Published:Updated:

கரங்கள் கோத்து கட்டடம் எழுப்பினோம்!

ஈரோடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு

கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதருடைய ஒத்துழைப்பும் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை இந்தக் கொரோனாப் பெருந்தொற்றுக்காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. ஈரோட்டில் தன்னார்வலர்கள் சிலர் கூட்டு முயற்சியால் 45 நாள்களிலேயே 69,200 சதுர அடியில், 400 படுக்கைகள் கொண்ட கட்டடத்தை அரசு மருத்துவமனையில் கட்டி அசத்தியுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. தினசரி பாதிப்பு எகிற, படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியின்றிப் பலரும் பரிதவித்துப்போயினர். மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே பலரும் இறந்துபோன சோகங்களும் நடந்த சூழலில்தான் அவசரமாக இந்த மருத்துவமனைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவமனை கட்டுவதற்கு நிதி திரட்டிய ‘ரோட்டரி ஹெல்த் கேர் டிரஸ்ட்’-இன் நிறுவனரும் சேர்மனுமான டாக்டர் சகாதேவனிடம் பேசினேன்.

“பொறுப்பேற்ற சில நாள்களிலேயே அமைச்சர் முத்துசாமி ஈரோட்டிலுள்ள ரோட்டரி சங்கங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்களை அழைத்துப் பேசினார். ‘ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. உங்களால் உதவ முடியுமா? கொரோனா அடுத்த அலை வரும்போது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கும் அது நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும்’ எனக் கேட்டதோடு செயல்படுத்தவிருந்த திட்டத்தையும் கூறினார். திட்ட மதிப்பு சுமார் 14 கோடி ஆகும். ஈரோட்டில் உள்ள 19 ரோட்டரி சங்கங்களில் இருந்தே ஒரு பெரிய தொகையைத் திரட்டி விடலாம் என்று நினைத்தோம். உடனே ‘ரோட்டரி ஹெல்த் கேர் டிரஸ்ட்’ அறக்கட்டளையை நிறுவினோம். முதற்கட்டமாக, ஈரோட்டிலுள்ள ரோட்டரி உறுப்பினர்கள் 125 பேர் தலா 5 லட்சத்தைக் கொடுக்க முன்வந்தார்கள். அதிலேயே 6 கோடிக்கு மேல் நிதி கிடைத்தது. அதனையடுத்து சக்தி மசாலா நிறுவனம் 2 கோடி ரூபாயும், ஆதித்யா மசாலா நிறுவனம் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த நிட் கேலரி கார்மென்ட்ஸின் விஜய் ஆனந்த் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாயும் கொடுத்தார்கள். மேலும், இந்த மருத்துவமனையை குறுகிய காலத்தில் லாபமில்லாமல் கட்டுவதற்கு முன்வந்த ‘டீமேஜ்’ கட்டுமான நிறுவனமும் அவர்களுடைய பங்களிப்பாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்கள். மேலும் ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள், தொழில் நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் எனப் பலரும் நிதியுதவி அளித்துள்ளார்கள். அரசு மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவமனைக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்க, புதர் மண்டிக்கிடந்த இடத்தைச் சுத்தம் செய்து மே 18-ம் தேதி பூஜை போட்டு, இரவு பகலென வேலையைக் கிடுகிடுவெனச் செய்ய ஆரம்பித்து 45 நாள்களில் மருத்துவமனையைக் கட்டி முடித்துவிட்டோம்.

கரங்கள் கோத்து கட்டடம் எழுப்பினோம்!

கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனை ரோட்டரி இண்டர்நேஷனல் மூலமாக நன்கொடையாகப் பெறுவதற்கு வேலைகள் நடந்துவருகின்றன. மருத்துவமனைப் பராமரிப்பினையும் நாங்களே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறோம். எங்கள் காலத்துக்குப் பிறகும் பல உயிர்களை இந்த மருத்துவமனை காப்பாற்றும் என்கிற திருப்தி எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது” என்றார்.

இந்த மருத்துவமனையைக் கட்டிமுடித்த டீமேஜ் பில்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.கே.நந்தகோபால், “ப்ரீகாஸ்ட் என்னும் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் இந்திய அளவில் முதன்மையான நிறுவனமாக நாங்கள் இருந்துவருகிறோம். கட்டுமானத்திற்குத் தேவையான தூண்கள், சுவர்கள், படிக்கட்டுகள் என அனைத்தையும் தொழிற்சாலைகளிலேயே தயாரித்து எடுத்துவந்து, எளிதில் மேற்கொள்ளும் கட்டுமான முறை இது. மே 12-ம் தேதி அமைச்சர் ஓகே சொல்ல, உடனே வேலையை ஆரம்பித்தோம்.

மே 30-ல் ஈரோட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கட்டுமானத்தைப் பார்த்துப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். 30 இன்ஜினீயர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் இரவுபகல் பாராத உழைப்பால் 45 நாள்களில் முழு மருத்துவமனையையும் கட்டி முடித்தோம். வெறும் கட்டடம் மட்டுமல்லாமல் லைட்டிங், எலெக்ட்ரிகல் ஒர்க்ஸ், ஆக்சிஜன் பைப் லைன் என அனைத்து வேலைகளையும் முடித்துள்ளோம். கொரோனா பயத்தால் முதலில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நுழைய தொழிலாளர்கள் முதற்கொண்டு பலரும் தயங்கினார்கள். அவர்களுக்குத் தடுப்பூசி, பாதுகாப்புக் கவசங்கள் போன்றவற்றை வழங்கி நம்பிக்கையூட்டினோம். இது ‘மிகக் குறைந்த கால அவகாசத்தில் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனை’ எனும் உலக சாதனையைப் படைத்துள்ளது” என மகிழ்ந்தார்.

அமைச்சர் சு.முத்துசாமியிடம் பேசினோம். “கொரோனா பாதித்த பலரும் மருத்துவமனையில் பெட் கிடைக்காம அலைஞ்சதைப் பார்க்க எனக்குக் கஷ்டமா இருந்தது. எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கணும்னு மருத்துவமனை ஒன்றைக் கட்ட கோரிக்கை வச்சேன். 45 நாள்களில் கட்டி முடிச்சிடலாம்னு கட்டுமான நிறுவனம் சொன்னப்ப நான் நம்பவேயில்லை. தினமும் போய் கட்டுமானத்தைப் பார்ப்பேன். அவங்க வேகத்தைப் பார்த்து அசந்துட்டேன்.

முத்துசாமி, நந்தகோபால், சகாதேவன்
முத்துசாமி, நந்தகோபால், சகாதேவன்

அரசு சார்பாக ஒரு கட்டுமானத்தைச் செய்யணும்னா அதுக்கு நிதி ஒதுக்குறதுல ஆரம்பிச்சு, டெண்டர் விடுற வரை பல பிராஸஸ் இருக்கு. அதுக்கு குறிப்பிட்ட காலமும் தேவைப்படும். ஆனா, அரசோட பணம் ஒரு பைசா இல்லாம குறுகிய காலத்திலேயே 400 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருக்கு” என்றார்.

சாமானியர்களும் அரசோடு சேர்ந்து செயல்பட்டால் எத்தகைய சாதனைகளையும் நிகழ்த்தலாம் என்பது நிரூபணமாகியுள்ளது.