Published:Updated:

`என் குழந்தையைத் தூக்கி 45 நாளாச்சு!' கொரோனா சூழலிலும் மனிதம் பரப்பும் தன்னார்வலர்கள்! 

புவி நண்பர்கள் குழு
புவி நண்பர்கள் குழு

மனிதனை மனிதனே பார்த்து ஒதுங்கும் இந்தச் சூழலில்கூட, மனித நேயம் மட்டுமே மக்களைத் தொடர்ந்து இயங்கச்செய்யும் ஒன்றாக பல இடங்களில் இருந்து வருகிறது.

கொரோனா நோய் மனித இனத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. கொரோனா நோய் குறித்த பயம் ஒரு பக்கம். வாழ்வாதாரம் இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடுவது ஒரு பக்கம் என மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து எல்லோரும் பல சிரமங்களைச் சந்தித்து வந்தாலும், அன்றாடம் சம்பாதித்து தங்களின் வாழ்கையை கழித்து வந்தவர்களும் ஆதரவற்றவர்களும் தங்களின் உணவுக்கே வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

``கொரோனா பாதிப்புக்கு பயந்து, அரசாங்கத்தின் உத்தரவு கேட்டு வீட்டுக்குள் இருக்கும் நாங்கள் பசிக்கு இரையாகிவிடுவோமா என பயமாக இருக்கிறது" என, தினமும் யாரேனும் ஒருவர் ஊடகத்தில் தன் அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்.

இதுபோன்ற அசாதாரண சூழலைச் சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றாலும், அரசாங்கம் செய்யும் உதவிகள் `தேவைக்கு குறைவாகவோ இருக்கின்றன. அரசின் உதவிகள் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை உள்ளிட்டவையும் இதில் பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. இந்த நிலையில், மத்திய அரசு கொடுத்த அறிவிப்பின்படி கூடுதலாக 14 நாள்கள் ஊரடங்கு அறிவிப்பு மக்களை இன்னும் கலங்கச் செய்துள்ளது. அரசும் மக்களின் வாழ்வாதராத்தைச் சீராக்கச் செய்வதறியாது நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மனிதனை மனிதனே பார்த்து ஒதுங்கும் இந்தச் சூழலில்கூட, மனித நேயம் மட்டுமே மக்களைத் தொடர்ந்து இயங்கச்செய்யும் ஒன்றாக பல இடங்களில் இருந்து வருகிறது.

ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று! - ஹாட்ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு சந்தை?

இயற்கை தன் வலிமையை மனித இடத்தில் காட்டி, பேரழிவுகளை உண்டாக்கிய சூழலில் எல்லாம் மனிதம்தான் அந்தச் சூழலைச் சரிசெய்ய கரம் நீட்டியது. கொரோனா நேரத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றார்கள். அப்படி உதவி செய்யும் மக்களுக்கு அரசு கடந்த மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் காவல்துறையின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்றெல்லாம் அறிக்கை வெளியிடப்பட்டது, மக்கள் பசி தீர்க்க கரம் நீட்டியவர்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் மக்கள் இன்னும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் தன்னார்வலர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து சில தன்னார்வலர்களிடம் பேசினோம்.

தன்னார்வலர் சிவசண்முகம்
தன்னார்வலர் சிவசண்முகம்

``சாப்பாட்டுக்கே பல மக்கள் சிரமப்பட்டுட்டு இருக்காங்க. அரசு உதவிகள் செய்யலனு யாருமே சொல்லல. ஆனா, அரசு கொடுத்த அரிசி பருப்பு போதுமானதாக இல்லைனுதான் சொல்றாங்க" என்று பேசத் தொடங்கினார், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காருக்காவூரைச் சேர்ந்த தன்னார்வலர் சிவசண்முகம்.

``குழந்தைகளை வெச்சுகிட்டு ஒவ்வொருத்தரும் பாலுக்கும், சாப்பாட்டுக்கும் யாராவது உதவமாட்டாங்களானு காத்துக்கிடப்பதெல்லாம் ரொம்ப கொடுமையான விஷயம். இந்தச் சூழலில் அவங்களுக்கு உதவக்கூடிய தன்னார்வலர்களுக்கும் அரசு, கட்டுப்பாடு விதிச்சா அந்த மக்கள் என்னதான் பண்ணுவாங்க? அந்த மக்களோட கண்ணீரை நேரில் பார்த்த யாராலும் எனக்கென்ன, நான் பாதுகாப்பா இருந்தாபோதும், இந்தச் சமூகம் எப்படியும் போகுதுனு வீட்டில் இருக்கமாட்டாங்க. கொரோனா பத்தி எதுவுமே தெரியாத குழந்தைகிட்டபோயி பசியை அடக்கிக்கோனு சொல்ல முடியுமா சொல்லுங்க. அதான் காவல் துறையில் அனுமதி பெற்று தொடர்ந்து உதவிக்கிட்டு இருக்கேன். மனநலம் குன்றியவர்கள், வாழ்வாதாரம் இழந்த சலவைத் தொழிலாளி, டெய்லர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், சவரத் தொழிலாளிகளின் குடும்பங்கள், பூம்பூம் மாட்டுக்கார குடும்பம் என யாரெல்லாம் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்காங்களோ அவங்களை தேடிச்சென்று உதவிட்டு இருக்கேன். இதுக்காக தினமும் 60ல இருந்து 80 கிலோ மீட்டர் வரை வண்டியிலேயே பயணம் செய்றேன். எல்லோருக்கும் அரிசி, பருப்புனு வாங்கிக் கொடுக்காம யாருக்கு என்ன தேவையோ அதை வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன். இதுவரை 400 குடும்பங்களுக்கு மேல் அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், கபசுரக் குடிநீர், தண்ணீர் பாட்டில்கள், வெள்ளரிக்காய், என அவரவரின் தேவைக்கு ஏற்ப உதவிக்கிட்டு இருக்கேன். இது என்னோட தனிப்பட்ட முயற்சி இல்ல. நிறைய பேர் எனக்கு நிதி கொடுத்து உதவிக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு வாரமும் எனக்கு நிதி அனுப்பியவர்களின் விவரம், அதற்கு வாங்கிய பொருள்களின், விலை எல்லாவற்றையும் சமூகவலைதளங்களில் ஷேர் பண்ணுவதால் நிறைய பேர் என்னை நம்பி உதவிப்பணம் கொடுத்துட்டு இருக்காங்க.

மற்ற நேரங்களைவிட இந்த ஊரடங்கு நேரத்தில் உதவுவதுதான் அவசியம். ஆனால், அதில் நிறைய சிக்கல்களும் இருக்கு. பொருள்கள் எல்லாம் விலை ஏறிப்போச்சு. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை வெச்சு விக்கிறாங்க. விலை விசாரிச்சு வாங்க முடியல. முதல் நாள் 4,500 ரூபாய்க்கு வாங்கிய பொருள்கள், மறுநாள் வேறு கடையில் வாங்கும்போது 3800 ரூபாய்னு கொடுக்குறாங்க. மக்கள் பசியில் சாகக் கிடக்குற நேரத்துலையும், வியாபாரிகள் அதிக விலை வெச்சு விற்பதுதான் வேதனையா இருக்கு. சரியான விலையில் பொருள்களைக் கொடுத்தால், உதவி இன்னும் அதிக மக்களுக்கு கிடைக்கும். அது வியாபாரிகளுக்குப் புரியுறது இல்ல. அது மட்டுமல்ல பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கு. அரிசியெல்லாம் ஒரு டன் வேண்டும் என ஆர்டர் கொடுத்து, சில நாள்கள் காத்திருந்து வாங்கிட்டு இருக்கேன். ஏரியாவாரியாக உதவி செய்யாமல் யாருக்கு உண்மையில் உதவிகள் தேவைப்படுதோ அவங்களுக்கு கொடுப்பதால் ஒரு திருப்தியும் இருக்கு. எங்களுக்குக் குழந்தை பிறந்து 75 நாள்தான் ஆகுது. ஆனால், வெளியில் போயிட்டு வர்றதால் என்னை நானே தனிமைப்படுத்திகிட்டேன். என் குழந்தையைத் தூக்கி 45 நாள் ஆகுது. கொரோனா தொற்று வியாதி என்பதால் உதவுவோரிடம் இருந்து உதவி வாங்குவோருக்கும், உதவி வாங்குவோரிடம் இருந்து உதவி செய்பவர்களுக்கும் பரவாமல் இருக்க, பாதுக்காப்பாக இருப்பது அவசியம்" என்று விடை பெறுகிறார்.

புவி நண்பர்கள் குழு
புவி நண்பர்கள் குழு

ஊரடங்கு அறிவிச்ச நாளிலிருந்து, 40 நாளுக்கு மேலாக தினமும் 80 ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் புவி நண்பர்கள் குழுவைச் சேர்ந்த விஜயபாபுவிடம் பேசினேன். ``எங்க நண்பர்களோட இணைந்து கஜா புயல் ஏற்பட்டபோது நேரடியாக மக்களைச் சந்திச்சு உதவிகள் பண்ணோம். இந்தக் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து ஆதரவற்றவர்கள் நிறைய பேர் உணவுக்கு சிரமப்படுவதைப் பார்க்க முடிஞ்சுது. அதனால், நானும் என் நண்பர்களும் ஒன்றாக இணைஞ்சு நாங்களே உணவு தயாரித்து தினமும் 80 பேருக்கு கொடுத்துட்டு இருந்தோம். அதற்கு அரசாங்கத்தில் அனுமதியும் வாங்கியிருந்தோம். முதலில் எங்க கையில இருந்த பணத்தை வெச்சுதான் உதவ ஆரம்பிச்சோம். அது ஒரு வாரத்துக்குத்தான் கைகொடுத்துச்சு. அடுத்தடுத்த நாளுக்கு உதவி செய்ய என்ன பண்றது வழி தெரியாம நின்னப்போ என் நண்பர்கள் நிறைய பேர் பணம் கொடுத்தாங்க. அதில் பொருள்கள் வாங்கி சமைச்சு கொடுத்துட்டு இருந்தோம்.

பொருள்கள் விலையேற்றம், ஒரு பொருள் வாங்க மணிக்கணக்கில் காத்துக்கிடப்பது, கேஸ் கிடைப்பதில் சிக்கல்னு அன்றாடம் நிறைய சவால்களைச் சந்திச்சோம். நாங்களே சமைப்பதால் உடல் உழைப்பும் அதிகம். சாதம் வடிப்பது, பேக்கிங் பண்ணுவது, பொருள்கள் வாங்குவது, பாத்திரஙகள் தேய்ப்பதுனு ஆளுக்கு ஒரு வேலையைப் பிரிச்சுப்போம். ஆனா, அந்தக் கஷ்டம் எல்லாம் சாப்பாட்டை வாங்கும்போது அவங்க முகத்தில் இருக்க சிரிப்பு மறக்கடிச்சிடும். 40 நாள் இடைவிடாமல் செஞ்சுட்டு இருந்தோம். ஆனா, எங்களோட நண்பர்கள் இருக்க பகுதியை லாக்டெளன் பண்ணிட்டாங்க. அதனால் அவர்களால் அவங்க ஏறியால இருந்து வெளியவரமுடியாத சூழல். மீதி இருக்கும் மூன்று பேரால் அத்தனை வேலைகளையும் எடுத்து செய்ய முடியல. அதனால் வேற வழியே இல்லாம உணவுப் பொட்டலங்கள் கொடுப்பதை நிறுத்திட்டோம். அரசு தன்னார்வலர்கள் உதவ நிறைய கட்டுப்பாடுகள் விதிச்சதால ஏற்கெனவே உதவி செய்துட்டு இருந்த சிலர் அவங்க செய்துட்டு இருந்த உதவிகளை நிறுத்திட்டாங்க.

கொரோனா ஊரடங்கு , உயிரை பணயம் வைத்து, களத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? #NGO #LockDown

Posted by Vikatan EMagazine on Thursday, April 30, 2020

என் நண்பர்கள் மூலமாக அன்றாட வாழ்வாதரங்களை இழந்து, சிரமப்படும் மக்களின் தகவலைச் சேகரிச்சு அவர்களுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கத் திட்டமிட்டோம். இப்போ கையில் இருந்த காசை வெச்சு 30 குடும்பங்களுக்கு 12 நாளுக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுத்திருக்கோம். அடுத்தகட்ட உதவிக்கும் திட்டமிட்டுட்டு இருக்கோம். தினமும் வெளியில் போயி மக்களைச் சந்திப்பதால் எங்கள் பகுதியில் குடியிருக்கும் நிறைய பேர் எங்ககிட்ட பேசுறதுகூட இல்ல. எல்லாருடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதால் அதை நான் பெரிசா எடுத்துக்கிறது இல்ல. மக்களை நேசிப்போம். காலம் மாறும்" என்று விடைபெறுகிறார்.

ஈரோட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் லோகநாதன். மாற்றுத்திறனாளியான இவர், அரசின் தன்னார்வலராக தன்னை இணைத்துக்கொண்டவர். தினமும் தன்னுடைய கிராமத்திலிருந்து 26 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து 45 குடும்பங்களுக்கு வீடுவீடாகச் சென்று அங்கு யாரேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்களா என்பதைக் கணக்கெடுக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார். அவரிடம் பேசியபோது, ``ஆசிரியர்கள் தன்னார்வலராக தங்களை இணைச்சுக்கலாம்னு சொன்னதும் எங்கள் பள்ளியின் வழியாக நான் என்னை இணைச்சுக்கிட்டேன். அதுமட்டுமல்ல என் குடும்பத்தின் உதவியோட தினமும் 200 பேருக்கு சாப்பாடு செய்து கொடுத்துட்டு இருக்கோம். நான் கணக்கெடுக்கும் பகுதியில் உள்ள மக்கள், ஆரம்ப சுகாதார அலுவலர் ஒருவர், அரசாங்க மருத்துவருடன் சேர்த்து இரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சிருக்கேன். சர்க்கரை வியாதி, ப்ரஷர் மாத்திரை வேண்டும் என்பவர்கள் எல்லாம் அந்த குரூப்லேயே பதிவிடுவாங்க. மேலும் குழந்தைகளுக்கு, கர்ப்பிணிக்கு தடுப்பூசி போடுவதெல்லாம் அந்த குரூப்பிலேயே மக்கள் பதிவிடுவதால் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனே உடனே கிடைக்கிறது.

ஆசிரியர் லோகநாதன்
ஆசிரியர் லோகநாதன்

தினமும் காலையில் 7 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பிருவேன். எங்களுக்கு பத்து மாதக் குழந்தை இருக்கு. வெளியிடங்களுக்கு நான் போவதால் குழந்தையைத் தூக்குறதே இல்ல. நான் மாற்றுத்திறனாளி என்பதால் வண்டியிலேயே உட்கார்ந்துதான் கணக்கெடுப்பேன். வீடுவீடாக போய் கணக்கெடுக்கும்போது, உங்களுக்கு இதுக்கு சம்பளமா? அதான் காலையிலேயே நோட்டை தூக்கிட்டு வந்துருங்களானு மக்கள் காயப்படுத்துறாங்க. சிலர் கணக்கெடுப்பு எடுக்கிறதுக்குப் பதிலா ஒருநேர சாப்பாட்டுக்கு வழி சொல்லுங்கனு சொல்வாங்க. இதெல்லாம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், வாழ்வாதராத்தை இழந்து நிக்கிற விரக்தியில பேசுறாங்கனு நான் அமைதியா வந்துருவேன். மக்களுக்குப் பசிபயம்தான் இருக்கே தவிர, கொரோனா குறித்தெல்லாம் எந்த பயமும் இல்ல. இப்போ ஊரடங்கை தளர்த்துனாகூட எல்லாரும் சகஜமா இருக்க ஆரம்பிச்சுருவாங்க. மாஸ்க் போடுங்க, கைகளைக் கழுவாங்கனு சொல்றதெல்லாம் நிறைய மக்களுக்குப் புரியுறது இல்ல. உண்மையில் சில மக்கள் விழிப்புணர்வு இல்லாம இருக்கிறதுதான் கொரோனா சமூகப் பரவலுக்கு காரணமா இருக்கு. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் கொரோனா வைரஸ் நமக்கும் பரவிரும் என்பதுதான் எனக்காக பயமே தவிர, மக்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை செய்வதில் முழு மன திருப்தி" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு