்களுக்கு என்னன்னு கேட்கவோ... நல்லா இருக்கீங்களா, சாப்பிட்டீங்களா, சாப்பாடு கிடைக்குதான்னு கேட்கக்கூட நாதி இல்லாம கிடக்குறோம்” என்றவர், தாங்கமாட்டாமல் பொலபொலவென அழுதுவிட்டார்.

ஒருகட்டத்தில் குலுங்கிக் குலுங்கி அவர் அழத் தொடங்க, “வண்டியை ஓரமாக நிறுத்துங்கள், எங்கேயாவது இடித்துவிடப்போகிறீர்கள்” என்று பதறினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அய்யய்யோ... வேண்டாம் சாப். அப்படிச் செய்தால் உள்ளே அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்னவோ ஏதோ என ராணுவ வீரர்கள் விசாரிப்பார்கள்” என்றவர், ஒருவழியாக கண்களைத் துடைத்துக்கொண்டு இயல்பு நிலைக்கு வந்தார்.

ஸ்ரீநகர் தலைமைச் செயலக நுழைவுவாயில்
ஸ்ரீநகர் தலைமைச் செயலக நுழைவுவாயில்

“சாப், காஷ்மீருக்கு முக்கிய வருமானம், டூரிஸ்ட்தான். என்னைப்போல டிரைவர்களுக்கு கஸ்டமர் வந்தால்தான் அன்னைக்குச் சாப்பாடு. இதோ இந்த ரோட்டைப் பாருங்க சாப்... கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் யாராச்சும் தென்படுறாங் களா? ராணுவ வீரர்கள் மட்டும் தானே இருக்காங்க. மயானம்போல மாறிப்போச்சு சாப் எங்க மண்ணு. நான் பொறந்து, வளர்ந்தது இந்த மண்ணுலதான். இந்த 42 வருஷத்துல எத்தனையோ கலவரங்களைப் பார்த்திருக்கேன். போர்ச்சூழல் களை சந்திச்சிருக்கேன். கல்வீச்சுல மண்டை உடைஞ்சிருக்கு. பல வாரங்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கு. ஆனா, ஒரு நாள்கூட சாப்பாட்டுக்கு இல்லாம பட்டினி கிடந்ததில்லை சாப். இப்ப எங்களை அல்லாடவெச்சுட்டாங்க. எங்களுக்கு மோடி மேலேயோ பி.ஜே.பி மேலயோ எந்த வருத்தமோ கோபமோ இல்லை. நாங்க அவங்களை வெறுக்கவும் இல்லை. சொல்லப் போன, இந்தத் தேசம் என் தாய் தேசம். இந்துஸ்தான், என் தாய் மடி. பிறகு ஏன் அவசர அவசரமா இப்படிப் பண்ணாங்கன்னு தெரியலை” என்றவரிடம், “ஏதேனும் கடை இருந்தால் நிறுத்துங்கள், உணவுப்பொருள்களை வாங்கித் தருகிறோம்” என்றோம்.

விரக்தியாகச் சிரித்தவர், “சாப்... இங்கே அறிவிக்கப்படாத பந்த் நடக்குது. சமீபத்தில் கடையைத் திறந்துவெச்ச ஒருத்தர் வீட்டுக்கு மர்ம நபர்கள் போயிருக்காங்க. அவரிடம், ‘கடையை ஏன் திறந்த... நாங்கதான் திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தோமே?’னு கேட்டு அவரை சுட்டுக் கொன்னுட்டாங்க. காலையில மூணு மணி நேரம், சாயங்காலம் மூணு மணி நேரம் கடைங்களை அரைக் கதவு திறப்பாங்க. மக்கள் அவசர அவசரமா கடைங்க முன்னாடி குவிவாங்க. சத்தமா பேசக்கூட முடியாது. ஏதோ அடிதடின்னு ராணுவ வீரர்கள் லத்தியை ஓங்குவாங்க. சத்தம் இல்லாம சாமான்களை வாங்கிட்டு மொத்த ஜனமும் வீடுகள்ல முடங்கிடும். இருக்கிறதை வெச்சி ஓட்டிக்கிட்டிருக்காங்க. கையிருப்பு சாமான்கள் தீர்ந்துகிட்டிருக்கு” என்றார்!

அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. உணவுப்பொருள் வாங்கித் தர இயலாமலும்... ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமலும் கையறுநிலையில் இருந்தோம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அமைதியாக டாக்ஸியை ஓட்டத் தொடங்கி விட்டார். எதுவும் பேசவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் அவர் சொன்ன வார்த்தைகள், என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விகள் அனைத்தும் என் மனதை அறுத்துக்கொண்டே இருந்தன. உண்மையில் அவர் என்னைப் பார்த்துக் கேட்கவில்லை. இந்தத் தேசத்தைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்; இந்தத் தேசத்தின் ஆன்மாவிடம் கேட்டிருக்கிறார்.

டாக்ஸி ஜன்னலைத் திறந்தேன். ஜன்னல் இருக்கையில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டே வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ரயில், பேருந்து, டாக்ஸி என சிறு வயதிலிருந்தே ஜன்னல் சீட் என்றாலே எனக்குப் பித்து. டாக்ஸி, தலைமைச் செயலகத்தை நெருங்கிவிட்டிருந்தது. முகுந்த் நாகராஜனின் கவிதைதான் நினைவுக்கு வந்தது...

`இப்போதுதான் கிடைத்தது

ஜன்னலோர இருக்கை

அதற்குள் வீடு வந்துவிட்டது

என்கிறாள் அம்மா...

இதெல்லாம் ஒரு காரணமா?’

ஏனோ தெரியவில்லை... இந்த ஜன்னலோர இருக்கையும் எனக்கு மிகவும் பிடித்தமான முகத்தில் அறையும் காற்றும் முதல்முறையாகப் பிடிக்கவில்லை!

(திரை விலகும்)

பாலகிஷன்