சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சினிமாவுக்கு ஓ.டி.டி... புத்தகத்துக்கு விர்ச்சுவல் திருவிழா!

விர்ச்சுவல் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
விர்ச்சுவல் திருவிழா

பதிப்பாளர்களின் மெக்கா’ எனப்படும் ப்ராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவே இந்த முறை விர்ச்சுவலாகத்தான் நடக்கப் போகிறது.

வ்வோராண்டும் சென்னைப் புத்தகத் திருவிழாவின் போது பதிப்பாளர்கள் சொல்லும் ஒரு பதில் மிகவும் பிரபலம். ‘`ஆன்லைன் வர்த்தகத்தால் புத்தகத் திருவிழாவுக்கு பாதிப்பு இல்லை. ஆண்டுதோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.’’ கொரோனா நடத்திய கண்ணாமூச்சியில் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவே ஆன்லைனில்தான் நடக்கப்போகிறது. ஆமாம், விர்ச்சுவல் புத்தகத் திருவிழா!

பபாசி அமைப்பின் முன்னாள் செயலாளர் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தியிடம் இதுபற்றிப் பேசினேன்.

சினிமாவுக்கு ஓ.டி.டி... புத்தகத்துக்கு விர்ச்சுவல் திருவிழா!

‘` ‘பதிப்பாளர்களின் மெக்கா’ எனப்படும் ப்ராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவே இந்த முறை விர்ச்சுவலாகத்தான் நடக்கப் போகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு மதுரை, ஈரோடு, நெய்வேலி புத்தகத் திருவிழாக்களும் நடக்கவில்லை. வேறு வழியில்லை. தமிழ் நூல்களுக்கும் விர்ச்சுவல் விழாவை நடத்துவது என்று தீர்மானித்து ஆறு பேர் களத்தில் இறங்கினோம். என்னுடன் காந்தி கண்ணதாசன், காலச்சுவடு கண்ணன், கிழக்கு பதிப்பகம் பத்ரி ஆகிய பதிப்பாளர்கள்... இவர்களோடு என் மகன் கார்த்திகேயன், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவர். விரும்பிப் பதிப்புத்துறைக்கு வந்திருக்்கிறார். இன்னொருவர் காந்தி கண்ணதாசனின் மகன், முரளி கண்ணதாசன். ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ முடித்துவிட்டுப் பதிப்புத்்துறைக்கு வந்தவர். இவர்கள் இருவரும்தான் இதில் முழுப்பங்களிப்பு செய்கிறார்கள். ப்ராங்க்பர்ட்டில் என்னென்ன வசதிகள் செய்தார்களோ அனைத்தையும் நாங்கள் யோசித்துச் செய்திருக்கிறோம்.

காந்தி கண்ணதாசன், கார்த்திகேயன்
காந்தி கண்ணதாசன், கார்த்திகேயன்

பொதுவாகப் புத்தக விற்பனையில் 50 சதவிகிதம், புத்தக விழா மூலமாக நடக்கும். புத்தக வியாபாரிகள் மூலம் 30 சதவிகிதமும் ஆன்லைன் மூலமாக 10 சதவிகிதமும், கேட்லாக், விளம்பரம் ஆகியவற்றைப் பார்த்து நேரடி விற்பனையாக 10 சதவிகிதமும் நடக்கும். ஆன்லைன் விற்பனை கொரோனா காலத்தில் 25 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. வீட்டிலிருந்தபடியே வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதை இந்த விர்ச்சுவல் விழா மூலம் அதிகரிக்்க முயல்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பதிப்பகங்களையும் ஓர் இணையதளத்தில் ஒன்றிணைக் கிறோம். பதிப்பகப் பெயர், ஆசிரியர் பெயர், விலை… இப்படி எந்த முறையிலும் நூல்களைத் தேடிப் பெறமுடியும். ஒவ்வொரு நூலிலிருந்தும் பத்துப் பக்கங்களை சாம்பிள் பக்கங்களாகப் பதிவேற்ற முடியும். வாசகர்கள் படித்துப் பார்த்துத் தேர்வு செய்ய இது வசதியாக இருக்கும். உள்ளே,பதிப்பகங்களின் இணைய தளங்களுக்குச் செல்ல இணைப்பும் தரப்பட்டிருக்கும். ஒருவர் விகடன் பதிப்பித்த நூல்களை மட்டும் பார்க்க விரும்பினால் இங்கிருந்தே விகடன் வலைதளத்துக்குச் சென்று பார்க்கமுடியும்.

புகழேந்தி, முரளி கண்ணதாசன்
புகழேந்தி, முரளி கண்ணதாசன்

இந்த விர்ச்சுவல் திருவிழா ஒரு மாதம் முழுக்க நடக்கும். இது மாதிரியான புது முயற்சிகளுக்கு எப்போதும் விகடன் துணை நிற்கும். இப்போதும் அந்த ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

வழக்கமாக புத்தகச் சந்தையில் 10 சதவிகித கழிவு வழங்குவோம். இந்த விர்ச்சுவல் திருவிழாவில் 20 சதவிகிதம் வரை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நடுவே இரண்டு மாதங்கள் இடைவெளி. மீண்டும் ஒரு மாதம் விர்ச்சுவல் விழா. ஆண்டுக்கு நான்கு முறை இப்படி நடத்தவிருக்கிறோம். ஆண்டு முழுவதும் நடத்தலாம்தான். அப்படி நடத்தினால் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். குறிப்பிட்ட நாள்களில்தான் வாங்க முடியும் என்று இருப்பதால் வாசகர்களிடம் ஆர்வத்தைத் தக்க வைக்க முடியும். இடைப்பட்ட காலத்தில் புதிய நூல்கள் வெளியிடவும் எங்களுக்கு அவகாசம் கிடைக்கும்.

கண்ணன் சுந்தரம்,  பத்ரி
கண்ணன் சுந்தரம், பத்ரி

பல நூறு பதிப்பகங்கள் இருந்தாலும் எங்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தினாலே எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்குகிறார்களோ அந்தப் பதிப்பகத்துக்குப் பணம் நேரடியாகச் சேர்க்கப்பட்டுவிடும். புத்தகங்களை அனுப்பிவைக்க கூரியர் நிறுவனங்களிடம் சலுகைக்குப் பேசிவருகிறோம். தேவைதான் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. இப்போது கொரோனா வடிவத்தில்’’ என்றார்.

மிளகாய் பஜ்ஜி, அப்பளம் சாப்பிட புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டத்துக்குத்தான் ஏமாற்றம்!