Published:Updated:

``அங்கன்வாடி இல்லை, இடுகாட்டுக்குப் பாதையில்லை'' - குமுறும் தில்லையாடி வள்ளியம்மை நகர் கிராம மக்கள்!

சார் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
சார் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் அடிப்படை உரிமைகள் வேண்டி திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு சார் ஆட்சியர் அனுவிடம் நேரடியாகக் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கிராமம் என்றாலும் நகரம் என்றாலும் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள் இவை அனைத்தும்தான். இவை முறையாகக் கிடைக்கப் பெறாதபோது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் நம்பிக்கையும் சிதைந்து போகிறது. அப்படிச் சிதைந்து போகும் சூழல்களில் அம்மக்கள், அரசு அதிகாரிகளிடத்தில் மனுக்களை அளித்தும், அணியாகத் திரண்டும், போராட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான இக்கட்டான சூழல்களில் தள்ளப்படுகின்றனர்.

இடுகாட்டிற்கு செல்லும் தனியார் வீட்டுமனை  நிலபரப்பு  பாதை
இடுகாட்டிற்கு செல்லும் தனியார் வீட்டுமனை நிலபரப்பு பாதை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட தில்லையாடி வள்ளியம்மை நகரை (T.V.நகர்) சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் பலர் அடிப்படை உரிமைகளை வேண்டி திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு சார் ஆட்சியர் அனுவிடம் நேரடியாகக் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அம்மக்களை சந்தித்துப் பேசினோம், ``நாங்க அனைவரும் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட தி.வ.நகரைச் சேர்ந்த 16 வது வார்டு (பழைய வரையறை) மக்கள். சுமார் 2,000 பேர் இங்கு வசித்து வருகிறோம். 680-க்கும் மேற்பட்ட ஓட்டுரிமை கொண்டவர்கள் இருக்கிறோம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அருந்ததியர் சமூகத்தினர், சிலர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1983-ம் வருடத்துக்கு முன்பு வரை நாங்கள் அனைவரும் ஏரி பகுதியில் கூடியிருந்தோம். அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் எங்களின் குடிசைகளும், ஆடு மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. பின்னர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மூலம் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம்தான் தற்போது நாங்கள் வசிக்கும் தி.வ.நகர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கி அங்கு வசிப்பதற்கான உரிமையை அரசு தந்துள்ளது. ஆனால், பட்டா வழங்கவில்லை. பிற்காலத்தில் நீங்கள் பட்டா பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறினார்கள். இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவேயில்லை.

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி
வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி

இப்பகுதியில் வசிப்பது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை, அடிப்படை வசதிகள்கூட செய்து தருவதில்லை. ஒரு சில அதிகாரிகளால் எங்கள் நிலைமை மாறாமலே உள்ளது. இறந்தவர் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்வதற்குத் தூக்கிச் செல்லும் பாதையும் இதுவரை இல்லை. பட்டாதாரர்கள் நிலத்தின் வழியாகத்தான் எடுத்துச் செல்வோம். தற்போது அவ்விடங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. வரும் காலங்களில் அவர்கள் நிலம் என்பதால் மதில் சுவரும் அமைத்துவிடுவார்கள். அப்போது பாதை இன்றி நாங்கள் என்ன செய்ய முடியும்.

1983-ம் ஆண்டே எங்களுக்காக இடமளித்தது போக 36 சென்ட் நிலப்பரப்பை வருங்கால பொதுத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அரசு தரப்பில் ஒதுக்கினார்கள். தற்போது, அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். ஆனால், இதுவரை எங்கள் குழந்தைகளின் தொடக்கக் கல்விக்கு உதவும் அங்கன்வாடி கட்டடம்கூட நிரந்தரமாக இல்லை. வாடகைக் கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் அங்கன்வாடிக்கு  செல்லும் பாதை
குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்லும் பாதை

அந்த இடமும் தனியாக, பாறைகளுக்கு மத்தியில், முட்புதர்களுக்கு இடையில் 2 - 2 அடி பாதையில் உள்ளது. அதனால், எங்களில் பலபேர் பயந்துகொண்டே தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதில்லை. 25.6.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடமும், 31.7.2019 அன்று முதலமைச்சர் சிறப்பு புகார் பிரிவிலும் (CMSC) அங்கன்வாடி வேண்டி புகார் அளித்தோம். இரண்டு இடத்திலிருந்தும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டக்குழு மூலமாக நகராட்சிக்கு, புது இடத்தில் அங்கன்வாடி கட்டித்தர பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை.

சாலையோரம் உள்ள சில ஹோட்டல் உணவுக் கழிவுகள், மனிதக் கழிவுகளை நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஓடைகளில் கொட்டிச்சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். படிக்கும் இளைஞர்கள் சிலர் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர்களை அடித்ததாகப் பொய்வழக்கு பதிவு செய்து 15 நாள்கள் ரிமாண்டில் வைத்தனர். எங்களால் வேறு என்ன செய்ய முடியும். மழைக்காலம் என்றாலோ அக்கழிவுகளால் எங்கள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். பலவித நோய்கள் வரும். அதுமட்டுமன்றி, இதுவரை தெருக்கள் அமைத்து தரவில்லை, மின் விளக்குகளும் இல்லை, குப்பைகளும் அள்ளப்படுவதில்லை, பொதுக்கழிப்பிடமும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இவற்றைச் சரி செய்து தரக்கோரி இன்றும் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இனியாவது எங்களுக்கு நல்லது நடக்குமா என்று தெரியவில்லை” என்றனர்.

அப்போது பேசிய அப்பகுதி மூதாட்டி ஒருவர்,

``அருந்ததியர் சமூக மக்களுக்குதான் அரசு சலுகைகளில் முதலிடம்… முதலிடம்… என்று அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சொல்கின்றனர். அது பேச்சில் மட்டும்தான் உள்ளது நடைமுறையில் இல்லை.

நிரம்பி வழியும் பொது கழிப்பிட கழிவுநீர்
நிரம்பி வழியும் பொது கழிப்பிட கழிவுநீர்
`பாலம் இல்லை!' - இடுப்பளவு நீரில் சடலத்தைச் சுமந்துசெல்லும் நாங்குநேரி கிராம மக்கள்

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், முதல் தலைமுறையாக எங்க வீட்டுப் பிள்ளைங்க பலபேர் இன்று பட்டப்படிப்பு படித்துவிட்டு கல்தட்டு, மண்தட்டு சுமக்கிறார்கள். இப்படிப் பார்ப்பதற்கா அவர்களைப் படிக்க வைத்தோம். படிக்காதவங்க மத்தியில் இந்தப் பிள்ளைங்க ஏளனமான பேச்சுக்கு இடமாயிட்டாங்க. அருந்ததியர் சமூக மக்களுக்கு முதலிடம் எனக் கூறும் இந்த அரசாங்கத்தில ஒரு பிள்ளைக்குக் கூடவா வேலை வாய்ப்பு இல்லை” எனக் கூறி கண்ணீர் வடித்தார்.

இது இதுகுறித்து, திண்டிவனம் மண்டல சுகாதார அலுவலரிடம் பேசினோம்.

``அங்கன்வாடி, சுடுகாட்டுப் பாதை, சர்வீஸ் சாலை குறைகள் வேறு பிரிவைச் சார்ந்தவை. பொதுக்கழிப்பிடம், குப்பைகளை கொட்டுவது என்பதுதான் என் வரையறையில் வரும். பொதுக்கழிப்பிடம் நகராட்சி மூலமாகக் கட்டிக்கொடுத்து மக்களே பராமரித்துக் கொள்ளும்படிதான் விடப்பட்டது. இருந்தும், கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை நகராட்சி மூலம் கழிவு நீரை அகற்றி உள்ளோம். அங்குள்ள சிலர் கவனக்குறைவால் தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டுச் செல்வதால் அவை விரைவில் நிரம்பிவிடுகின்றன.

கழிவுநீரை அகற்றும்போது பெரும்பாலும் நீர்தான் உள்ளது. சகதிகள் இருப்பதில்லை. அங்குள்ள புதர்களைக்கூட நீக்கி கொடுத்துள்ளோம். குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் இருப்பது என்பது உண்மைதான். இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம். ஹோட்டல்கள் மூலம் கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று அவர்கள் கூறும் இடம் நகராட்சி வரையறைக்குள் இல்லை. இருந்தும் அவர்களின் புகாரை ஏற்று அங்கு ஆய்வு செய்தோம். அப்படியெல்லாம் எதுவுமில்லை. அங்கன்வாடி புதிதாக புதிய இடத்தில் கட்டித் தருவது குறித்து தகவல் அறிந்தேன். ஆனால், அவை வேறு பிரிவில் வரும்" என்று கூறி முடித்துக்கொண்டார்.

அங்கன்வாடிக்கு செல்லும் பாதை
அங்கன்வாடிக்கு செல்லும் பாதை

பின் நகர திட்டமிடல் ஆய்வாளரை (Town planing inspector) அலுவலகத் தொலைபேசியின் மூலம் தொடர்புகொள்ள முயன்றோம். தொடர்பை எடுக்கவில்லை.

அதற்குப் பிறகு, திண்டிவனம் சார் ஆட்சியர், அனு அவர்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

``இப்போதுதான் அவர்கள் மனு அளித்தார்கள். இன்னும் அப்பகுதியைச் சென்று பார்வையிடவில்லை. முடிந்தால் இன்று மாலை அல்லது நாளை காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்ட பின்தான் என்ன செய்யலாம் என்று முடிவு செய்து கூற முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு