Published:Updated:

மாணவர்களின் ஆபத்தான பயணம்; விகடன் செய்தி எதிரொலி! - களத்தில் இறங்கிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் பேருந்து
பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் பேருந்து ( தே.சிலம்பரசன் )

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயத்துடன் கூட்டமாகவும், ஆபத்தின் விளிம்பிலும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் காட்சி குறித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவாக கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் பரவத் தொடங்கி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக அடிப்படை வாழ்வாதாரத்தையும் முடக்கிப்போட்டது. அண்மை மாதங்களில் தொற்றுப் பரவல் சற்று குறைந்திருப்பதால் சகஜமான வாழ்க்கைச் சூழலுக்கு மெல்ல மெல்லத் திரும்பிவருகின்றனர் பொதுமக்கள். அதுமட்டுமின்றி, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு நீண்ட நாள்களுக்குப் பின்னர் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த செப்டம்பர் 1 -ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், கட்டாயம் வர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் கிடையாது என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்குப் பேருந்து வழியாகப் பயணிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக அரசுப் பேருந்தில் பயணம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.

மூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன? - விளக்கும் மருத்துவர்கள்

அதேபோல கல்லூரிகளும் சுழற்சிமுறையில் நடைபெறும் எனக் கூறப்பட்டதோடு, 18 வயது நிரம்பிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்து, தடுப்பூசி போடாத மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதில், மாணவர்களின் நலனுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. நீண்ட நாள்களுக்குப் பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

பேருந்தில் கூட்டமாகவும், ஆபத்தின் விளிம்பிலும் பயணித்த பள்ளி மாணவர்கள்.
பேருந்தில் கூட்டமாகவும், ஆபத்தின் விளிம்பிலும் பயணித்த பள்ளி மாணவர்கள்.
தே.சிலம்பரசன்

இந்த்நிலையில் கடந்த 7-ம் தேதி அன்று மாலை, விழுப்புரம் சிக்னல் அருகே தெரிந்த காட்சி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மீதான கேள்வியை எழுப்பியது. 'சேந்தநாடு' எனப் பதாகை வைத்து வந்த அரசுப் பேருந்தில் இருக்கைகள் பயணிகளால் நிரம்பியிருக்க... பள்ளி மாணவர்கள் கூட்டமாகச் சென்று முண்டியடித்தபடி பேருந்தில் ஏறிய காட்சிகள் மனதை உலுக்கின. நிற்பதற்கும் இடமில்லாத அந்தப் பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்தனர். கூட்ட நெரிசலால் அந்தப் பேருந்தில் ஏற முடியாமல் பல பெண் பிள்ளைகள் தயங்கியபடி கீழே நின்றனர். என்னதான் பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டாலும், இது போன்ற பயணங்களின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்தன. இந்தக் காட்சிகளை வீடியோவாக அன்றைய தினமே (07.09.2021) முதன்முதலில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது விகடன்.

இது தொடர்பான கேள்விகளுடன், மறுதினமே (08.09.2021) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) கிருஷ்ணபிரியா-விடம் இது குறித்துப் பேசியபோது, ``பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தினமும் மாலை 3:30 மணி முதலே ஒவ்வொரு வகுப்புவாரியாக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி பள்ளிகளில் கூறியிருக்கிறோம். ஏனெனில், அந்த இடைவெளியில் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குக் கூட்டம் கூடாமல் பாதுகாப்பாகச் செல்வார்கள் என்பதற்காக. அதேபோல முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றும்படி மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்.
தே.சிலம்பரசன்

``பேருந்துகளில், ஆபத்தான முறையில் கூட்டமாகப் பயணிப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கிறதே... மாணவர்களின் பாதுகாப்புக்காகக் கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்தோம்.


``இது போன்ற புகார் எனக்கு வந்திருக்கிறது. அது தொடர்பாகத்தான் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசிக்க தற்போது செல்கிறேன். நல்ல முடிவு எட்டப்படும் என நினைக்கிறேன்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!

அதன்படி நேற்று (09.09.2021) மாலை 4 மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் எஸ்.பி-யுடன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பதற்காக `பள்ளி மாணவர்கள் மட்டும்' எனப் பதாகை வைத்த கூடுதலாக ஐந்து பேருந்துகளைத் தொடங்கிவைத்திருக்கிறார். இந்தப் பேருந்துகள் காலையும், மாலையும் பள்ளி மாணவர்கள் பயணிக்க தொடர்ந்து இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, ``பேருந்துகள் நிரம்பிவிட்டால் மாணவர்கள் கூட்டமாகப் படியில் தொங்கியபடி பயணிக்க வேண்டாம். சிறிது நேரத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், எஸ்.பி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், எஸ்.பி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
தே.சிலம்பரசன்

உடன், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்து சென்றிருக்கிறார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.

அடுத்த கட்டுரைக்கு