கட்டுரைகள்
Published:Updated:

வீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்?

ஜவாஹிருல்லா, வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜவாஹிருல்லா, வானதி சீனிவாசன்

‘குயின்’ வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்துவிட்டேன்”

விரல்சொடுக்கில் உலகை அழிக்கவந்த ‘தானோஸ்’-ஆக நின்று மிரட்டுகிறது கொரோனா வைரஸ்! ஓயாமல் சுற்றிக்கொண்டிருந்த பூமிப்பந்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஃப்ரீஸாக்கியிருக்கும் கொரோனாவுக்கு பயந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அரசியல் பிரபலங்களின் ஒருநாள் பொழுது எப்படிக் கழிகிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்...

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் - வானதி சீனிவாசன்

‘`வழக்கறிஞரான என் கணவர், கல்லூரி மற்றும் ப்ளஸ் டூ படித்துவரும் இரண்டு மகன்கள் என எல்லோரும் ஒன்றாக வீட்டில் இருப்பதால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம்; காலையில் யோகா செய்கிறோம். இரவில் மொட்டை மாடியில் அமர்ந்து குடும்ப விஷயங்களைப் பேசிக்கொள்கிறோம். அடுத்தகட்டக் கல்வி குறித்து இன்று மாலை குடும்பத்தினரோடு அமர்ந்து பேச முடிவெடுத்திருக்கிறோம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வீட்டில் பொருள்களையெல்லாம் இடம் மாற்றி வைத்து சுத்தம் செய்யவேண்டும் என்று ரொம்ப நாள்களாகவே நினைத்திருந்த வேலையை இன்றுதான் செய்துமுடித்தோம். நான் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய என் கணவரும் உதவினார்.

இதுவரையிலும் படிக்காமல் ஒதுக்கி வைத்திருந்த புத்தகங்களை இப்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகப் படித்துவருகிறேன். பார்க்காமல் இருந்த திரைப்படங்களையும்கூட வரிசையாகப் பார்த்துவருகிறேன். ‘குயின்’ வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்துவிட்டேன்”

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் - வேல்முருகன்

‘`கடலூர் மாவட்டத்திலுள்ள என் சொந்த ஊரான புலியூர் காட்டுசாகையில் இருக்கிறேன். வழக்கமாக நான் ஊர்வந்தாலே நண்பர்கள் கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் நேரில் வந்துவிடுவார்கள். ஆடு, கோழி அடித்துக் கூட்டாஞ்சோறு சமைத்து விருந்துண்ணுவோம். ஆனால், இப்போது ‘கூட்டம் கூடாது’ என்பதால், யாரையும் அழைக்கவில்லை.

வேல்முருகன்
வேல்முருகன்

பல வருடங்களுக்குப் பிறகு அம்மா, அண்ணன்கள் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றாக இங்கே வந்து தங்கியிருக்கிறோம்.

வயலில் தண்ணீர் பாய்ச்சுவது, தோப்பில் இளநீர் பறிப்பது என விவசாய வேலைகளைச் செய்துவருகிறேன். காலையில் பம்பு செட்டில் குளித்துவிட்டு, காலை உணவாக இளநீர் குடிப்பது, மதிய உணவுக்குப் பலாப்பழம், கொய்யாப்பழம் என முழுக்க இயற்கை வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஓய்வாக இருக்கும்போது, யூடியுபிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கான வரலாற்று வீடியோக்களைப் பார்த்துக்கொள்கிறேன். சேர சோழ பாண்டியர் பேரரசு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்டரிகளைப் பார்த்துமுடித்துவிட்டேன். இப்போது முகலாயர் பேரரசு குறித்த வீடியோவைப் பார்த்துவருகிறேன்.’’

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் - ஜவாஹிருல்லா

‘`வீட்டை விட்டுத்தான் வெளியே போகமுடியவில்லையே தவிர, சமூக வலைதளம் உள்ளிட்ட இணைய வழித் தொடர்பில்தான் இருக்கிறோம். உணவுத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு உணவு கொண்டுசெல்வது, போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதென்று கட்சித்தொண்டர்களும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

ஆக, ஊரடங்கு என்று சொல்லி வீட்டுக்குள் இருந்தாலும்கூட, நாட்டு நடப்புகள் நம்மை உட்கார விடுதில்லை என்பதுதான் உண்மை. ஒரேயொரு வித்தியாசம், இதற்கு முன் வெளியில் கட்சி வேலையாக அலைந்து திரியும்போது நேரத்துக்குச் சாப்பிட முடியாது. அதுவும் ஹோட்டல் சாப்பாடுதான் கிடைக்கும். ஆனால், இப்போது வீட்டிலேயே இருப்பதால், நேரத்துக்கு வீட்டுச் சாப்பாடு கிடைத்துவிடுகிறது. இது இப்படியே தொடருமா என்பது தெரியவில்லை. வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து பேசி நீண்டநாள் ஆகிவிட்டது. இப்போது அது சாத்தியமாகியிருக்கிறது. என் மகள் வயிற்றுப் பேரன், பேத்தியோடு கொஞ்சி விளையாடக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது.’’

தமிழக பா.ஜ.க உறுப்பினர் நடிகை - நமீதா

‘`நானும் என் கணவரும் சென்னையில் தான் இருக்கிறோம். ஜிம்முக்குப் போக முடியாததால், காலையில் எழுந்ததும் யோகா செய்கிறோம். வீட்டு வேலையாட்கள் அனை வரையும் வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விட்டதால், பாத்திரம் கழுவுவது, சமையல் செய்வது, வீடு க்ளீன் பண்ணுவது, துணி துவைப்பது என அனைத்து வேலை களையும் நாங்கள் இருவரும் சேர்ந்தேதான் செய்கிறோம்.

நமீதா
நமீதா

ஓய்வுநேரங்களில், உலகத் திரைப்படங்கள் அனைத்தையும் பார்க்கிறேன். நாவல் படிக்கிறேன். சமீபத்தில், ஜான் கிறிஸம் எழுதிய ‘த அசோசியேட்’ நாவல் படித்துமுடித்துவிட்டேன். நானே க்ரைம் கதை ஒன்றையும் எழுதி வருகிறேன். இது திரைப் படத்துக்கான ஸ்கிரிப்டாக இருக்குமா அல்லது வெப்சீரிஸுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கவிதைகளும் எழுதி வருகிறேன்.’’

கொரோனா ஊரடங்கால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில், ஃபிட்னெஸ், சமையல், புத்தகம், குழந்தைகளுடனான நேரம் என ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ தருணங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில செலிபிரிட்டிகளின் அனுபவங்களைக் கேட்டோம்.
கமலா செல்வராஜ்
கமலா செல்வராஜ்

டாக்டர் கமலா செல்வராஜ்

“ஊரடங்கால பேரன் பேத்தியெல்லாம் என் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. அவங்களை அடுத்து வர்ற எக்ஸாம்ஸுக்குப் படிக்கவெச்சிட்டிருக்கேன். எல்லாம் டீன் ஏஜ் பிள்ளைங்கங்கிறதால, என் தலை கொஞ்சம் மறைஞ்சாலும் என் லேப் டாப், ஐ பாட் எல்லாத்தையும் எடுத்து வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சிடுறாங்க. ‘டேய் அதுல என்னோட மெடிக்கல் விஷயங்கள் இருக்கு’ன்னு சொன்னாலும், ‘நாங்க பென் டிரைவ் கனெக்ட் பண்ணி விளையாடறோமே பாட்டி’ன்னு கெஞ்சிக் கொஞ்சுறாங்க. அவங்களை சமாளிச்சுட்டே, ஒரு மகப்பேறு மருத்துவரா டெலிவரி களையும் தொடர்ந்து பார்த்துட்டிருக்கேன்!”

சாலமன் பாப்பையா

“ஊருக்குத்தான் இது ஊரடங்கு. எனக்கு, ‘நாள் ஒழுங்கு!’ 84 வயசுலயும், நண்பர்கள் வீட்டுக்கு எப்பவாச்சும் போவேன். இப்போ அதுவும் முடியுறதில்ல. ஆனா, அது ஒண்ணும் குறையா தெரியல. பொழுதுபோகாம எல்லாம் இல்ல. அகநானூற்றைப் புதிய கோணத்துல எழுதிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா நேரம் போதாமத்தான் இருக்கு. வீட்டம்மாவைக் கலாய்ச்சிட்டு, மகளோடு பேசிக்கிட்டுன்னு பொழுது போகுது. வீட்டுல எங்களுக்கு உதவி செய்திட்டிருந்தவங்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, ‘அப்புறம் பாப்போம், பத்திரமா இருங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டோம். ஆனமட்டும் நாங்களே சமைச்சு சாப்பிட்டுக் கிட்டிருக்கோம் .

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

ஓய்வுபெற்ற எங்களுக்குப் பணப்பிரச்னை இல்ல. ஆனா, அன்றாடங் காய்ச்சிகள நெனச்சாத்தான் மனசு கனக்குது. நானெல்லாம் அப்படியொரு குடும்பத்துலேருந்து வந்தவன்தான். இருக்கிறவங்க, இல்லாதவங் களுக்குக் கொடுக்கணும். அதுக்கான நேரம் இது. நான் எல்லாச் சமயங்களையும் ஓரளவு கற்றவன். எல்லாமே ‘கொடு’ன்னுதான் சொல்லுது. கொடுப்போம்!”

சு. வெங்கடேசன் எம்.பி

“வீட்டில் இருந்தபடி மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம்னு சம்பந்தப்பட்டவங்ககிட்ட போன்ல பேசிட்டே இருக்கேன். இந்தச் சூழல்ல படிக்கிறதுக்கான மனநிலை வர்றது இல்ல. ஆனாலும் அப்பப்போ படிக்கிறேன். பழைய புத்தகங்கள், சிடிகள், கணினியில் இருக்கும் பிடிஎஃப் ஃபைல்கள்னு இவற்றையெல்லாம் பிரிச்சு வகைப்படுத்தி ஒழுங்கு செய்யுறதுல, தினமும் 2, 3 மணி நேரம் போகுது.

சு. வெங்கடேசன் எம்.பி
சு. வெங்கடேசன் எம்.பி

கடந்த ஒரு வருஷத்துல நான் தொடர்ந்து ஒரு வாரம் வீட்டுல இருந்தது இப்போதான். உறவுகளுக்கிடையில உரையாடல் அதிகரிச்சிருக்குது. தேவையானது, தேவையில்லாதது, சரியானது, தப்பானதுன்னு எல்லாத்தையும் பேசறோம். ஒரு மணிநேரம் சண்டையில்லாம நாங்க பேசிக்கிறோமா என்பதை ஒரு சோஷியல் எக்ஸ்பெரி மென்ட்டாகச் செய்துபார்க்கிறேன். மனைவி, பிள்ளைங்ககிட்டயே சண்டை தோரணையில்லாமப் பேச முடியலைன்னா, வெளியில எப்படி?!”

நடிகை சம்யுக்தா ஹெக்டே

‘`என் அம்மா, அப்பா இப்போ என் குழந்தைகள் ஆகிட்டாங்க. ‘வீட்டுக்குள்ளேயே இருக்க முடியலை செல்லம்’னு சொல்ற அப்பாவுக்கு நான்தான் இப்போ வில்லி. அவங்களை வெளியே விடாம வெவ்வேறு வேலைகள்ல என்கேஜ்டா வெச்சிட்டிருக்கேன்.

சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே

ரெண்டு பேருக்கும் டான்ஸ் சொல்லிக்கொடுக்க ப்ளான் பண்ணிட்டிருக்கேன். அப்புறம், நான் ஒர்க் அவுட், டான்ஸ், பெயின்டிங், கைவினைப்பொருள்கள் செய்றது, என் செல்ல நாய்க்குட்டியோடு விளையாடுறதுன்னு வீட்டுக்குள்ள இருந்தபடியே என்னை பிஸியா வெச்சிருக்கேன். பொதுவா மனுஷனுக்கு விதிமுறைகளை மீற ரொம்பப் பிடிக்கும். ஆனா, இதுபோன்ற சூழ்நிலைகள்ல அந்தத் தவற்றை யாரும் செய்யக்கூடாது. நாம ஏற்கெனவே அம்மை போன்ற நோய்களை எதிர்கொண்டிருக்கோம். இந்தக் கொரோனாவையும் கடந்துடுவோம்னு நம்புறேன். நம்ம பெற்றோர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் எல்லாரும் வீட்டுக்குள்ள இருங்க ப்ளீஸ்!”