Published:Updated:

“அடுத்த முறை ராகுலுக்கு ஈசல் டிஷ்!”

வில்லேஜ் குக்கிங் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
வில்லேஜ் குக்கிங் டீம்

எங்க டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பேர். எங்க குக்கிங் குருநாதர், பெரிய தம்பி தாத்தா. ஒரு சமையல் கலைஞர். வீட்டு விசேஷங்களுக்கு சமைக்கிறவர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியிலிருக்கும் கிராமம், சின்ன வீரமங்கலம். கிராமத்தில் குறுக்கும் நெடுக்குமாக மொத்தமே 50 வீடுகள்தான். இணையதள வசதியே இல்லாத இந்தக் கிராமத்தில் ஐந்து இளைஞர்கள், ஒரு பெரியவருடன் இணைந்து ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கினார்கள். இவர்களின் வீடியோக்கள் அனைத்தும் ஹிட் அடிக்க... வில்லேஜ் குக்கிங் சேனல் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்த முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இதற்காக, யூடியூப் நிறுவனம் டைமண்ட் பட்டன் அங்கீகாரம் கொடுத்து கௌரவித்துள்ளது.

‘`அப்பா, அம்மா எல்லாம் காலையில நேரமே வயக்காட்டு வேலைக்குப் போயிடுவாங்க. அப்ப நாமதான் வீட்டுல சமைக்கணும். சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு சமையல் வேலை அத்துப்படி. அந்தச் சமையல்தான் இப்போ எங்களுக்குக் கைகொடுக்குது. அதுதான் இன்னைக்கு எங்களை உலகத்தைத் திரும்பிப் பார்க்க வெச்சிருக்கு’’ என்று பெருமிதமாகப் பேசுகிறார் யூடியூப் சேனலை உருவாக்கிய, எம்.காம், எம்.ஃபில் பட்டதாரியான சுப்பிரமணியன்.

“அடுத்த முறை ராகுலுக்கு ஈசல் டிஷ்!”

‘`எங்க டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பேர். எங்க குக்கிங் குருநாதர், பெரிய தம்பி தாத்தா. ஒரு சமையல் கலைஞர். வீட்டு விசேஷங்களுக்கு சமைக்கிறவர். எங்க டீம்ல ஐயனார், முருகேசன் ரெண்டு பேரும் என்கூடப் பொறந்தவங்க. முத்து மாணிக்கம், சித்தப்பா பையன். தமிழ்ச் செல்வன், மாமா பையன். எல்லாருமே ரத்த சொந்தங்கள்தான். மஞ்சள், மல்லி, மிளகாய், சோம்பு, சீரகம் எல்லாத்தையும் சந்தனமா அரைச்சிக் கொடுத்திடுவான் ஐயனார். முருகேசனுக்குக் காய்கறி வெட்டுற வேலை. முத்துமாணிக்கம் சமையல் கலையில் பட்டப்படிப்பு முடிச்சவன். தாத்தாவுக்கு ஒத்தாசையா இருப்பான். தமிழ்ச்செல்வன், நானோ டெக்னாலஜியில் எம்.ஃபில் முடிச்சிருக்காரு. கோல்டு மெடலிஸ்ட். நம்ம சமையலில் கறி வெட்டுறதில் ஸ்பெஷலிஸ்ட்.

2018 ஏப்ரல் மாசம்தான் யூடியூப் சேனலை ஆரம்பிச்சோம். அடுத்தடுத்து சமையல் வீடியோக்களைப் பதிவு செஞ்சோம். ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகிருச்சு. இருபதுக்கும் மேல வீடியோக்களை சேனல்ல பதிவு செஞ்சிருந்தோம். ஆனாலும் ரொம்பக் குறைவான பார்வையாளர்கள்தான் பார்த்தாங்க; சப்ஸ்க்ரைபர்களும் ரொம்பக் குறைவாகத்தான் இருந்தாங்க; அடுத்த வீடியோவுக்கு சமையல் பொருள்கள் வாங்கக்கூட கையில் பணம் இல்லை. என்ன செய்யுறதுன்னு தெரியாம இருந்த நேரத்துலதான், பெருசா செலவு செய்ய வேண்டாம்; வயல் நண்டு பிடிச்சிக் குழம்பு வெச்சிடலாம்னு தாத்தா ஐடியா கொடுத்தார். உடனே அது மாதிரியே செஞ்சோம். வீடியோ அப்லோடு ஆன கொஞ்ச நேரத்துக்குள்ளேயே லட்சக்கணக்குல வியூஸ் போயிருச்சு. அந்த வீடியோவுக்கு அப்புறம்தான், அதுவரைக்கும் சமையல் கட்டுக்குள்ள நாங்க முடங்கிக் கிடந்தது தெரிஞ்சது. இயற்கையைத் தேடிப் பயணத்தை ஆரம்பிச்சோம். மக்களோட ரசனையைப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அறந்தாங்கியைச் சுற்றியுள்ள அழகிய கிராமங்களைத் தேடிப் போய் ஆர்ப்பரிக்கும் பம்பு செட் தண்ணீர் சத்தம், பறவைகளின் ரீங்காரத்திற்கிடையே சமையல் செய்ய ஆரம்பிச்சோம். அதையெல்லாம் அப்படியே படமாக்கினோம். பத்தக்கடை மீன் குழம்பு, ஈசல் வறுவல் என அடுத்தடுத்த வீடியோக்களும் செம்ம ஹிட். அதே நேரத்துல அம்மியில் அரைத்த மசாலா, காய்கறி தொடங்கி கறி வரையிலும் அனைத்தும் பிரெஷ்ஷாகவே இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அடுத்த முறை ராகுலுக்கு ஈசல் டிஷ்!”

பார்வையாளர்கள் அதிகமாக அதிகமாக, வருமானமும் வர ஆரம்பிச்சது. ஆரம்பத்தில் உழைப்புக்கு மீறிய வருமானமாகத்தான் அதைப் பார்த்தோம். அந்த வருமானத்துல ஒரு பகுதியை ஏதாவது நல்ல காரியத்துக்குச் செலவிடணும்னு நெனச்சோம். அதுவரையிலும் குறைவா சமைச்சு நாங்க மட்டும் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். அதன்பிறகு, நிறைய சமைச்சு அந்தச் சாப்பாட்டை முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொடுக்க ஆரம்பிச்சோம். வருமானத்துக்காக செயற்கையாக இதுவரை எதையும் செய்யலை. இனியும் செய்யப் போறதில்லை” என்றார்.

‘`உலகம் முழுவதுமே நாங்க பிரபலமாக இருந்தாலும், ராகுல் காந்தி வந்து எங்களோடு சாப்பிட்டுப் போனதுக்கு அப்புறம்தான், நாங்க என்ன செய்யுறோம்னே எங்க ஊர்க்காரங்களுக்குத் தெரியும்’’ என்று ராகுல் காந்தி விசிட் குறித்துப் பெருமை பொங்கப் பேசுகிறார் தமிழ்ச்செல்வன்.

“அடுத்த முறை ராகுலுக்கு ஈசல் டிஷ்!”
DIXITH

“சமையல் செய்யுங்க. தேர்தல் பிரசாரம் முடிஞ்சு ராகுல் காந்தி வந்தாலும் வரலாம்னுதான் சொன்னாங்க. அவர் வருவார்னு எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்க சமைச்சுக்கிட்டிருந்தோம். திடீர்னு பார்த்தா பாதுகாப்புக்கெல்லாம் யாரும் இல்லாம அவர் மட்டும் தனியா வந்து நின்னாரு. காங்கிரஸ் கட்சியோட தலைவர், எப்படிப் பேசுறதுன்னே தெரியலை. கொஞ்சம் பயம் இருந்துச்சு. ஆனா, அவர் ரொம்ப எதார்த்தமா எங்களோடு பழகுனாரு. அதற்கப்புறம் பயமெல்லாம் போய், நாங்களும் நல்லா பேச ஆரம்பிச்சோம். எங்களோடு சேர்ந்து எல்லா வேலையையும் செய்ய ஆர்வமா இருந்தாரு. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. அவருக்கும் எங்களை விட்டுப் பிரிய மனசு இல்லை. எங்களுக்கும் அதே நிலைதான். ஈசல் டிஷ் கேட்டாரு. அடுத்த முறை வரும்போது அவருக்குச் செஞ்சு கொடுக்கணும். வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த எம்.பி ஜோதிமணி அக்காவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். இன்னைக்கு ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்த தென்னிந்தியாவின் முதல் தமிழ் யூடியூப் சேனல்னு எல்லாம் எங்க சேனலைச் சொல்றாங்க. அந்தப் பெருமைக்கு எங்களோட பார்வையாளர்கள்தான் காரணம். என்னைக்கும் பார்வையாளர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்” என்கிறார்.