Published:Updated:

ஊழலில் உடையும் தடுப்பணை! - அமைதி காக்கும் தி.மு.க... கொந்தளிக்கும் விவசாயிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தென்பெண்ணை தளவாணூர் தடுப்பணை
தென்பெண்ணை தளவாணூர் தடுப்பணை

அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறந்துவைக்கப்பட்ட அந்தத் தடுப்பணை, அடுத்த மூன்றே மாதங்களில் சுவர் உடைந்து ஒரு மதகே சரிந்து அடித்துச் செல்லப்பட்டது.

பிரீமியம் ஸ்டோரி

நூற்றாண்டு அணைகளெல்லாம் பெரும் வெள்ளங்களிலும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்க... கடந்த 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் தென்பெண்ணை தளவாணூர் தடுப்பணை ஒரே வருடத்தில் இரண்டு முறை உடைந்து, மதகுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் இந்த அணை உடைந்தபோது எதிர்க்கட்சி வரிசையிலிருந்து கொந்தளித்த பொன்முடி, இப்போது அமைச்சரான பிறகு அமைதி காப்பது விவசாயிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது!

விழுப்புரம் மாவட்டத்தின் சிறிய தடுப்பணைகளில் போதுமான தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாததால், விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களை இணைக்கும்விதமாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட வேண்டும் என்பது இரண்டு மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், தளவாணூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணையைக் கட்டும் பணியை 25 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் 2019, ஜனவரி மாதம் தொடங்கிய முந்தைய அ.தி.மு.க அரசு 2020, அக்டோபர் மாதம் பணிகளை முடித்தது.

பொன்முடி
பொன்முடி

அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறந்துவைக்கப்பட்ட அந்தத் தடுப்பணை, அடுத்த மூன்றே மாதங்களில் சுவர் உடைந்து ஒரு மதகே சரிந்து அடித்துச் செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை மண்டல நீர்வளப் பிரிவு தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து, “புதிய தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியிருக்கிறோம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார். அவரது இந்த பதிலால் கொந்தளித்துப்போன அன்றைய தி.மு.க எம்.எல்.ஏ பொன்முடி, “ஒரு மதகே அடித்துச் சென்றும், ‘தடுப்பணை உடையவில்லை... சுவர் மட்டுமே உடைந்திருக்கிறது... மண் மட்டுமே அடித்துச் சென்றிருக்கிறது’ என்கிறார்கள். அதற்கு எதற்கு 7 கோடி ரூபாய்?” என்று செய்தியாளர்களிடம் கொதித்தார்.

இதற்கிடையில், “அணையின் இரு கரைகளைத் தொடும் நீளம் 500 மீட்டர். ஆனால், 400 மீட்டர் அளவுக்கு மட்டுமே தடுப்புச்சுவர் கட்டுவதற்குத்தான் அரசு முதலில் அனுமதி தந்தது. மீதி 100 மீட்டருக்கு அரசுதான் களிமண் சுவரை எழுப்பச் சொன்னது” என்று உண்மையைப் போட்டுடைத்தார் தடுப்பணை கட்டிய பி.எஸ்.டி கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் தென்னரசு. இந்த விவகாரம் குறித்து 3.2.2021 தேதியிட்ட ஜூவி-யில் ‘மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஊழலில் உடையும் தடுப்பணை! - அமைதி காக்கும் தி.மு.க... கொந்தளிக்கும் விவசாயிகள்...

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்தத் தடுப்பணை விவகாரத்தை மறந்தேபோனது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது கொந்தளித்த பொன்முடியும் அணைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்தநிலையில்தான் தற்போது பெய்த தொடர் மழையில் நவம்பர் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தின் பக்கமாக தடுப்பணையின் மறுகரையில் உடைப்பு ஏற்பட்டு, களிமண் சுவருடன் மூன்று மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் பொன்முடி, “விழுப்புரம் பகுதியில் அணை சரிந்திருக்கிறது. இரண்டு பகுதிகளிலும் சரிசெய்வதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி நம்மிடம், “கடந்த மழையின்போது கடலூர் பகுதியின் தடுப்பணை உடைந்தது. இந்த மழையில் விழுப்புரம் பகுதியில் உடைந்திருக்கிறது. ஏற்கெனவே ஏற்பட்ட உடைப்பையே இன்னும் சரிசெய்யவில்லை. அதற்குள் இரண்டாவது முறை அணை உடைந்திருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டால், `பழைய உடைப்பைச் சரிசெய்வதற்கே இப்போதுதான் அரசாணை வந்தது. அதற்குள் இப்படி நடந்தால் நாங்கள் என்ன செய்வது?’ என்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாகச் சரிசெய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த தி.மு.க-வும் இதை மறந்துவிட்டது. இந்தத் தடுப்பணையில் தண்ணீர் நின்றால்தான் மலட்டாற்றில் தண்ணீர் வரும். தற்போது அணை உடைந்து தண்ணீர் வெளியேறுவதால், 50 கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன” என்றார் வருத்தத்துடன்!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

நம்மிடம் அச்சத்துடன் பேசிய அந்தப் பகுதியின் மக்களோ, “வெள்ளம் வரத் தொடங்கியதும் அணையின் மூன்று ஷட்டர்களுமே திறந்துவிடப்பட்டன. அப்படியிருந்தும் இந்த உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை முழு அணையும் உடைந்திருந்தால் பத்து கிராமங்களும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் மூழ்கியிருக்கும். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும்” என்றார்கள்!

அமைச்சர் பொன்முடியிடம், “தடுப்பணை சீரமைக்கும் பணியை நீங்கள் துரிதப்படுத்தியிருந்தால் இந்தச் சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே?” என்று கேட்டோம். “என்ன செய்வது? முதலில் அந்தப் பக்கம் உடைந்தது; இப்போது இந்தப் பக்கம் உடைந்திருக்கிறது. அணையைச் சீரமைக்க முதலில் அவர்கள் 7 கோடி ரூபாய்க்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். இப்போது 15 கோடி ரூபாய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டு, வேலைகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன. இனி இப்படி ஓர் அசம்பாவிதம் ஏற்படாது” என்றார்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

இந்த ஒரு தடுப்பணை மட்டுமல்ல... கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் தொடங்கி அரசு மருத்துவமனைக் கட்டடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தடுப்பணைகள், வடிகால் வாய்க்கால்கள் எல்லாமே ‘ஊழல்’ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவருகின்றன. இதுவரை அவற்றைக் கட்டிய கட்டுமான நிறுவனங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை குறித்தெல்லாம் தமிழகம் முழுவதும் விரிவான ஆய்வை மேற்கொண்டு மக்களைக் காக்க வேண்டும் தமிழக அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு