Published:Updated:

ஆன்லைன் வகுப்புகள்: குழந்தைகளைத் துரத்தும் பாலியல் தொல்லை - நலன் காப்பது எப்படி?

பிஎஸ்பிபி கே.கே.நகர்

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பல குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளின்போது எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று அலசுவோம்.

ஆன்லைன் வகுப்புகள்: குழந்தைகளைத் துரத்தும் பாலியல் தொல்லை - நலன் காப்பது எப்படி?

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பல குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளின்போது எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று அலசுவோம்.

Published:Updated:
பிஎஸ்பிபி கே.கே.நகர்

சென்னை கே.கே.நகரில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அரைகுறை அடை அணிந்து ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ மாணவிககளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது, மாணவிகளுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியது உள்ளிட்ட பாலியல் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமல்லாது வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக மாணவிகளுடன் பேசிய ராஜகோபாலன் அவர்களது ஆடை மற்றும் அழகை வர்ணிப்பதாகவும், ஆபாச இணைய தளங்களின் லிங் அனுப்புவதாகவும், சினிமாவுக்கு அழைப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாணவிகள் யாராவது அந்த ஆசிரியரிடம் எதிர்த்து பேசினால் தவறுதலாக அனுப்பிவிட்டேன் என அவர் மழுப்பிவிடுவார் எனவும் பல புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்களின் ஆன்லைன் புகார்
மாணவர்களின் ஆன்லைன் புகார்

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் கல்வியாளர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் வகுப்புகள் பரவலாக்கப்பட்டன. அது முதல் பல்வேறு பிரச்னைகளும் ஆன்லைன் வகுப்புகளில் உடன் எழுந்திருக்கின்றன. தற்போது அந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் ஒரு முக்கிய பிரச்னையாக உருவாகியிருக்கிறது. குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் போது பெற்றோர்கள் எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். `` இணைய வழியில் நடத்துவது வகுப்பே அல்ல. அப்படி நடத்தவும் முடியாது. ஒரு மாணவருக்கு கற்றல் செயலில் கூடுதலாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்குத்தான் இணையமும் கூட.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தனது சக மாணவருடன் கலந்து பேசித்தான் ஒரு மாணவர் கற்றுக்கொள்ளவே செய்வார். எந்த விசயத்தையும் ஏன் என்று கேள்வி கேட்பார். அப்படி இல்லை என்று மறுத்துப் பேசித்தான் கற்றுக்கொள்வார். அப்படித்தான் ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும். இந்த இணையவழி வகுப்புகளில் ஏன் என்ற கேள்வியைக் குழந்தை யாரைக் கேட்கும்? வகுப்புகளில் கேள்வி கேட்கலாம் என்ற தைரியத்தையே குழந்தைகளுக்கு நாம் கொடுக்கவே இல்லையே. பள்ளிக்கு வந்ததும் கைதட்டு, வாயைப் பொத்து, டீச்சர் சொல்வதைக் கேளு என்பதைத்தானே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். டீச்சரை கேள்விக்கு உள்ளாக்கு என்று எங்காவது சொல்லிக் கொடுக்கின்றோமா?” எனக் கேள்வியை எழுப்புகிறார்.

மேலும்,``தனிமையில் லேப்டாப், டேப், மொபைல் மூலமாக அமர்ந்து இணைய வகுப்பைக் கவனிக்கும் ஒரு குழந்தைக்கு ஆசிரியர் பேசுவதை, நடந்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடியுமா? அதைப் புரிந்துகொள்ளவே தவிக்கும் ஒரு குழந்தைக்கு அதில் ஒரு பாலியல் வன்கொடுமையோ வேறு விதமான சிக்கல்களோ ஏற்படுத்தினால் அந்தக் குழந்தையின் இறுதிக்காலம் வரை வடுவாக அவர்களைத் தொடர்ந்து வரும். வகுப்புகளாகவே அங்கீகரிப்பதே தவறு. இணையவழியில் `பெற்றோர் விழிப்பாக இருக்கணும், பெரியவங்க கவனமாக இருக்கணும்' என்று சொல்வது எப்படிச் சாத்தியம்? கொரோனா சூழலால் தானே இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இணைய வகுப்புகள் என்றால் கட்டணம் இல்லாமலா நடத்துகிறார்கள்?

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்
Representational Image

குழந்தை அருகிலிருந்து கவனித்துக்கொள் என்று பெற்றோரிடம் சொன்னால் அப்புறம் எதற்குக் கட்டணம் செலுத்துகிறோம்? வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் அலுவலக வேலையைப் பார்த்தால்தானே இணைய வகுப்புகளுக்குக் கட்டணம், அதற்கான உபகரணங்கள், வசதிகளைச் செய்துகொள்ள முடியும். சாத்தியமில்லாத ஒன்றைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறோம்” எனத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும்,``இணைய வழியில் பாடம் நடத்துவதால் யாருக்கு என்ன லாபம். குழந்தை சொன்னால் கேட்டு கொள்ளப்போகிறார்கள். மனப்பாடம் செய்து தேர்வு எழுதப் போகிறார்கள். பிறகு எதற்கு இந்த ஆன்லைன் வகுப்பு. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதுதான் தொடர்கிறது. நோய்த் தொற்று இருக்கக் கூடிய காலகட்டத்தில் பல்வேறு துயரங்களுக்குள் உழன்று வரும் இந்த சூழலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு குழந்தை இணைய வழியில் வகுப்பைக் கவனிக்க முடியும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. இந்தச் சூழலிலும் குழந்தைகளிடம் ஒருவர் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள முடியும் என்று சொன்னால் நிச்சயமாக எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை. இணையவழி பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. இணைய வழி என்றாலே பாதுகாப்பாற்றதுதான்.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

குழந்தையும் சமூகத்தின் ஓர் அங்கம் தான். அந்த சமூகமே மிகப்பெரிய சிக்கலில் மாட்டியிருக்கும் போது என் குழந்தை அமைதியாக அதைப்பற்றி யோசிக்காமல் படிக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவரது மனநிலைதான் என்ன? முதலில் இந்த சூழலை எதிர்கொண்டு சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். யாருமே எந்த அசைவுமே இல்லாமல் இருக்கும்போது குழந்தை மட்டும் எதற்கு ஆன்லைன் வழியே படிக்க வேண்டும்? ஒன்றிரண்டு ஆண்டுகள் கல்விச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கட்டுமே” என ஆன்லைன் வகுப்பு குறித்து விவரிக்கிறார்.