விழுப்புரத்தில் வள்ளலார் பெயரில் இயங்கிவரும் மடத்தை சில தனிநபர்கள் அபகரிக்க முயற்சி செய்வதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, வள்ளலார்வழி அடியார்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

வடலூர் இராமலிங்க சுவாமி கோயிலின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்த லோகநாதன், விழுப்புரத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் வள்ளலார் பெயரில் ஒரு மடத்தை நிறுவி, ஏழைகளுக்கு தொண்டு செய்துவந்தார். 19.06.1947 அன்று அந்த இடத்தை ராமலிங்க சுவாமி மடத்தின் பெயருக்கு மாற்றம் செய்த லோகநாதன், ‘விழுப்புரம் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்ற சங்கத்தையும் ஏற்படுத்தினார். அவருக்குப் பிறகு வந்த சன்மார்க்க மூத்தவர்கள் அந்த இடத்தை பொது வழிபாட்டுத்தலமாக மாற்றி, கடந்த 70 வருடங்களாகப் பராமரித்துவருகின்றனர். ராமலிங்க சுவாமி மடத்தின் பெயரில் இருக்கும் அந்த இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகத்தான் இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வள்ளலார்வழி அடியார்களான சீனுவாசன் மற்றும் தமிழ் வேங்கை, ‘‘ஏழு வருடங்களுக்கு முன்பு, விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஜெய் அண்ணாமலை என்பவர் வள்ளலார்வழி அடியாராக மடத்துக்குள் நுழைந்தார். அவர் வந்ததிலிருந்து மடத்துக்குள் பிழைப்புவாதம் வளரத் தொடங்கியது. அவர் நடவடிக்கை பிடிக்காத சன்மார்க்க மூத்தவர்கள், மடத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். வெளியேறாத மூத்தவர்கள் சிலரை ஏதேதோ காரணங்களைச் சொல்லி வலுக்கட்டாயமாக வெளியேற்றினார் அண்ணாமலை. இதுமட்டு மல்லாமல், பொதுச் சொத்தான வள்ளலார் மடம் முகவரியிலேயே ‘விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்ய டிரஸ்ட்’ என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றைப் பதிவுசெய்தார். அந்த டிரஸ்ட்டுக்கு அவர்தான் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர். இன்று வரை அந்த டிரஸ்டுக்கு வரவு-செலவு கணக்கோ, வங்கிக்கணக்கோ கிடையாது. நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரசீதும் கிடையாது.

எல்லாவற்றுக்கும்மேலாக மடத்தின் சொத்துகளை விற்பதற்கும், முழு மற்றும் பாதி வாடகைக்கு விடுவதற்கும் அனைத்துவிதமான உரிமைகளும் நிர்வாக அறங்காவலருக்கு இருப்பதாகப் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று, இந்த மடத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். ‘எட்டு வாரங்களுக்குள் புகார் குறித்து அறிக்கை தர வேண்டும்’ என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மடத்தில் ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அப்பட்டமாக அபகரிப்பு முயற்சி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடத்தை அறநிலையத் துறை நிர்வகிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் சென்றார் அண்ணாமலை. அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, ‘வள்ளலார், இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல. எனவே, அவர் பெயரிலான அறக்கட்டளையை நிர்வகிக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமையில்லை. வள்ளலார் உருவாக்கிய வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை, தற்போது அறநிலையத் துறை நிர்வகித்துவருகிறது. அங்கிருந்தும் அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என்று விழுப்புரம் மடத்துக்குச் சாப்பிட வந்தவர்களை வைத்து போராட்டம் நடத்தினார் ஜெய் அண்ணாமலை.

விழுப்புரத்தில் உள்ள சொத்துகளை தன் இஷ்டம்போல் அனுபவிக்கத் துடிக்கும் அவர், அது தன் கையைவிட்டுப் போய்விடும் என்ற பயத்தில்தான் வடலூரையும் சேர்த்துக் கொள்கிறார். நாங்களோ, விழுப்புரத்தில் இருக்கும் அறக்கட்டளை சொத்து களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க ஜெய் அண்ணாமலையைச் சந்தித்தோம். ‘‘மடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சீனுவாசன் தரப்புதான் முதலில் டிரஸ்ட்டைப் பதிவுசெய்ய முயன்றது. மடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் டிரஸ்ட்டைப் பதிவுசெய்தோம். டிரஸ்ட் மூலம் வாங்கப்படும் சொத்துகளின் உரிமையைத் தான் நாங்கள் பதிவுசெய்திருக்கிறோம். அனைத்து கணக்குவழக்குகளையும் முறையாகப் பராமரிக்கிறோம்.

`பரிக்கல் நரசிம்மர் கோயிலின் நிர்வாக அலுவலர் இந்த மடத்தை நிர்வகிப்பார்’ என்று இந்து சமய அறநிலையத் துறை எங்களுக்கு கடிதம் அனுப்பியது. அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். சுத்த சன்மார்க்கம், இந்து சமயத்துக்கு உட்பட்டதல்ல. அதனால்தான், இந்து சமய அறநிலையத் துறை வடலூரிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையர் ஜோதியிடம் பேசினோம். ‘‘அந்த இடத்தை அறநிலையத் துறை நிர்வகிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினோம். அதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மடத்தின் நிர்வாகம் விரைவில் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்’’ என்றார்.

‘பாவங்களைச் செய்யாமல் இருந்தால் சன்மார்க்க வழியில் வாழ்ந்து பலனடையலாம்’ என்பது வள்ளலார் வாக்கு. சம்பந்தபட்டவர்களுக்கு இது புரியாமலிருக்காது!