உலகம் முழுவதையும் கொரோனா முடக்கிப் போட்டிருக்கிறது. 188 நாடுகள் வரை பரவியிருக்கும் கொரோனா பொருளாதார அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை பட்டியலுக்குள் அடக்கி விடமுடியாது. பங்குசந்தைகளைத் தலைகீழாக புரட்டிப்போட்டு பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை ஆட்டம் காண வைத்த கொரோனா, மற்றொரு புறம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, பசி பட்டினியில் தள்ளியிருக்கிறது.
கொரோனாவிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசு தரப்பில் தினம் ஒரு அறிவிப்புகள் வந்தாலும், எல்லோருக்கும் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. தன்னார்வலர்கள் பலரும், ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து களத்துக்கே சென்று, தங்களால் இயன்ற உதவிகளை செய்து மனிதத்தை மீட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இருந்தே வாசகர்களின் பங்களிப்போடு விகடனும் களத்தில் இறங்கி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
மார்ச் மாதம் முதல், பசியால் தவிக்கும் குடும்பங்களைக் கண்டடைந்து, உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், மருத்துவ உதவிகள் வழங்கும் பணிகளை விகடன் முன்னெடுத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்காக, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் சார்பில் 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரும்பணியில் எங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்திலிருக்கும் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களையும் மனதில்கொண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் விகடன் குழுமத்துக்காக அவர்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 10 சதவிகிதத் தொகையையும் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாசகர்களும் தொடர்ந்து நிதியுதவிகளை வழங்கி விகடனின் பணியை விரிவடையச் செய்து வருகின்றனர்.
"விகடனை நம்பி நிதியுதவி செஞ்சா, உதவி தேவைப்படுபவருக்கு சரியா போய்ச் சேரும். இதை இதற்கு முந்தைய நிவாரண பணிகளிலும் விகடன் நிரூபிச்சு இருக்கு. அதனால் இதை என்னுடைய பங்காக வெச்சுக்கோங்க" என்று 50,000 ரூபாய்க்கான காசோலையை அலுவலகத்துக்கே நேரில் வந்து அளித்து ஆச்சர்யப்படுத்தினார் வாசகர் எட்வின்.
ஏப்ரல் மாதம் முதல் தவறாமல் இப்போதுவரை தனக்கு கிடைக்கும் சம்பளத்திலிருந்து 1,000 ரூபாய் அனுப்பி வைக்கும் வாசகர் பரணீதரன், "இந்தத் தொகையை இந்த மாசத்துக்கான நிதியுதவிக்கு வெச்சுக்கோங்க. அடுத்த மாசமும் என்னால முடிஞ்ச தொகையை அனுப்புறேன்" என மின்னஞ்சல் அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார்.
விகடன் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் திருமுல்லைவாயலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த 65 நாடோடிக் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருள்கள், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள், மீனவர்கள், பழங்குடிகள், நலிவடைந்த மக்கள், கூலி தொழிலாளர்கள் எனத் தேவை கண்டறிந்து உதவிகளைச் சேர்ப்பித்து வருகிறோம்.
ரயிலில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே நம்பியே 4 லட்சம் கூலித் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கடந்த மார்ச் மாத இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், ரயிலை நம்பி சிறுதொழில்கள் செய்து வந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ரயிலில் சிறுதொழில் செய்து வந்த பார்வையற்றவர்கள் பலரும், கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள மறைமலைநகரில் வசிக்கின்றனர் என்ற தகவல் அறிந்ததும், அவர்களுக்கு உதவுவதற்காகப் புறப்பட்டோம்.
``காலையில 6 மணிக்கு வியாபாரத்துக்காகக் கிளம்புவோம். சென்னை பாரிஸ்ல மொத்த விலைக்கு கீ செயின், கர்சீப்னு சீஸனுக்கு தகுந்த மாதிரி பொருள்கள் வாங்கிட்டு ரயில் ஏறுவோம். 10 மணி நேர வியாபரத்துக்குப் பிறகு, கையில 300 ரூபாய் நிக்கும். அதுலதான் வீட்டு வாடகை, சாப்பாடு, செலவு, புள்ளைங்க படிப்புனு எல்லாத்தையும் பார்த்துப்போம். ஆனா, அதுக்கும் இப்போ வழியில்லாமப் போச்சு. மூணு வேளை சாப்பாட்டுகே வழியில்லாம இருக்கோம்" எனக் கலங்கும் பார்வைத்திறன் அற்ற லட்சுமணன் தம்பதியில் தொடங்கி, தாம்பரம் ரயில் பாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் குடும்பம், உணவுக்கு வழியில்லாமல் இருந்த ஆதரவற்றவர்கள் என மொத்தம் 59 குடும்பங்களுக்கு 79,150 ரூபாய் மதிப்புக்கு மளிகைப் பொருள்களை நேரில் சென்று கொடுத்தோம்.
சேலம் மாவட்டத்தில் ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என 10 குடும்பங்களுக்கு 15,320 ரூபாய் செலவில் மளிகைப் பொருள்களை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கினோம்.
மார்ச் மாதம் விகடனின் நிதியுடன் தொடங்கப்பட்ட இந்த அறப்பணி, தற்போது ஆறாம் கட்ட பணியாக வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்கிறது. உதவி பெறும் மக்களின் பட்டியல் நீண்டபடியே இருக்கிறது.
இந்த அரும்பணிக்கு நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மைச் செய்திகளை மட்டுமல்ல, வாசகர்களின் உணர்வுகளையும் உதவிகளையும் தாங்கி, மக்கள் நலன் காக்க எப்போதும் மக்களுடன் மக்களாக வலம் வருவான் விகடன். விகடனின் ஒவ்வொரு முயற்சியிலும் கைகோக்கும் வாசகர்களுக்கு விகடனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கரம் கோப்போம்... மனிதம் காப்போம்.