Published:Updated:

எப்படி இயங்குகின்றன தனியார் ஆக்ஸிஜன் ஆலைகள்! - ஒரு நேரடி விசிட்

தனியார் ஆக்ஸிஜன் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
தனியார் ஆக்ஸிஜன் ஆலை

தொற்று மேலும் தீவிரமடைந்தால், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு

எப்படி இயங்குகின்றன தனியார் ஆக்ஸிஜன் ஆலைகள்! - ஒரு நேரடி விசிட்

தொற்று மேலும் தீவிரமடைந்தால், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு

Published:Updated:
தனியார் ஆக்ஸிஜன் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
தனியார் ஆக்ஸிஜன் ஆலை
தீவிர கொரோனா தொற்றுக்குள்ளாகி ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. தமிழகத்தில் இப்போது ஆக்ஸிஜன் வசதியுடன் 43,000 மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன. ‘கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 12,500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். தலா 16 லட்சம் ரூபாய் செலவில் 142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
எப்படி இயங்குகின்றன தனியார் ஆக்ஸிஜன் ஆலைகள்! - ஒரு நேரடி விசிட்

கடந்த மாதம் வரை தமிழகத்தின் தினசரி ஆக்ஸிஜன் தேவை 250 மெட்ரிக் டன் மட்டுமே. இப்போது தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழக ஆக்ஸிஜன் நிலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில், ‘இப்படியே போனால், விரைவில் தினசரி தேவை 800 மெட்ரிக் டன்னாக உயரும்’ என சென்னை உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. ‘ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ‘தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளோம்’ என மத்திய அரசு வழக்கறிஞர் கடந்த மே 12-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்திலிருந்து ரயிலில் ஆக்ஸிஜன் டேங்கர்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

தொற்று மேலும் தீவிரமடைந்தால், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு. குறிப்பாக ஆக்ஸிஜன் சப்ளையில், தேவை தன்னிறைவு. சமீபத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ள தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு நடத்தினார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.

எப்படி இயங்குகின்றன தனியார் ஆக்ஸிஜன் ஆலைகள்! - ஒரு நேரடி விசிட்

எப்படி இயங்குகின்றன ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்? அமைச்சர்கள் ஆய்வு செய்த ‘ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ்’, ‘ப்ராக்ஸ்ஏர்’, ‘ஏர் வாட்டர்’ ஆகிய தனியார் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றோம். மேற்கண்டவற்றில் முதல் இரண்டு ஆலைகள் மட்டுமே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஏர் வாட்டர் நிறுவனம், பிற தொழிற்சாலைகளிலிருந்து வரும் ஆக்ஸிஜனை சிலிண்டர்கள் மற்றும் டேங்கர்களில் நிரப்பி விநியோகிக்கிறது. இங்கிருந்துதான் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது.

‘ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்’ ஆலையின் முகப்பிலிருந்து பார்க்கும்போதே, ஓர் அவசர மருத்துவமனையின் வேகத்தில் அந்த ஆலை இயங்குவது தெரிந்தது. பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்கள் அங்கும் இங்கும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலையில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கன் ஆகிய மூன்று வாயுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை தினசரி 149 டன் ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது நைட்ரஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டு, 180 முதல் 190 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றனர். இதில் தினசரி 10 டன் மட்டும் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டு, மீதமுள்ளது தமிழக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றார்கள் அங்கிருக்கும் நிர்வாகிகள்.

ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் தமிழக அரசால் கண்காணிக்கப் படுவதுடன், போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. “அரசு கேட்டுக்கொண்டால், ஆக்ஸிஜன் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியுமா?” என்று ஆலை நிர்வாகத்திடம் கேட்டோம். “இங்கிருக்கும் தொழில்நுட்ப வசதியை வைத்து 190 டன் வரைதான் உற்பத்தி செய்ய முடியும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் இருக்கும் எங்கள் ஆலைகளிலிருந்து கொண்டுவந்து கொடுப்போம்” என்றனர்.

எப்படி இயங்குகின்றன தனியார் ஆக்ஸிஜன் ஆலைகள்! - ஒரு நேரடி விசிட்

அடுத்து, ‘ப்ராக்ஸ்ஏர்’ ஆலைக்குச் சென்றோம். ஊழியர்கள் ஒவ்வொருவரும் முழங்கால் வரையிலான ஷூ அணிந்திருந்தனர். ஹெல்மெட் கட்டாயம் என்றார்கள். ஆலையின் முன்புற வளாகத்தில் ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றைச் சுத்தம் செய்து உள்ளே அனுப்புகிறார்கள். ஆக்ஸிஜன் நிரப்பட்டு வெளியே வரும்போது, அதன் அளவை அரசு அதிகாரிகள் சோதிக்கிறார்கள்.

அந்த ஆலையைக் கண்காணிக்கும் அதிகாரிகள் நம்மிடம், “இங்கு நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தினசரி 60 டன்னுக்குக் குறையாமல் தமிழக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது” என்றார்கள்.

இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் ‘ஏர் வாட்டர்’ ஆலைக்குச் சென்றோம். வரிசையாக டேங்கர் லாரிகள் மற்றும் சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு, 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் விநியோகம் நடக்கிறது. இங்கு ஆக்ஸிஜன் தயாரிப்பு நடைபெறுவதில்லை என்பதால், இந்த ஆலையின்மீது அரசு கண்காணிப்பு எதுவும் இருக்கவில்லை.

தமிழகம் முழுக்க இன்னும் பல இடங்களில் சிறிய அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெறுகிறது. இவற்றைக் கண்காணித்து சப்ளையை முறைப்படுத்த சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் திட்டமிட்டு செய்து, எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும்... ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவல மரணங்கள் நிகழாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism