Published:Updated:

`ஊருக்குப் போகக்கூட பணம் இல்ல!’ - விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடை; கலங்கும் சிலை தயாரிப்பு கலைஞர்கள்

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் வாங்கிச் செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாகச் சிலைகள் விற்பனையாகவில்லை.

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது முக்கியப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், வழிபாட்டுக்குப் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுவது வழக்கம். சிறிய அளவிலான சிலைகளைப் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே வைத்திருந்து கரைப்பார்கள்.

விற்பனைக்குத் தயாராக இருக்கும் சிலைகள்
விற்பனைக்குத் தயாராக இருக்கும் சிலைகள்

இந்த ஆண்டு 22-ம் தேதி விநாயகர் சதிர்த்தி விழாக் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக வழக்கம் போலவே பாளையங்கோட்டை பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு இதுவரை ஒரு சிலைகூட விற்பனையாகவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

இது குறித்து சிலைத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராகுல் சிங் என்பவர் கூறுகையில், ``நாங்கள் மூன்று குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்து சிலை செய்து வருகிறோம். கடந்த 18 வருடங்களாக நாங்கள் இங்கு வந்து விநாயகர் சிலைகள் செய்கிறோம். ஒவ்வொரு வருடமும் முன்கூட்டியே ஆர்டர் கிடைக்கும். அதற்கேற்ப சிலை வடிப்போம்.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

இந்த ஆண்டு இதுவரை எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை. வழக்கமாக 500 சிலைகளை வடிக்கும் நாங்கள் இந்த ஆண்டு சிறியதும் பெரியதுமாக 200 சிலைகளைச் செய்துள்ளோம். ஆனால், இதுவரை ஒன்றுகூட விற்பனையாகவில்லை. கடன் வாங்கிச் சிலைகளைச் செய்திருப்பதால், விற்பனையாகாவிட்டால் சொந்த ஊருக்குத் திரும்பக்கூட பணம் இல்லாமல் போய்விடும்” என்று வருத்தப்பட்டார்.

சிறியது முதல் 12 அடி வரையிலான சிலைகள் வடித்துள்ளனர். 200 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விலை நிர்ணயித்துள்ளனர். இன்னும் 10 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் சிலை வடிக்கும் கலைஞர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அனுமதி இல்லை என அரசு அறிவித்திருக்கிறது. மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

ராஜ கணபதி, பஞ்சமுக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகளை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே இந்தக் கலைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு