Published:Updated:

`வில்லங்க’ வில்லிவாக்கம் கர்ணன்!

முத்துவேல்
பிரீமியம் ஸ்டோரி
முத்துவேல்

நடமாடும் நகைக்கடை சிக்கிய பின்னணி

`வில்லங்க’ வில்லிவாக்கம் கர்ணன்!

நடமாடும் நகைக்கடை சிக்கிய பின்னணி

Published:Updated:
முத்துவேல்
பிரீமியம் ஸ்டோரி
முத்துவேல்

ழுத்து நிறைய தங்கச்சங்கலி, பத்து விரல்களிலும் பளபளக்கும் மோதிரங்கள். இவைதான் தி.மு.க பிரமுகர் முத்துவேலின் ‘தகதகக்கும்’ அடையாளங்கள். கட்சியினருக்கும், ஏரியா மக்களுக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் `முத்துவேல்’ வாரி வழங்கும் `வில்லிவாக்கம் கர்ணன்’. வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை தொடங்கி அவரது வீடு அமைந்திருக்கும் ராஜமங்கலம் இந்திரா நகர் வரை முத்துவேலின் பிரமாண்ட போஸ்டர்களும் பேனர்களும் அந்த ஏரியாவின் நிரந்தர அடையாளங்கள். ராஜமங்கலம், வில்லிவாக்கம், கொளத்தூர் காவல் நிலையங்கள் மட்டுமல்லாமல், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க- வினரிடமும் முத்துவேலின் பெயர் பிரபலம்!

என்ன... அறிமுகமே அதிரிபுதிரி யாக இருக்கிறதா! இப்படி பலே பராக்கிரமசாலியாகத் திகழ்ந்த முத்துவேலை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்தது தான் அவருக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை. போலீஸ் கைதுசெய்யும் அளவுக்கு அப்படி என்ன செய்து விட்டார் இந்த வில்லிவாக்கம் கர்ணன்? பண மோசடிதான்.

``ராஜமங்கலம், இந்திரா நகரில் உள்ள பங்களாவில் குடியிருக்கும் முத்துவேல்மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த நிக்கில் கண்ணா என்பவர் புகார் கொடுத்தார். விசாரணையில், தொழிலை விரிவுபடுத்த முத்துவேலிடம் 100 கோடி ரூபாய் கடனாக நிக்கில் கண்ணா கேட்டுள்ளார். அதற்கு கமிஷனாக 2.62 கோடி ரூபாயை முத்துவேல் முன்பணமாகக் கேட்டுள்ளார். பணத்தை வங்கிமூலம் முத்துவேலுக்கு அனுப்பினார் நிக்கில் கண்ணா. ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டு நிக்கில் கண்ணா நச்சரிக்கவே... ஒருகட்டத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் முத்துவேல். இதைத் தொடர்ந்து தான் முத்துவேலை சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தியும், இன்ஸ்பெக்டர் ஜானகிராமனும் கைது செய்தனர்” என்றனர் போலீஸ் தரப்பில்.

வில்லிவாக்கம் பகுதி தி.மு.க-வினர் என்ன சொல்கிறார்கள்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முத்துவேலின் சகோதரி, தி.மு.க-வில் வழக்கறிஞர் அணியில் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்தார் முத்துவேல். சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் `இளம் தென்றல்’ லயன் முத்துவேல் என்ற பெயரில் ஏராளமான பேனர்கள் வைக்கப்படும். தன்னைச் சந்திக்கும் கட்சியினருக்கு அன்பளிப்பாக கரன்ஸிகளை வாரி வழங்குவார் முத்துவேல். இதனால் `வில்லிவாக்கம் கர்ணன்’ என்றே கட்சியினர் அழைத்தனர். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு தொடங்கி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முத்துவேல் வீட்டில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

`வில்லங்க’ வில்லிவாக்கம் கர்ணன்!

கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் தொழில்களில் முத்துவேல் கில்லி. கட்சியினருக்கு மட்டுமல்லாமல் யார் நன்கொடை கேட்டு வந்தாலும் வாரிக் கொடுப்பார். காவல் நிலையங்களிலும் அரசுத் துறைகளிலும் முத்துவேலுக்கென தனி செல்வாக்கு உண்டு.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வின் அடுத்த வேட்பாளர் முத்துவேல் தான் என அவரின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர். தி.மு.க முக்கிய பிரமுகர்களுடன் முத்துவேல் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், அவரது போயஸ் கார்டன், ஆழ்வார்பேட்டை அலுவலகங்களை அலங்கரிக்கின்றன. அந்த அலுவலகங்களில்தான் முத்துவேலின் அனைத்து டீலிங்களும் நடக்கும். அலுவலகத்தின் பிரமாண்டமான செட்அப், முத்துவேலின் பந்தா, இமேஜ் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர் சொல்வதை யாராலும் நம்பாமல் இருக்க முடியாது. மோசடி வழக்கில் அவர் சிக்கியதை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்கள் அதிர்ச்சியுடன்!

முத்துவேல் வீடு அமைந்துள்ள பகுதிக்குச் சென்றோம். தெரு முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள். வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் ஒட்டப்பட்டிருந்த முத்துவேலின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களை அப்போதுதான் மாநகராட்சி அகற்றியிருந்தது.

`வில்லங்க’ வில்லிவாக்கம் கர்ணன்!

அக்கம்பக்கத்தினரிடம் பேசினோம். ‘‘கழுத்து நிறைய நகைகளுடன் சொகுசு காரில் வருவார். காருக்கு முன்னும் பின்னும் கான்வாய்போல கார்கள் அணிவகுக்கும். செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதிகாலை 3 மணி இருக்கும். திடீரென பயங்கர பட்டாசுச் சத்தம். ஒரு மணி நேரம் கடந்தும் சத்தம் நிற்கவில்லை. 4.30 மணிக்கு கதவை மெதுவாகத் திறந்து பார்த்தால், புகைமூட்டத்தில் தெரு முழுவதும் பட்டாசுக் குப்பைகள்; முத்துவேலின் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள். இவரின் பிறந்த நாளுக்காக பட்டாசு வெடித்திருக்கிறார்கள் என்று அப்புறம்தான் தெரிந்தது” என்றார்கள்.

முத்துவேல் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய முத்துவேல், பிரபலமான வி.வி.ஐ.பி ஒருவரிடம் டிரைவராகப் பணியாற்றினார். அவரிடம் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு தொழிலதிபர் ஆகிவிட்டார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் உள்ள அவரது அலுவலகத்தின் வாடகை, ஒரு லட்சம் ரூபாய்! வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி செல்வார். அவர் ஒரு விழாவில் கலந்துகொள்கிறார் என்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது பட்டாசு வெடிப்போம். லட்சக்கணக்கில் நன்கொடைகளை அள்ளிக் கொடுப்பார். எங்கள் அண்ணனுக்கு இரண்டரை கோடி ரூபாய் என்பதெல்லாம் சாதாரணம். அவரது வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் செய்த சதி இது” என்றார்கள்.

`வில்லங்க’ வில்லிவாக்கம் கர்ணன்!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர்பாபுவிடம், முத்துவேல் குறித்துக் கேட்டோம். ``முத்துவேலின் சகோதரி கோபிலதா தி.மு.க-வில் உள்ளார். முத்துவேல் எந்தப் பதவியிலும் இல்லை. அவரை `தி.மு.க பிரமுகர்’ என்று காவல் துறையினர் திட்டமிட்டு தகவல் பரப்புகிறார்கள். தி.மு.க பிரமுகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்துக் கொண்டு எங்கள் கட்சிமீது அவதூறு பரப்பக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் யாருடனும் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்” என்றார் கோபமாக.

மோசடி வழக்கில் சிக்கிய ஜாம்பவான்கள்!

‘வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! - யேசுதாஸ் நல்லவரா?’ என்ற தலைப்பில் கடந்த 22.7.2012-ல் ஜூ.வி-யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி இல்லாத கடன் தருவதாக ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டுவந்த அப்ரோ யேசுதாஸ் பெங்களூரில் 2012 அக்டோபரில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

வடசென்னையைச் சேர்ந்த ஆதிகேசவன், நடமாடும் நகைக்கடையாக வலம்வந்தார். ‘தங்கத்திலே குளியல்... அரண்மனையில் வாழ்க்கை... திருப்பதிக்கே மொட்டை - அலறவைத்த ஆல் இன் ஆல் ஆதிகேசவன்!’ என்ற தலைப்பில் கடந்த 8.5.2005-ல் ஜூ.வி-யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆதிகேசவன் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் முத்துவேல்!